தங்கத் தண்டு – 7

……………………………..கி.மு. ஐம்பதாம் வருடம்….

கல் பாத்திரத்தில் பச்சிலைகளையும் பாதரசத்தையும் போட்டு கலக்கிக் கொண்டிருந்தான் திருமுடியான். பாறாங்கல் அடுப்பு ஜூவாலை விட்டு எரிந்து கொண்டிருந்தது. குருநாதர் செல்லப்பிள்ளை சுதர்சனனை ரசவாதம் செய்ய அனுமதித்தார். தனக்குப் பிராணாயாமம் இன்னும் கைகூடவில்லை என்று அனுமதி மறுத்து விட்டார். பெரீய்ய பிராணாயாமம்! எல்லாம் வஞ்சகம்! குருநாதர் இல்லாமலே தனியாகச் செய்கிறான்….. அடிக்கடி தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டான்; பார்த்து விடலாம்!

மலை தாண்டிய பொட்டல் பிரதேசத்தில் அவன்! பெரிய பெரிய பாறைகளுக்குப் பின், வெளித் தோன்றும் தங்கத்தை களவாடிச் செல்ல மூன்று கயவர்கள் மறைந்திருந்தனர்- அவனறியாது!

முதல் புகை வெளிப்பட்டது. மூச்சடக்கினான். இரண்டாம் புகை !! மூன்றாம் புகை !!! நான்காம் புகை !!!!

கலவை நிறம் மாறியது!

நிறம் மாறி விட்டால் அடுப்பின் எரிதழலை ஆறில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும் என்பது முறை.

“ஆகா.. ” என்று ஆர்ப்பரித்தவன் அதை மறந்தான். அவன் அசந்த மறு கணம்…

ஆயிரமாயிரம் கைக்கொண்டு அடங்காப் பசியோடு பிரம்ம ராட்சசன் போல குபீரென்று எழுந்தது புகை….. !
பறவைகள் கிரீச்சிட்டு பறக்க, சடசடவென்ற சப்தம்…

புகை அவிந்து அடங்கியபோது………

நீலம் பாய்ந்த நிலையில் நான்கு சடலங்கள்- திருமுடியானையும் சேர்த்து ! ! ! !

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்:

நரேனுக்கு வேலைகள் சீக்கிரமே முடிந்ததால் சாவகாசமாய்க் காணப்பட்டான். மனம் லாவண்யாவைத் தேடியது. உதவியாளரை அழைத்தான், “ ஹெல்த் ப்ளஸ்ல இருந்து யாரையாவது வரச் சொல்லு! ” – மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளைத் தொடுத்தான்! யாரையாவது என்றால் யார் வருவார் என்று அவனுக்குத் தெரியாதா?

ஒரு மணி நேரம் கழித்து லாவண்யா வந்தாள். அவளை எதிரில் அமர வைத்து விட்டு, ஈ மெயில் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன். அவன் ஈ மெயில் பார்ப்பது, ஈ மெயில் பார்ப்பதற்காக அல்ல!

சட்சட்டென்று பார்வையை வீசி லாவண்யாவை அளந்தான். கண் சிவந்திருக்கிறது; அழுதிருக்கிறாள்.. மனதுக்கும் அறிவுக்கும் யுத்தம் நடந்திருக்கிறது! மனது லீடிங் போலும்.. ஆடை அலங்காரத்தில் அக்கறை கூடியிருக்கிறது; கழுத்தில் போட்டிருக்கிற இமிடேஷன் நெக்லஸ் சற்று முன் வாங்கியிருக்க வேண்டும்; நெக்லஸின் ஜிகினாத் துகள் கழுத்தில் படிந்திருக்கிறது. நடையில் கம்பீரம் வந்திருக்கிறது; பேச்சில் கறார் தொனிக்கிறது. கற்பனையில் ஒரு கலெக்டருக்கு மனைவியாகப் போகிறவளாகத் தன்னை பாவித்திருக்கிறாள்- அந்தத் தகுதிக்கு தன்னை உயர்த்திக் கொள்ளும் முயற்சி தெரிகிறது!

