புளியமரம்!!!

புளியமரம்!!!

புளியின் பயன்கள்

நாம் உபயோகிக்கும் புளியைத் தரும் புளியமரம் முதன் முதலாக ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால், தொன்று தொட்டு இந்தியாவில் உபயோகப்பட்டு வருவதால் இந்தியாவிலேயே தோன்றியதாக, கருதப்படுகிறது. புளியமரம் பெரியதாக வளரும் மரங்களில் ஒன்று. பசுமையான மரம் 80 அடி உயரம் வரை வளரும் அதனை சுற்றி 30-35 அடி விட்டத்துக்கு பரவும் கிளைகளுடைய பெரிய மரம்.

விஞ்ஞான ரீதியாக Leguminosae (Fabaceae) குடும்பத்தை சேர்ந்த Tamarindus indica ‘L’ என்று குறிப்பிடப்படுகிறது. உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு வளரும் புளியமரம், குளிரைத் தாங்காது. ஆனால் கடற்கரை ஓரங்களில் கூட வளரும்.
அதிகமான கவனிப்பும் தேவையில்லை. சிறு செடிகளாக இருக்கும் போது உரங்கள் தேவை. விதையை நட்டு உருவாகும் புளிய மரங்கள் 6-8 வருடங்களில் பலன் தரும். செடியாக நடப்பட்ட மரங்கள் காய்க்க 3-4 வருடங்கள் போதும். மெதுவாக வளரும் புளியமரம் அதிக ஆயுள் உள்ளது.
தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பரவலாக காணப்படும் புளியமரங்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் ஓங்கி வளர்ந்து நிழல் தருகின்றன. நன்கு வளர்ந்த புளியமரம், ஒரு வருடத்திற்கு 160 கிலோ வரை புளியை சராசரியாக தரும்.
சமையலில் புளியின் உபயோகம்
நாம் புளி என்று வழக்கமாக சொல்வது புளியம் பழத்தைத்தான். புளியில் கால்சியம், வைட்டமின் ‘பி’ நிறைந்துள்ளது. தவிர பாஸ்பரஸ், இரும்பு போன்றவைகளும் உண்டு. உணவில் மணமூட்டவும், சுவை ஊட்டவும் புளி பயன்படுகிறது. புளி தென்னிந்தியாவின் ஆதார உணவுகளில் ஒன்று.
புளி மட்டுமல்ல, கொழுந்து, புளி இலைகளும் சமைக்கப்பட்டு உண்ணப்படுகின்றன. ஆப்பிரிக்க தேச ஜிம்பாப்வேயில் இலைகள் சூப்பிலும், பூக்கள் சலாட்களிலும் உபயோகப்படுகின்றன.
புளியங்கொட்டைகள்
இவற்றில் 63% மாவுப்பொருட்களும், 14-18% ஆல்புமினும், 4.5-6.5% பாதி உலரும் எண்ணெய்யும் இருக்கின்றன. வறுக்கப்பட்ட கொட்டை, காப்பிக் கொட்டைகளுக்கு பதிலாக கலப்படம் செய்யப்படுகிறது.
புளியின் மருத்துவ குணங்கள்
புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது. பிலிப்பைன்ஸில் இலைகள் ‘டீ’ யாக தயாரிக்கப்பட்டு, ஜுரம் தணிய உபயோகப்படுகிறது. ஆயுர் வேதத்தில் வயிறு, ஜீரணக்கோளாறுகளுக்கு புளி பயன்படுகிறது.
அமெரிக்கா மருந்துகள் தயாரிக்க வருடத்தில் 90,000 கிலோ புளியை இறக்குமதி செய்கிறது. புளி சூட்டைத் தணிக்கும். புளி நீரில் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இளம் சூட்டில் பற்றுப்போட ரத்தக் கட்டுகள் கரையும்.
புளியந் தண்ணீரை கொப்பளித்தால் வாய்ப்புண்கள் குறையும். புளியுடன் சுண்ணாம்பு கலந்து குழப்பி சூட்டோடு தேள் கொட்டிய இடத்தில் போட, தேள் விஷம் இறங்கும். புளியங்கொட்டை பருப்பை இடித்து பொடியாக்கி, பசும்பாலில் அரைக்கரண்டி தூளைபோட்டு கற்கண்டு கலந்து குடித்து வர தாதுவிருத்தி உண்டாகும்.
புளியங்கொழுந்துடன் பருப்பு சேர்த்து செய்த கூட்டை சாப்பிட்டு வர உடல் நலம் பெறும். புளியம் பூக்களை துவையலாக அரைத்து உண்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும். புளியம் பூக்களை அரைத்து கண்ணை சுற்றி பற்றுப்போட்டால் கண் வலி, கண் சிவப்பு குணமாகும்.
புளிய மரப்பட்டையும் மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு ‘டானிக்’ புளியமர வேர்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குஷ்டரோகத்திற்கு உபயோகப்படுகின்றன.
தொழிலியல் பயன்கள்
புளியம்பழம் பாத்திரங்களை துலக்க உபயோகிக்கப்படுகிறது. துணிகளுக்கு சாயம் போடுவதில், மஞ்சளுடன் சேர்ந்து புளி உபயோகிக்கப்படுகிறது. பழச்சதையிலிருந்து பெக்டின் (Pectin) எடுக்கலாம்.
பழத்திலிருந்து புளிப்பொடி, புளிச்சத்து, புளி ரசம் தயாரிக்கப்படுகிறது.
புளிக்கொட்டையிலிருந்து பொடி எடுக்கப்பட்டு துணிக்கு மெருகூட்டவும். சணல் நூல் தயாரிப்பிலும் செயற்கை இழைகள் தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரி உபயோகத்திற்கு சோளமாவை விட புளியம் பொடி 300 பங்கு மலிவானதாகவும், மேலானதாகவும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
புளியங்கொட்டை தோலிலிருந்து ‘டானின்’ எடுக்கப்பட்டு தோல் பதனிடல், ஓட்டு பலகை தயாரிப்பில் பயனாகிறது. புளியங்கொட்டை எண்ணெய் வார்னிஷ், பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
புளியமரம் கடினமான பலமான மரம். புழு, பூச்சிகளால் எளிதில் பாதிக்கப்படாதது. எனவே, ஃபர்னிச்சர் (Furniture) தயாரிப்பில் நன்கு உபயோகப்படுகிறது.
புளியை பற்றிய சில நம்பிக்கைகள்
   புளிய மரத்தின் கீழே வேறு செடிகள் வளராது. இரவில் புளி மரத்தின் கீழே படுத்து உறங்குவது கூடாது. ஆடு, மாடுகள், குதிரை இவற்றை இம்மரத்தின் கீழ் கட்டக் கூடாது. புளி அதிகமாக காய்த்தால், மாங்காய் உற்பத்தி குறையும். புளிய மரம் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் சூடாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top