Home » படித்ததில் பிடித்தது » காலாங்கிநாதர்!!!
காலாங்கிநாதர்!!!

காலாங்கிநாதர்!!!

திருமூலர் திகைத்தார். இங்கே இருந்த நம் சீடன் காலாங்கி எங்கே போய் தொலைந்தான்? அதோ, அங்கே ஒரு இளைஞன் நிற்கிறான்! அவனிடம் கேட்டால், விஷயம் தெரியும்! என சிந்தித்தவராய், தம்பி! இங்கே ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்ததை பார்த்தாயா? என்றார். அந்த இளைஞர் திருமூலரின் பாதங்களில் அப்படியே விழுந்தார். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. குருவே! மன்னிக்க வேண்டும். நான் தான் உங்கள் சீடன் காலாங்கி. நடுத்தர வயது தோற்றத்தில் இருந்தவன் தான், இப்போது இப்படி இளைஞனாகி விட்டேன், என்று அரற்றினான்.திருமூலர் ஆச்சரியத்துடன், காலாங்கி!இதென்ன விந்தை! இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? உன்னை சமைக்கத்தானே சொன்னேன். அதை விட்டுவிட்டு, நீ என்ன செய்தாய்? என்றார். குருவே! தங்கள் உத்தரவுப்படி நான் சமைக்கவே செய்தேன். சோறு பாத்திரத்தின் அடியில் பிடித்து விடக்கூடாதே என்பதற்காக, ஒரு மரத்தின் குச்சியை ஒடித்து கிளறினேன். அவ்வளவு தான்! சோறு கருப்பாகி விட்டது. தாங்கள் வந்தால் அரிசியை பாழாக்கி விட்டாயே மடையா என திட்டுவீர்கள் இல்லையா? அதற்கு பயந்து, சோறை வெளியில் கொட்டவும் தயங்கி, அதை சாப்பிட்டு விட்டேன். அடுத்த கணமே என் முதுமை மறைந்தது. நான் இளம்பிள்ளையாகி விட்டேன், என்றார் காலாங்கி.திருமூலருக்கு ஆச்சரியத்துடன் கோபமும் வந்தது.சோறு என்ன ஆனாலும், என்னிடமல்லவா சொல்லியிருக்க வேண்டும். உண்மையை மறைப்பதற்காக அதை சாப்பிட்டிருக்கிறாய். குருவிடம் சீடன் எதையும் மறைக்க நினைப்பது பாவம். இந்த பாவத்திற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள், என சொல்லி விட்டு அங்கிருந்து அகல முயன்றார். காலாங்கி, திருமூலரின் காலைப் பிடித்தார்.

குருவே! இந்த சிறுவனை மன்னியுங்கள். என்னை பிரிந்து சென்றுவிட்டால், நான் உயிர் தரிக்கமாட்டேன். சற்று பொறுங்கள். உங்கள் முன்னாலேயே என் தவறுக்கு பரிகாரம் தேடிக்கொள்கிறேன், என்றவர் தொண்டைக்குள் விரலை விட்டார். சாப்பிட்ட சோறை வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த திருமூலர், அவர் வாந்தியெடுத்ததை எடுத்து அப்படியே சாப்பிட்டு விட்டார். அடுத்த கணமே அவரும் இளைஞராகி விட்டார். காலாங்கிநாதரும் இளமை மாறாமல் அப்படியே இருந்தார். வயதில் முதியவர்களாக இருந்தாலும், வாலிப முறுக்கைப் பெற்ற இவர்கள் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் தங்கியிருந்தனர். திருமூலரின் காலத்துக்கு பிறகு, அங்கிருந்து புறப்பட்டு, மதுரை அருகில் ஏராளமான சித்தர்கள் வசித்த சதுரகிரி மலைக்குச் சென்றார் காலாங்கி.அந்த மலையில் ஒரு சிவாலயம் கட்டும் பணியில் வணிகர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். மிக உயரமான, மனிதர்கள் மிக எளிதில் நுழைய முடியாத காட்டுப்பகுதியில் கோயிலைக் கட்டி வந்ததால், அவர் கையில் இருந்த பணமெல்லாம் தீர்ந்து விட்டது. யாரிடமாவது உதவி பெற்று கோயில் பணியை முடிக்க வணிகர் முடிவு செய்திருந்தார். இந்நேரத்தில் காலாங்கிசித்தர் அங்கு வரவே, அவரிடம், சுவாமி! தாங்கள் தான் இந்தக் கோயிலை கட்டி முடிக்க செல்வத்தை தந்தருள வேண்டும், என்றார். காலாங்கியோ துறவி. அவரிடம் ஏது பணம்? அவர் அந்த வணிகரிடம், நான் அருட்செல்வத்தை தேடி அலைபவன். மக்கள் நன்றாக வாழ அவர்களின் கர்மவினைகளை ஏற்று, என்னை வருத்திக் கொள்ளவே இங்கு வந்துள்ளேன், என்றார். வணிகரோ விடவில்லை. அவருடனேயே தங்கி அவருக்கு பல சேவைகள் செய்து வந்தார். அந்த வணிகரின் குரு பக்தியையும், கோயில் கட்ட வேண்டும் என்ற மனஉறுதியையும் மெச்சிய காலாங்கிநாதர், அந்த மலையில் கிடைத்த பலவித மூலிகைகளை பறித்து வந்தார். அவற்றில் இருந்து தைலம் தயாரித்தார். அந்த தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்தார். அதில் கோயில் கட்ட தேவையான அளவு வணிகருக்கு கொடுத்தார். மீதி தங்கம் ஏராளமாக இருந்தது.