நரேன் பேச ஆரம்பித்தான், “மேடம்! ”

அந்த வார்த்தை சவுக்கடியாய் லாவண்யாவைத் தாக்கியது. சிட்டுக்குருவியின் முதுகில் எரியும் சிகரெட்டை அணைத்தாற் போல் உணர்ந்தாள். இதன் அர்த்தம்: “எனக்கு நீயா? நான் ரொம்ப பிஸி; உன் பேரை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நீ எனக்கு முக்கியமில்லை. ”

லாவண்யா துடிக்கும் இதயத்தை அமைதிப்படுத்தினாள். நான் அவரை நேசிக்கிறேன் என்பதற்காக அவர் என்னை நேசிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை! இருப்பினும் முகம் இருண்டு போனது.

“ சொல்லுங்க சார், ” என்றாள் எந்திரத்தனமாக.

“ நீங்க ஆம்புலன்ஸ் கேட்டிருந்தீங்களே? அதுல என்னென்ன வசதிகள் வேணும்? ”

“ எங்க பாஸ் கிட்ட பேசிட்டு கம்யூனிகேஷன் அனுப்பறேன் சார் ”

“ சரி ” என்றவன் நிதானித்தான்- இதற்கு மேல் கொடுமைப்படுத்தினால் தாங்க மாட்டாள்… “ ம்…ம்…ம்… உங்க பேர்.. ” நெற்றியை இருமுறை தட்டிக் கொண்டு “ ஓகே லௌவ்ஸ், சீக்கிரமா அனுப்பிடுங்க ” என்றான்!

வாடிய பயிருக்கு பாத்தி கட்டி பாக்டம்பாஸ் போட்டு தண்ணீர் ஊற்றியதைப் போல துள்ளி ஓடினாள் லாவண்யா! அவன் முழுதாக ஐந்து நிமிடம் ஒதுக்கி அப்படியே பூவாய் மலர்ந்த அவள் முகத்தை மனதில் ரீவைண்ட் பண்ணி ஓட்டி ரசித்தான்!

இங்கிலாந்து தூதரகத்தின் அதிகாரி ஒருவரிடமிருந்து சங்கேத அலை வரிசையில் விக்டர் மார்ஷலுக்கு செய்தி வந்தது.

“ மார்ஷல்! சேர்ந்து விட்டாயா? ஓவர்! ”

“ எஸ் சார், ஓவர்! ”

“ நமது ஒப்பந்தப்படி நீ நடந்து கொள்ள வேண்டும். உனக்குரிய உதவிகளை என் செல்வாக்கைப் பயன்படுத்தி செய்கிறேன். அந்த ரசவாத ரகசியத்தை தெரிந்து கொண்டு அதை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். வாவ்! நீ எனக்குப் பரிசளித்த தங்கத்துண்டு இன்னமும் என் கண்ணில் ஆடுகிறது ! ஓவர்! ”

“ நான் இங்கு வந்ததே அதற்குத் தானே? ஓவர்! ”

“ மார்ஷல்! இந்த முயற்சியில் தமிழ்நாடே சுடுகாடாய்ப் போனாலும் கவலையில்லை! வேலையை முடித்து விடு! ஓவர்! ”

அமரேசன் வீடு

அமரேசன் வீட்டுக்குள் நுழையுமுன்னரே வீட்டுக்குள்ளிருந்து அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஓடிப் போய்த் திறந்தால் தனது மனைவி கௌரி சேலையில் சுற்றிய குழந்தையுடன் பதைபதைப்புடன் நிற்பதைக் கண்டார். நடந்ததைச் சொன்ன கௌரிப்பாட்டி, “அந்த நாசமாப் போனவன் என்ன ஆனான்னு தெரியலியே? ” என்றாள்.

அமரேசன் ஏதோ முடிவுக்கு வந்தவராக, “அவன் எக்கேடோ கெடட்டும்! நடந்ததை யார் கிட்டயும் சொல்லாதே; பதட்டப்படாம எப்போதும் போல இரு” என்றவர் “அந்த தடியனோட தூசு படிஞ்ச கால் தடம் பூஜையறை முழுக்க இருக்கு, அதை சுத்தம் பண்ணிடு” என்று சொல்லி விட்டு குழந்தையை வாங்கினார்.
அந்தரீஸிடம் எதையும் மறைக்க முடியுமா என்ன?

