Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » நளதமயந்தி பகுதி-26

நளதமயந்தி பகுதி-26

நெருப்பில்லாமல் சமைக்கிறான் என்றால், அவன் நிச்சயம் தன் கணவன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள் அவள். நெருப்பினால் அவனுக்கு எந்த இடைஞ்சலும் வராது என்ற வரத்தைத் தந்த அதே அக்னி பகவான், நெருப்பின்றியே சமைக்கும் வரத்தையும் அவனுக்கு கொடுத்திருந்தார். இந்த விஷயம் தமயந்திக்குத் தெரியும். தன் தந்தையிடம் ஓடினாள். தந்தையே! இங்கே சமையல்காரராக இருப்பவர் என் கணவர் தான்,  என்று உறுதியாகச் சொன்னாள்.

இதைக்கேட்ட வீமராசன் மனம் பதைத்து சமையலறைக்கு ஓடினான்.நளனிடம்,உண்மையைச் சொல்! நீ யார்? உன் உண்மை உருவைக் காட்டு, என்றான். நளனும் இதற்கு மேல் எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. அவன்,  கார்க்கோடகன் தனக்கு தந்த ஆடையை எடுத்து தன் மேல் போர்த்தினான். பழைய உருவத்தை அடைந்தான். சிவந்த மேனியைப் பெற்றான். இந்த சமயத்தில் அவனைப் பிடித்திருந்த சனிபகவானும், தனது காலத்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்.

நளன் புத்துணர்ச்சி பெற்றான். அவனைக் கண்ட தமயந்தி ஆனந்தக்கண்ணீர் வடித்தாள். தன் மேல் கொண்ட அன்பால், தன்னைக் கண்டுபிடிக்க அவள் எடுத்த முயற்சிகளை நளன் நாதழுக்க கூறி அவளை வாழ்த்திய நளன், காட்டிலே உன்னை விட்டுச்சென்ற இந்தக் கயவனைக் காணப் பிடிக்காமல், உன் விழித்திரைகளை நீர் நிறைத்து மறைக்கிறதா கண்ணே! என நளன் அவளிடம் கேட்டான். அவளோ அவனது பாதங்களில் விழுந்து, இல்லை அன்பரே! உங்களை மீண்டும் காண்போம் என்று நினைக்கவே இல்லை. இது ஆனந்தத்தில் வழியும் கண்ணீர், என்று அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள். குழந்தைகளும் ஓடிவந்து தந்தையை அணைத்துக் கொண்டனர்.

வாழ்க்கையில் மனிதன் நிறைய துன்பங்களை அனுபவிக்க வேண்டும். ஏனெனில், துன்பத்திற்குப் பிறகு வரும் இன்பத்தைத் தான் மனிதன் சுவைத்து அனுபவிக்க முடியும். நளனும், தமயந்தியும்,  குழந்தைகளும் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமா! இப்போது, அவர்கள் இன்பமலையின் உச்சத்தில் இருந்தனர். வீமராசனும், தன் மகளுக்கு மீண்டும் நல்வாழ்வு கிடைத்தது குறித்து மகிழ்ந்தான்.இந்த இன்பக்காட்சி கண்டு தேவர்கள் கூட மகிழ்ந்தார்கள்.

வானில் இருந்து பூமழை பொழிவித்தார்கள். நளனே! உன்னைப் போல் உயர்ந்த குணமுள்ளவர்கள் யாருமில்லை. எந்தச்சூழலிலும் நீ பிறர் உதவியைக் கேட்கவில்லை. ஏன்…உன் மாமனார் வீட்டில் கூட நீ தங்க மறுத்தாய்! கஷ்டங்களை மனமுவந்து அனுபவித்தாய். சனீஸ்வரன் உனக்கு தொல்லை கொடுப்பது தெரிந்தும், நீ ஆத்திரப்படவில்லை. உன்னிலும் உயர்ந்தவன் உலகில் இல்லை, என்று அசரிரீ எழுந்தது.இந்த நேரத்தில் சனீஸ்வரரே அங்கு வந்துவிட்டார்.நளனே! நல்லவனான ஒருவன், பாதை தவறும் நேரத்தில் அவனைச் சீர்படுத்த பல தொல்லைகளைத் தருகிறேன். அதை அனுபவப்பாடமாகக் கொண்டு அனுபவிப்பர்களை மீண்டும் நான் அணுகமாட்டேன்.

