கேணிவனம் – 25

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..!

பொழுது விடிந்தது…

லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து… காடு கனவுலோகமாய் காட்சியளித்தது… சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது…

திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்… தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் சென்றாள்…

‘தாஸ் எழுந்திருங்க…?’ என்றெழுப்ப, சந்தோஷூம் இதற்குள் வந்து தாஸை எழுப்ப முயற்சித்தான்…

‘பாஸ்..? எந்திரிங்க பாஸ்.. என்ன நீங்க, ஃபாரஸ்ட்டுக்கு டூர் வந்த மாதிரி தூங்கிட்டீங்க…..’ என்று கூற, தாஸ் மெல்ல கண் திறந்து எழுந்தான். இதற்குள் சக்கரவர்த்தி அங்கே வந்தார்…

‘தாஸ்? இன்னும் 15 நிமிஸம்தான் டைம்… சீக்கிரம் தயாராகுங்க… கிளம்பியாகணும்..’ என்று கூறி விட்டு நகர முயல, லிஷா சற்றே கடுப்புடன் அவனிடம் … ‘நீங்க என்ன எல்லாருக்கு உத்தரவு போட்டுட்டு இருக்கீங்க..? நாங்க என்ன உங்க அடிமைகளா..?’ என்று கோபம் காட்டினாள்…

‘பகல் வெளிச்சத்துல இப்படித்தான் தைரியமா பேச தோணும். நாம வேஸ்ட் பண்ற ஒவ்வொரு விநாடியும் மறுபடியும் ஒரு ராத்திரியை கிட்ட கொண்டுவந்துக்கிட்டிருக்குன்னு மறந்துடாத லிஸா..!’ என்று கூறிவிட்டு, சக்கரவர்த்தி அங்கிருந்து நகர்ந்தார்.

லிஷாவுக்கு அவன் பதில் மேலும் எரிச்சலூட்ட, தாஸ் அவளை சமாதானப்படுத்தினான்.

‘லிஷா, காம் டவுன், அவர் சொல்றது கரெக்ட்தான், நாம சீக்கிரம் கிளம்பி கேணிவனத்தை ரீச் பண்ணியாகனும்…’ என்று கூறியபடி தாஸ் எழுந்து சென்றான்.

டெண்ட்-க்கு வெளியே…

இன்ஸ்பெக்டர் தனது ரேஸர் மெஷினை வைத்துக் கொண்டு, ஷேவ் செய்து கொண்டிருந்தார். சந்தோஷ் அவரை நெருங்கிவந்து…

‘சார், போலீஸா இருந்தா காட்டுக்குள்ள இருக்கும்போதும் தாடி வச்சியிருக்ககூடாதா.. என்ன..?’ என்று கலாய்க்க

‘அப்படியில்ல சந்தோஷ்! பழக்கம் விட்டுப்போயிடக்கூடாது பாரு..! அதான் ரெகுலரா மெஷினை ஓட்டிடுறேன்…’ என்று தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்க…

‘சார் ஒரு சின்ன உதவி..! இன்னிக்கி ஒருநாள் மட்டும், நான் உங்களோட ஷூ-வை போட்டுக்கவா..?’ என்றதும், ரேஸரை நிறுத்திவிட்டு சந்தோஷை இன்ஸ்பெக்டர் குழப்பத்துடன் முறைத்தார்.

‘ஏன்..?’

‘இல்ல! எனக்கு ரொம்ப நாளா போலீஸ் ஷூவை போட்டுக்கிட்டு நடக்கனும்னு ஆசை…’ என்று கேட்க… அவர் சிரித்துக்கொண்டே மீண்டும் ரேஸரை ஓட்டியபடி…

‘அதென்னய்யா அது வித்தியாசமான ஆசை உனக்கு..’ என்று கூற, தூரத்தில் இதைக்கேட்டுக் கொண்டிருக்கும் லிஷாவும் தாஸூம் சிரித்துவிட… சந்தோஷூக்கு அவமானமாக போகிறது. இருந்தாலும், தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அவரிடம் தனது ஆசையை விவரிக்க துவங்கினான்.

