Home » படித்ததில் பிடித்தது » குதம்பை சித்தர்!!!
குதம்பை சித்தர்!!!

குதம்பை சித்தர்!!!

அம்மா! உடலைக் கட்டுப்படுத்தி வைக்க வெண்காயம் (பால் காயம்) இருக்கிறது. மிளகு இருக்கிறது, சுக்கு இருக்கிறது. இவற்றைக் கலந்து மருந்தாக்கி உட்கொண்டால், ஒரு பெண்ணின் காயம் (உடல்) நமக்கு எதற்கு தேவைப்படப் போகிறது? பெண் இன்பத்தால் சித்திக்காத மன இன்பம் இந்த மருந்தால் சித்திக்காதோ, என்று கேட்டார் குதம்பைச் சித்தர். குதம்பை என்றால் என்ன? காதிலே அணியும் ஒரு வகை தொங்கட்டான் போன்ற அணிகலன். இவர் தஞ்சாவூர் பக்கம் பிறந்திருக்க வேண்டும். பிறந்த ஊர் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர் யாதவர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும்,  பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது. இவரது அன்னைக்கு தன் குழந்தை மீது மிகுந்த பாசம். ஆண்குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தை போல் அதிக அழகு. அந்த அழகை மிகைப்படுத்த குழந்தையின் காதிலே ஒரு தொங்கட்டான் அணிவித்தாள் அந்த புண்ணியவதி. அது ஆடும் அழகைப் பார்த்து குழந்தையிடம் மனதைப் பறி கொடுப்பாள். அந்த அணிகலனின் பெயரால் குதம்பை என்றே மகனை அழைக்க ஆரம்பித்து விட்டாள். அவரது பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. கணநேரம் கூட குழந்தையைப் பிரியமாட்டாள். அப்படி ஒரு பேரன்பு! மகனுக்கு 16 வயதானது. அதுவரை அம்மா பிள்ளையாகத்தான் இருந்தார் குதம்பையார். ஒருநாள், ஒரு சித்தரை அவர் சந்தித்தார். குழந்தாய் குதம்பை! நீ சாதிக்கப் பிறந்தவன். உனக்கு உன் தாய் திருமணம் முடிக்க இருக்கிறாள். ஆனால், அது நடக்காது. காரணம், நீ கடந்த பிறவியில் ஒரு காட்டில் இறை தரிசனம் வேண்டி தவமிருந்து வந்தாய். ஆனால், இறைவனைக் காணமுடியாத படி விதி தடுத்து விட்டது. உன் ஆயுளுக்கு குறிக்கப்பட்ட நேரத்தில், நீ எந்த காட்டில் தங்கியிருந்தாயோ, அங்கே ஒருநாள் பெரும் புயலடித்தது. ஒரு மரத்தின் அடியில் தவநிலையில் இருந்தபடியே நீ உயிர் விட்டாய். விட்ட தவத்தை தொடரவே, நீ பிறந்திருக்கிறாய். தவம் என்றால் என்ன தெரியுமா? என்றவர், தவத்தின் மேன்மை, யோக சாதனைகள் பற்றி குதம்பையாருக்கு எடுத்துச் சொன்னார்.