ஒரு பெரிய பள்ளத்தில் அதைப் போட்டு மூடி, பெரும்பாறை ஒன்றால் மூடிவிட்டார். கெட்டவர்களின் கையில் அது கிடைத்தால், அதை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் அப்படி செய்தார். மேலும் அந்தப் பாறையை சுற்றி காளி, கருப்பண்ணன், வராஹி, பேச்சியம்மன் என்ற காவல் தெய்வங்களை பிரதிஷ்டை செய்து அந்தப் பொன்னை பாதுகாக்கச் செய்தார். பழநியில் முருகனுக்கு சிலை செய்த போகர் இவரது சீடர்களில் ஒருவர். சதுரகிரி மலையில் பல சித்தர்களை அவர் கண்டார். இந்த சித்தர் காற்றைப் போன்றவர் என்பதால் பறக்கும் சக்தி பெற்றிருந்தார் என்கிறார்கள். இதைப் பயன்படுத்தி அடிக்கடி சீனா சென்று வந்துள்ளார். இவர் அங்கேயே சமாதி அடைந்ததாக ஒரு தகவல் இருக்கிறது.இன்னும் சிலர், தான் தன் குருவுடன் வசித்த கஞ்சமலையில் இரும்புத்தாதுவாக மாறி அங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்கிறார்கள். இப்போதும் கஞ்சமலையில் லிங்கவடிவில் அருள் செய்வதால், இந்த லிங்கத்தை சித்தேஸ்வரர் என்கின்றனர். அமாவாசை அன்று இவரை தரிசிப்பது விசேஷம். கஞ்சமலையை பவுர்ணமியன்று மாலையில் கிரிவலமும் வருகின்றனர். இம்மலையிலுள்ள மூலிகை காற்று பல நோய்களை தீர்ப்பதாக பக்தர்கள் சொல்கிறார்கள். இம்மலையின் சுற்றளவு 18 கி.மீ.,பிரம்மலோகத்திற்கே இவர் சென்று விட்டதாகவும் சொல்கின்றனர். அந்த லோகத்தில், ஒரு வில்வமரத்தூண் இருக்கிறது. இதை காலங்கி நாதர் கால் என்பர். இந்த தூணில் அவர் உறைந்திருப்பதாகவும், பிரம்மனை வழிபடுபவர்களுக்கு காலாங்கிநாத சித்தரின் அருள் கிடைக்குமென்றும், அவர்களின் தலைவிதி மாற்றப்பட்டு ஆயுள் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள்.இன்னும் சில நூல்களில், இவர் காஞ்சிபுரத்தில் சமாதி அடைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.காலாங்கி முனிவர் காலத்தை வென்றவர். ஒருமுறை உலகமே தண்ணீரால் அழிந்த வேளையில், இவர் மேருமலையில் ஏறி அங்கிருந்த சித்தர்களுக்கு காயகல்ப வித்தைகள் பலவற்றை சொல்லிக் கொடுத்திருக்கிறார். இவரை வணங்குபவர்களுக்கு கோபம் கட்டுப்படும். திறமைசாலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top