திருவண்ணாமலை போலிஸ் ஸ்டேஷன்

தன் வீட்டு வாட்ச்மேன் என்பதால் அடையாளம் காட்டப் போயிருந்தான் அந்தரீஸ். இன்ஸ்பெக்டர் அந்தரீஸை மரியாதையுடன் நடத்தினார். பெரியசாமி சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் பகிர்ந்தவர், “ சார், ஆள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துருக்கார். தலையில பக்கவாட்டுல ரெண்டு பக்கமும் அடிபட்டிருக்கு. ஏதோ பேய் பூதம் காப்பாத்துங்கன்னு ஓடி வந்ததை அந்த க்ளீனர் பையன் வீடியோ எடுத்திருக்கான்… ” என்றார்.

“ தலையில அடிபட்டதால மரணம் நேரலையா? ”

“போஸ்ட் மார்ட்டம் பண்ணுண டாக்டர் என்ன சொல்றார்னா தலையில விழுந்த அடிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்காத பட்சத்தில் மரணம் சம்பவிக்க எழுபத்திரண்டு மணி நேரமாவது ஆகுங்கிறார். தலையில அடிபட்ட நிலையில அவ்வளவு வேகமா ஓடி வந்து இதயத்தை ஓவரா வேலை வாங்குனதாலதான் சாவுங்கறார். ”

“ டாக்டர் இன்னொன்னும் சொன்னார், ” சற்று யோசனைக்குப் பிறகு சொன்னார் இன்ஸ்பெக்டர்.

“ என்னவாம்? ”

“ தலையில ரெண்டு பக்கமும் டிட்டோ ஒரே மாதிரி பாதிப்பு; அதாவது ரெண்டு அடியும் ஒரே சமயத்துல விழுந்துருக்குன்னார்… ”

அந்தரீஸ் கற்பனை செய்து பார்த்தான்; ஒருவன் இரு கைகளால் ஒரு தடியைப் பிடித்து லொட்டு லொட்டென்று இரண்டு முறை அடிக்கலாம்..இரு கைகளில் இரண்டு தடிகளை வைத்துக் கொண்டு ஒரே சமயத்தில் அடிக்க, அதுவும் பக்கவாட்டில்…..! ? ஒத்து வராத கற்பனையாக இருக்கிறதே? ஏனெனில் வலது கைக்காரர்களுக்கு இடது கை அதே வேகத்தில் இயங்காது; இடது கைக்காரர்களுக்கு வலது கையும் அப்படியே.

அந்தரீஸுக்கு அவன் வீட்டுப் பூஜையறை கற்பனையில் வந்து அப்படியே பொருந்தியது!

பாண்டிச்சேரி மியூசியம்

சுதர்சனா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தாள். “ பேயடித்து வாட்ச்மேன் மரணம் ” என்று தலைப்பிட்டு பெரியசாமி போட்டோவுடன் செய்தி வந்திருந்தது! அந்த போட்டோவை ஸ்கேன் செய்து கம்யூட்டரில் கொடுத்து சில பட்டன்களைத் தட்டினாள். கம்யூட்டர் தெளிவாகத் துப்பியது: பாண்டிச்சேரி மியூசியத்தில் கொள்ளையடித்த பழைய திருடன் இவன் என்று! ஆக, இந்த வாட்ச்மேனை எங்கோ பார்த்ததாக அவள் உள்ளுணர்வு சொன்னது நிஜம். அவன் போட்டோவை இந்த சிஸ்டத்தில்தான் பார்த்திருக்கிறாள்-வேறு எதற்காகவோ அவள் ஆபரேட் செய்தபோது கண்ணில் பட்டிருக்கும்..

இதெல்லாம் சரிதான். அந்த கல்மேடை விவகாரத்தை மட்டும் ஏன் அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top