‘சின்ன வயசுலருந்தே, காக்கி சட்டை படம் பாத்து போலீஸாகணும்னு நினைச்சிட்டே வளர்ந்தேன். போலீஸ்தான் ஆகமுடியல, அட்லீஸ்ட்ல, போலீஸ் ஷூவையாவது போட்டுக்கிட்டு நடக்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க நம்ம ஃப்ரெண்டுதானேன்னு உரிமையா கேட்டேன். இதுலென்ன சார் தப்பு.. நீங்க இன்னிக்கி ஒரு நாளைக்கு மட்டும் இதோ என்னோட ஷூ-வை போட்டுக்கிட்டு நடங்களேன்…’ என்றபடி மோர் மார்க்கெட்டில் வாங்கிய தனது நிறம் மாறிய கலரிலிருந்த ஷூவை அவரது முகத்துக்கு நேரே காட்டினான்.

இன்ஸ்பெக்டர் வாசு, மெஷினை ஓட்டுயபடியே சற்றே யோசித்துவிட்டு, பிறகு, ‘உனக்கு வேணும்னா போலீஸ் ஷூ போட்டுட்டு நடக்க ஆசையா இருக்கலாம்… ஆனா எனக்கு இந்த இத்துப்போன ஷூவை போட்டுக்கிட்டு நடக்கனும்னு ஆசையில்ல…’ என்று கூறவும், இதற்குமேல் இந்த மனிதனிடம் கெஞ்சி பயனில்லை என்று எண்ணிய சந்தோஷ், தளர்வாக திரும்பி நடக்க, இன்ஸ்பெக்டர் அவனை அழைத்தார்…

‘சந்தோஷ்..! நில்லு..! என் பேக்-ல இன்னொரு ஜோடி ஷூ இருக்கு.. எடுத்துக்க…’ என்று கூற…

‘போலீஸ் ஷூ தானே..?’ என்று அவன் சந்தேகத்துடன் கேட்க, இன்ஸ்பெக்டர் திரும்பி அவனைப் பார்த்து முறைத்துவிட்டு, பிறகு சிரித்தபடி ஆமாம் என்று கூறவும்… சந்தோஷ் மகிழ்ச்சியுடன் சென்று, இன்ஸ்பெக்டர் வாசுவின் பேக்-ஐ திறந்து இன்னொரு ஜோடி ஷூவை தேடிக் கொண்டிருந்தான்.

சக்கரவர்த்தி, எதேச்சையாக அந்தப்பக்கம் வந்தவர், சந்தோஷ் போலீஸ் பேக்-ஐ எடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்ததும் உறைந்து நின்றான்.

‘சந்தோஷ்..! இன்னும் நீங்க தயாராகலியா..?’

‘நான் ரெடிதான் சார்… நீங்க எல்லாரும் கிளம்பும்போது, நான் வரலேன்னா கேளுங்க…’ என்றான்.

‘இன்ஸ்பெக்டரோட பேக்-ல என்ன தேடிக்கிட்டிருக்கீங்க..?’ என்று சக்கரவர்த்தி தொடர்ந்து கேட்க, அவன் சிரித்தபடி, அந்த பேக்-லிருந்து ஒரு ஜோடி ஷூ கொண்ட ப்ளாஸ்டிக் பையை எடுத்து காட்டினான்.

——————————–

பயணம் தொடர்ந்தது…

மழை வந்த பகுதிகள் இப்போது சேற்றுப்பள்ளங்களாக ஆங்காங்கே கால்கள் முழங்கால் வரை புதைய, அனைவரும் நடக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அதிலும், குறிப்பாக ப்ரொஃபஸர் கணேஷ்ராம்-க்கு இந்த பயணம் மிகவும் சிரமமாக இருந்தது. அவரது வயது அவரை தொடர்ந்து பயணிக்கும் அனுமதியை கொஞ்சம் கொஞ்சமாக ரத்து செய்துக்கொண்டிருந்தது…

