Home » பாரதியார் » பாரதியார் – 25
பாரதியார் – 25

பாரதியார் – 25

மிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிக ளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17  ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி, ‘பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். பாரதி என்றால் சரஸ்வதி!

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். ஆன்மிக வழிகாட்டி, அரவிந்தர். பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படு வார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். ‘என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். ‘பூணூலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

”மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்” என்று இவர் சொன்னபோது, ”கூட்டத்தை மறுநாளுக்கு மாற்ற முடியுமா?” என்று கேட்டார் காந்தி. ”அது முடியாது. ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி” என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதி யைப் பார்த்துக்கொண்டே இருந் தார் காந்தி. ”இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்” என்று அரு கில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலை யில் அழைத்துச் செல்வார். ‘பைத்தியங்கள் உலவப் போகின் றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். போலீஸ் விசாரணையின்போது, ‘நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?’ என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது. தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந் தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘கோயில் யானை’ என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

‘ஆப்கன் மன்னன் அமா னுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20-க்கும் குறைவானவர்களே!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top