நீ நீதிதவறாத ஆட்சி நடத்தினாய் என்றாலும் சூது என்னும் கொடிய செயலுக்கு உடன்பட்டாய். இனி அத்தகைய நினைப்பே உனக்கு தோன்றக்கூடாது என்பதற்கே இத்தனை சோதனைகளையும் அனுபவித்தாய். இருப்பினும், சூதால் தோற்ற நீ போர் தொடுத்து உன் நாட்டைப் பெறுவது முறையல்ல. மன்னர்களுக்குரிய தர்மப்படி மீண்டும் சூதாடியே நாட்டை அடைவாய். உன் மனைவியின் கற்புத்திறனும் உன்னைக் காத்தது, என்றவர்,நீ என்னிடம் என்ன வரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன், என்றார்.

நாமாக இருந்தால் என்ன கேட்டிருப்போம்? அந்த புட்கரனைப் போய் பிடி. அவனிடமிருந்து நாட்டை எனக்கு வாங்கிக் கொடு, என்று தானே! பொதுநலவாதியான நளனோ, அப்போதும், சனீஸ்வரரே! என் சரிதம் இந்த உலகத்துக்கு பாடமாக இருக்கட்டும். என் கதையை யார் ஒருவர் கேட்கிறாரோ, அவரை நீர் பிடிக்கக்கூடாது. அவருக்கு எந்த சோதனையும் தரக்கூடாது, என்றான்.

நளனே! உன் கோரிக்கையை ஏற்கிறேன். உன் கதை கேட்டவர்களை நான் எக்காரணம் கொண்டும் அணுகமாட்டேன், இது சத்தியம், என்ற சனீஸ்வரன் அங்கிருந்து மறைந்து விட்டார்.பின், விதர்ப்பநாட்டரசன் வீமன் தன் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுக்கு விருந்து வைத்தான். அப்போது இருதுபன்னன் வந்தான். நளனே! உன்னை என்னிடம் பணி செய்ய வைத்த காரணத்துக்காக வருந்துகிறேன்.

உன் பணிக்காலத்தில் நான் உன்னிடம் ஏதேனும் கடுமையாகப் பேசியிருந்தால் அதைப் பொறுத்துக் கொள், நான் அயோத்தி கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு போய்விட்டான். இதன்பிறகு, வேலேந்திய வீரர்கள் பின் தொடர, தன் சொந்த நாடான நிடதநாட்டுக்கு கிளம்பினான். புட்கரனுடன் மீண்டும் சூதாடினான். முன்பு சனீஸ்வரரின் அருளால் தான் சூதில் வென்றோம் என்பதைக் கூட மறந்து விட்ட புட்கரன், ஆசையில்  பகடைகளை உருட்ட நாட்டை இழந்தான்.

மீண்டும் ஆட்சிப்பொறுப்பை நளனிடம் ஒப்படைத்து விட்டு, தனது நாட்டுக்கு போய்விட்டான். தன் தலைநகரான மாவிந்தத்தில் இருந்த அரண்மனைக்கு மனைவி, குழந்தைகளுடன் நளன் சென்றான். மக்கள் மீண்டும் நளனை மன்னனாகப் பெற்ற மகிழ்ச்சியில் அவனை வாழ்த்தினர். மக்களின் முகம் மேகத்தைக் கண்ட மயில் போலவும், பார்வையற்றவனுக்கு பார்வை கிடைத்தால் ஏற்படும் பிரகாசம் போலவும் ஆனது. நளனின் இந்த சரித்திரத்தை தர்மபுத்திரருக்கு வியாசமுனிவர் சொல்லி முடித்தார்.

தர்மபுத்திரா! கேட்டாயல்லவா கதையை! நளனின் இந்த துன்பத்தில் நூறில் ஒரு பகுதியைக் கூட நீ அனுபவிக்க வில்லை, அப்படித்தானே! இருப்பினும், சூதால் வரும் கேட்டை தெரிந்து கொண்டாய் அல்லவா! எனவே, நீயும் சூதால் தோற்றது பற்றி வருந்தாதே. உனக்கும் நல்ல நேரம் வரும், என்று சொல்லி விடை பெற்றார். நாமும் நளசரிதம் கேட்ட மகிழ்ச்சியுடன், சனீஸ்வரரின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபடுவோம். நல்ல பழக்கங்களை மேற்கொள்வோம். நல்லதை மட்டுமே சிந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top