அவர் மிகுந்த சிரமத்துடன் நடந்து வருவதை அந்த குழுவில் அனைவரும் கவனிக்காமலில்லை…

அவர் மேல்மூச்சும் கீழ்மூச்சும் வாங்கியபடி தள்ளாடிக் கொண்டு பலகீனமடைந்து வருவதை தாஸ் கவனித்தான். ஏன், இந்த மனிதன் இந்த வயதில் இப்படி ஒரு ஆபத்தான பயணத்தில் வந்து கலந்துக்கொள்ள வேண்டும். இவரைப் போன்றவர்கள், அழகாக ஒரு ஈஸி சேரில் படுத்துக் கொண்டு, ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், வரலாற்று நாவல்களையும் படித்து காலம்கழிப்பதை விட்டுவிட்டு, இங்கு வரலாற்று ஆதாரத்தை தேடியலைவதில் என்ன ஒரு தனி நாட்டம். இவரைப் போன்ற வரலாற்று ஆர்வம் எல்லாருக்கும் வாய்க்காது… ஆனால், இது வரமா சாபமா..? நான் இவரது வயதில் என்ன செய்துக் கொண்டிருப்பேன்..? என்று ஏகத்துக்கும் தாஸ் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ப்ரொஃபஸருக்கு என்னதான் மூச்சு வாங்கினாலும், நடக்கமுடியாமல் இருந்தாலும், அவர் அவ்வளவு சீக்கிரத்தில், வலியை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை… ஒரு குடிகாரன், என்னதான் போதையில் இருந்தாலும், ‘நான் ஸ்டெடியா இருக்கேன் மச்சான்’ என்று தள்ளாடியபடி நின்று காட்டுவது போல்… அவர் அனைவருக்கும் ஈடுகொடுத்து நடந்துக் கொண்டிருந்தார். இது மனிதர்களுக்கே உரித்தான ஒரு ஸ்வீட் ஈகோ…

தாஸ் அவரை எண்ணி வியந்துக் கொண்டே…

‘ஓகே.. எல்லாரும் நில்லுங்க… கொஞ்ச நேரம் எல்லாரும் ரெஸ்ட் எடுப்போம்…’ என்று கூற… சொன்னதுபோதும் என்று அனைவரும் ஆளுக்கொரு பாறையை சிம்மாசனமாக தேர்ந்தெடுத்து அமர்ந்துக் கொண்டனர். ப்ரொஃபஸரும் நிம்மதியாக இளைப்பாறினார்…

சந்தோஷ் அவன் அணிந்திருந்த ஷூவை எண்ணி மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான். அதை அணிந்தபடி அங்குமிங்கும் தாவி தாவி அதன் உறுதியை சோதித்து பார்த்துக் கொண்டிருந்தான். லிஷா அவனை ஒரு வளர்ந்த குழந்தையாக எண்ணி மனதிற்குள் பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தாள்.

சக்கரவர்த்தி வழக்கம் போல் அவனை எச்சரித்தார்…

‘சந்தோஷ், இப்படி தாவி தாவி உங்க எனர்ஜியை வேஸ்ட் பண்ணாதீங்க… இன்னும் நிறைய தூரம் நடக்க வேண்டியிருக்கு… இந்தமாதிரி இடத்துல உடம்புக்கு எனர்ஜி ரொம்ப முக்கியம்.’ என்றதும் சந்தோஷூக்கு கோபம் வந்தது…

‘சார், ஏன் எதுக்கெடுத்தாலும், க்ளாஸ் எடுக்குறீங்க..? எங்களுக்கும் ஃபாரஸ்ட் ஓரளவுக்கு தெரியும்… பியர் க்ரில்ஸ் டாக்குமெண்ட்ரீஸ்லாம் நிறைய பாத்திருக்கேன்… நீங்க பாத்திருக்கீங்களா..?’ என்று அவருக்கு நோஸ்கட் கொடுக்க, சக்கரவர்த்திக்கு ஒருமாதிரி ஆகியது… ஏன்தான் இவனிடம் வாய் கொடுத்தோமோ என்பது போல் சுதாரித்துக் கொண்டு,

‘சொல்லவேண்டியது சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்..’ என்று பொதுவான பதிலை கூறியபடி பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டார்.

சந்தோஷ் அவருக்கு பதிலடி கொடுத்த சந்தோஷத்தை எண்ணி பூரித்தபடி அங்கு பின்பக்கமாக இருந்த மேடு போன்ற பகுதியில் அந்த போலீஸ் ஷூவின் உதவியோடு தாவி தாவி ஏறினான்.