குதம்பையார் மிகுந்த பணிவுடன் அவற்றையெல்லாம் கேட்டு, தன்னை ஆசிர்வதித்து, இப்பிறவியிலும் தவம் தொடர ஆசி வேண்டினார். அந்த சித்தர் அவருக்கு ஆசியளித்து மறைந்தார். அவரையே தன் குருவாக ஏற்ற குதம்பையார், அவர் சென்ற திசையை நோக்கி வணங்கி விட்டு தாயாரிடம் சென்றார். அம்மா அவருக்கு பல இடங்களில் பெண் பார்த்து வைத்திருந்தார். மகனே! அவள் அழகில் ரம்பை, இவள் ஊர்வசி, இவள் அடக்கத்தில் அருந்ததி…இப்படி பல புராணப் பாத்திரங்களை தன் வருங்கால மருமகள்களுக்கு உதாரணமாக காட்டினார். அப்போது தான் இந்தக் கதையின் துவக்கத்தில் வந்த வரிகளை அம்மாவிடம் சொன்னார் குதம்பையார். அம்மாவுக்கு அதிர்ச்சி. என்னடா! சித்தன் போல் பேசுகிறாயே! இல்லறமே துறவறத்தை விட மேலானது. உன்னைப் பெற்றதால் நான் மகிழ்ந்தேன். நீ பெறும் குழந்தைகளாலும் நான் மகிழ வேண்டும். ஒரு தாயின் நியாயமான ஆசை இது. அதை நிறைவேற்றி வை, அம்மாவின் கண்ணீர் குதம்பையாரை வருந்தச் செய்யவில்லை. அவரது எண்ணமெல்லாம், முந்தைய பிறவியின் தொடர்ச்சியாக தவம் செய்வதிலேயே இருந்தது. அன்றிரவு அம்மாவும், அப்பாவும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். குதம்பையார் கதவைத் திறந்து வெளியே வந்தார். சந்திர ஒளியில் மிக வேகமாக நடந்தார். மனதின் வேகத்தை விட அதிக வேகம் அது! அந்த வேகத்துடன் சென்றவர் காட்டில் போய் தான் நின்றார். பூர்வஜென்மத்தில் அவர் மீது சாய்ந்த மரம் இருந்த பகுதி அது. ஆனால், குதம்பையாருக்கு அது தெரியவில்லை. அங்கு நின்ற அத்தி மரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அதற்குள் குதம்பையார் அமர்ந்தார். ஒருவேளை, தாய் தந்தை காட்டுக் குள் தேடி வந்து நம் தவத்தைக் கலைத்து அழைத்துச் சென்று விட்டால் என்னாவது என்ற முன்னெச்சரிக்கையால் இப்படி செய்தார். தவம்… தவம்… தவம்… எத்தனையோ ஆண்டுகள் உணவில்லை, கண்கள் மூடவில்லை. இறைவனின் சிந்தனையுடன் இருந்தார். இறைவா! உன்னை நேரில் கண்டாக வேண்டும், என்னைக் காண வா! அல்லது உன் இருப்பிடத்திற்கு கூட்டிச்செல். ஏ பரந்தாமா! எங்கிருக்கிறாய்! கோபாலா வா வா வா, இது மட்டுமே மனக்கூட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது பரந்தாமன் உருவமற்ற நிலையில் அசரீரியாக ஒலித்தான்.

குதம்பை! நீ இப்போது வைகுண்டம் வர வேண்டாம். உன்னால் இந்த உலகத்துக்கு இன்னும் நன்மைகள் நடக்க வேண்டியிருக்கிறது. நீ இப்போது இருப்பது விந்திய மலைப்பகுதியில். இங்கே பல யானைகள் இருக்கின்றன. இந்த யானைகளுக்கு மந்திரங்களை ஈர்க்கும் சக்தியுண்டு. உனக்கு மழை பெய்வதற்குரிய வருண மந்திரத்தை உபதேசிக்கிறேன்.  இந்த மந்திரத்தை இங்குள்ள யானைகளின் காதில் விழும்படியாக நீ உச்சாடனம் செய். அவை பிளிறும்போது அந்த ஓசை மந்திரமாக வெளிப்படும். அப்போது பூமியில் அமுதம் போல் மழை கொட்டும். அந்த மழையால் உலகம் செழிப்படையும். என்றான். குதம்பையாருக்கு வருணமந்திரமும் உபதேசிக்கப்பட்டது. குதம்பையாரும் காட்டில் இருந்தபடியே அதை உச்சாடனம் செய்தார். மழை பொழிந்து காடு செழித்தது. யார் வாசியோகம் என்ற  கலையைப் பயின்று, ஆழ்ந்த நிலையில் இறைவனை வணங்குகிறாரோ, அவர்களெல்லாம் குதம்பைச் சித்தரை மானசீக குருவாக ஏற்று மழை வேண்டி வணங்கினால், இன்றும் மழை பெய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது. யோக வித்வான்கள் வாசியோகம் (பிராணாயாமம் போன்றது) பற்றி இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து அதன் மூலம் எதிர் காலத்தில் தண்ணீர் கஷ்டமின்றி வாழ ஏற்பாடு செய்ய வேண்டும்.இந்த அரிய வரத்தை நமக்கு அருளும் குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தியடைந்தார். மயிலாடுதுறை மாயூரநாதர்கோயிலில் சிவன்சன்னதி சுற்றுப்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி அருகில் குதம்பை சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இங்கு இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. மழை வேண்டி இவருக்கு விசேஷ பூஜை செய்தால், பெய்யெனப் பெய்யும் மழை!

தியானச் செய்யுள்:

சூலம் ஏந்திய சுந்தர மூர்த்தியே
அத்திமரம் அமர்ந்து
ஆயசித்தி அனைத்தும் பெற்ற சத்திய சித்தரே
கும்பிட்ட எமக்கு நம்பிக்கையுடன்
நல்லாசி தருவாய் குதம்பை பெருமானே

காலம்: குதம்பை முனிவர் ஆடி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 1800 ஆண்டுகள் 16 நாள் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top