Home » பொது » ‘டிஜிட்டல் இந்தியா’வை நடைமுறைப்படுத்துங்கள்!

‘டிஜிட்டல் இந்தியா’வை நடைமுறைப்படுத்துங்கள்!

மத்திய பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறை ஆதார் கார்டு/ வங்கிக் கணக்குடன் காஸ் இணைப்புகளை இணைத்ததால், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.50 கோடி போலி காஸ் இணைப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு சுமார் ரூ.3,900 கோடி மானியத் தொகை மிச்சமாகி இருக்கிறது.

பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறையின் இந்த நடவடிக்கையை மத்திய அரசாங்கம் ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இன்றைக்கு இந்தியாவில் வசிக்கும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் நம் அரசாங்கத்திடம் முழுமையாக இல்லை. ஒருவரே இரண்டு ரேஷன் அட்டையை வைத்திருப்பது, இரண்டு காஸ் இணைப்புகள் வைத்திருப்பது, மாத வருமானத்தை மறைப்பதன் மூலம் ஏழை களுக்குச் சேரவேண்டிய மானியச் சலுகைகளை அனுபவிப்பது, வரி ஏய்ப்பு செய்வது எனப் பலவகையான ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. பொதுமக்கள் குறித்த அனைத்து தகவல்களும் அரசிடம் இருந்தால், நலத் திட்டங்கள் அனைத்தும் தகுதியான மக்களுக்கு சரியாகப் போய்ச் சேருமே! இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகுமே!

 

இந்த வேலைகள் அனைத்தும் நடக்க வேண்டுமெனில் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை மத்திய அரசாங்கம் வேகமாக செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இதை, இந்தியா முழுக்க செயல்படுத்த ரூ.1 லட்சம் கோடி  அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்  தெரிவித்துள்ளது.

 இது மிகப் பெரிய அளவில் செலவு பிடிக்கும் திட்டம்தான். என்றாலும், ஒன்றுக்கு இரண்டு மடங்கு லாபம் குறைந்த காலத்திலேயே கிடைக்கும். இதற்கு மேலே சொன்ன போலி காஸ் இணைப்பே ஒரு மிகச் சிறந்த உதாரணம்.

ஏமாற்றுப் பேர்வழிகளைச் சிக்கவைப்பதற்கு மட்டுமல்ல, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் நடைமுறைக்கு வந்தால், அரசின் அத்தனை சேவைகளையும் இருந்த இடத்தில் இருந்தபடியே மக்கள் பெற முடியும். இதனால் வேலைவாய்ப்பு பெருகி, உற்பத்தித் திறன் அதிகரித்து, இந்தியாவின் ஜிடிபி  வளர்ச்சியடைய உதவும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, கூடிய விரைவில் தாக்கல் ஆகவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் இந்தத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியத்திலும் அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top