லிஷாவும் சத்தம் போட்டாள்… ‘சேண்டி..! பாத்துடா..’ என்று கூற, அவன் அதை பொருட்படுத்தாமல் அந்த மேட்டுப்பகுதியில் உச்சியை அடைந்தான். அங்கிருந்து அந்த காட்டின் 360 டிகிரி பார்வை கிடைத்தது… அந்த பார்வையை ரசித்தபடி சுற்றி சுற்றி பார்த்தவனுக்கு, தூரத்தில் ஒரே சீராக மரங்களின் உச்சி தெரிய, அந்த உச்சியில் பரவியிருந்த சமப்பகுதியில், ஒரு மரம் மற்றும் சம்மந்தமில்லாமல் துருத்திக்கொண்டு வளர்திருந்தது தெரிந்தது…

என்ன மரம் அது..? என்று நினைத்தபடி, அந்த மரத்தை சற்றே உற்றுப் பார்த்தான். அது மரமல்ல, கொடி இலைகளால் சூழப்பட்ட ஒரு கோவில் கோபுரம் என்று தெரிந்தது…

‘பாஆஆஆஆஸ்…’ என்று கத்தினான். கீழிருந்தவர்கள் அனைவரும் அவனுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று பதறியபடி மேலே பார்த்தனர்…

‘என்ன சந்தோஷ்…?’ என்று தாஸ் கேட்க…

சந்தோஷ் ஒரு திசையை நோக்கி கை நீட்டிக் காட்டினான்.

‘என்னயிருக்கு சந்தோஷ் அங்க..?’

‘ஐ திங்க்… கேணிவனம் கோவில்…னு நினைக்கிறேன்…’ என்று கூற அனைவருக்குள்ளும் களைப்பு அகன்று ஒரு புது வேகம் பிறந்தது…

தாஸூம் சற்றே மெதுவாக அந்த மேட்டில் ஏறி நின்று சந்தோஷுக்கு அருகில் வந்து அதே இடத்தைப் பார்த்தான்.

‘என்னய்யா தாஸ்… அவன் சொல்றது உண்மைதானா..?’ என்று ப்ரொஃபஸர் கீழிருந்து ஆர்வமான குழ்ந்தையைப் போல் கேட்டார்…

தாஸ், அவருக்கு புன்னகையை பதிலாய் அளித்தான்.

—————————-

மீண்டும் ஒரு மணி நேர நடைக்குப் பிறகு, ஒருவழியாக அவர்களுக்கு கேணிவனக்கோவில் கண்களுக்கு தெரிந்தது…

முன்னைக்காட்டிலும், இம்முறை கோவிலில் இன்னும் செடிகொடிகள் சூழ்ந்து மிகவும் அடர்த்தியாக மூடப்பட்டிருந்தது…

சக்கரவர்த்தியும் ப்ரொஃபஸரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

‘பாஸ்… இதுதானா அந்த கோவில்..!’ என்று சந்தோஷ் வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

லிஷா, இக்கோவிலை பற்றி எண்ணி வைத்திருந்த கற்பனையான உருவத்தை ஒரிஜினல் உருவத்தோடு ஒப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் நினைத்திருந்ததைவிட இந்த கோவில் மிக பயங்கரமாக காட்சியளிப்பதை எண்ணி வியந்தாள்.

தாஸ்-க்குள் ஒரு பயம் ஆக்கிரமிக்க தொடங்கியது… இனி என்னென்ன நடக்கப்போகிறதோ… என்றபடி நின்றிருந்தான்.

இன்ஸ்பெக்டர் வாசுவுக்கு, அது ஒரு சாதாரண பாழடைந்த கோவிலாக மட்டும்தான் தோன்றியது. தான் நினைத்ததைவிட மிகவும் சுமாராகத்தான் கோவில்ப இருப்பதாக எண்ணினார். இக்கோவிலை பற்றி இவர்கள் சொன்ன கதைகளை நம்பும்படியில்லையே என்று சந்தேகப் பார்வையுடன் கோவிலை பார்த்துக் கொண்டிருந்தார். உள்ளே போய்த்தான் பார்ப்போமே என்று எண்ணியபடி ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தவரை சந்தோஷ் அழைத்தான்.

‘சார், பாத்து போங்க..’ என்று கூறவும், அவர் திரும்பி பார்த்து அவனை முறைத்தார்.

‘யோவ், ஏன்யா பயமுறுத்துறே..?’

‘இல்ல சார், அந்த குணாப்பய கடைசியா இந்த கோவிலுக்குள்ள ஒரு புலியப் பாத்ததா சொன்னான். ஒருவேளை அது உள்ளேயே தங்கியிருந்தா என்ன பண்ணுவீங்க… ஏதோ உங்க நல்லதுக்கு சொன்னேன்…’ என்று கூறவும், இன்ஸ்பெக்டருக்குள்ளும் பயம் பரவியது… ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல்… தற்காப்புக்காக தனது பையிலிருக்கும் துப்பாக்கியை எடுக்க நினைத்தார்…

தோளில் மாட்டியிருக்கும் பையை, கோவிலைப் பார்த்துக் கொண்டே கீழே இறக்கினார். அதை திறந்து உள்ளே வைத்த துப்பாக்கியை தேட…

அது காணவில்லை…

அதிர்ந்து போய்… பையை பார்த்தார். பையை கீழேவைத்து, முழுவதுமாய் திறந்து, கையை நுழைத்து தேடிக்கொண்டிருக்க, .தாஸ் அவருக்கு அருகில் வந்தான்.

‘என்ன சார்.. என்னாச்சு…?’

‘எ… என்… துப்பாக்கி… உள்ள வச்சிருந்தேன். காணோம்…’ என்று கூற… தாஸூம் திடுக்கிட்டான்.

‘நல்லாப் பாருங்க சார்… உள்ளதான் இருக்கும்..’ என்று பேச்சுக்காய் செயற்கையாய் நம்பிக்கை சொன்னான்.

‘இல்ல காணோம்…’ என்றபடி இன்ஸ்பெக்டர் கடைசியாய் பையை எப்போது திறந்தோம்..? வேறு யாராவது திறந்தார்களா..? என்று யோசித்துக் கொண்டிருக்க, சந்தோஷ் நினைவுக்கு வந்தான். அவன்தான், கடைசியாக ஷூ எடுப்பதற்காக தனது பையை உபயோகித்தவன் என்று நியாபகம் வந்ததும். சட்டென்று எழுந்தார்… சந்தோஷிடம் திரும்பினார்…

‘ஏய்… சந்தோஷ், துப்பாக்கியோட விளையாடாதே..! திருப்பி கொடுத்துடு..’ என்று கத்தவும், அனைவரும் இன்ஸ்பெக்டரை திகிலாய் பார்த்துக் கொண்டிருந்தனர்…

‘சார்… நா…. நான்.. எடுக்கலை… போலீஸ் ஷூவுக்குத்தான் ஆசைப்பட்டேன்… துப்பாக்கியையெல்லாம் தொட்டுப்பாக்க கூட எனக்கு தைரியம் இல்ல…’ என்று அப்பாவியாய் சொன்னான்.

‘நீதான் கடைசியா என் பேக்-ஐ திறந்து ஷூ எடுத்திருக்கே… அப்படியே துப்பாக்கியையும் எடுத்திருக்க… சந்தோஷ்…! வேண்டாம்..? கொடுத்துடு..’

‘அய்யோ சார், இது அபாண்டம், உங்க பேக்-லருந்துவெறும் ஷூ இருந்த ப்ளாஸ்டிக் பை-யை மட்டும்தான் எடுத்தேன்… அதுதவிர, நான் அந்த பேக்-ல துப்பாக்கியை கண்ணால கூட பாக்கலை…’ என்று கூறவும், இன்ஸ்பெக்டர் வாசு தடுமாறினார், இவன் கண்கள் பொய் சொல்லவில்லையே..! இவன் சொல்வது உண்மையானால், அப்போது துப்பாக்கியை யார் எடுத்திருப்பார்கள்… என்று யோசித்துக் கொண்டிருக்க…

லிஷாவும் கோபமடைந்தாள்…

‘சார், அவனை நீங்க மிரட்டுறதுல எந்த அர்த்தமுமில்ல… அவன்தான் அந்த பேக்-ல துப்பாக்கியே கண்ணால பாக்கலைன்னு சொல்றான்ல… அப்படின்னா, அதுக்கு முன்னாடியே யாரோ எடுத்திருக்காங்க..?’ என்று கூற, இன்ஸ்பெக்டர் வெளிறிய முகத்துடன் லிஷாவைப் பார்த்தார்…

இவள் சொல்வது உண்மைதான்… அப்படியென்றால் யார் எடுத்திருப்பார்? என்று தீவிர யோசனையில் இருக்க…

‘சபாஷ் லிஸா… கரெக்டா சொன்னே..!’ என்று லிஷாவுக்கு பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மேலும், லிஷா தன் பின்மண்டையில், ஏதோ ஒரு இரும்பு உலோகம் தலையை தொடுவது போல் உணர்ந்தாள்.

சக்கரவர்த்தி, லிஷாவின் தலையில் போலீஸ் தேடிக்கொண்டிருக்கும் துப்பாக்கியை பிடித்திருந்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top