தங்கத் தண்டு – 10

விக்டர் மார்ஷலின் தேடுதல் வேட்டை பெருமளவு பாதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அருமையான ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்கள் அடங்கிய கன்ட்ரோல் ரூமை அவதி அவதியாக தரை மட்டமாக்க வேண்டியிருந்தது! இனி எவருடனும் ரகசியத் தொடர்பு கொள்ள முடியாது. இதற்கெல்லாம் காரணம் நரேன்! கலெக்டர் நரேன்! முதலில் அவனை முடக்க வேண்டும்….

மார்ஷலின் கோபம் சீக்கிரமே நரேன் மேல் இறங்கியது – பணியிடை நீக்கமாக!

தன் சஸ்பென்ஷன் ஆர்டரை அலட்டிக் கொள்ளாமல் வாங்கிய நரேன் கலெக்டர் பங்களாவை காலி செய்து விட்டு விக்டர் மார்ஷலின் வீட்டை நன்றாகக் கண்காணிக்கும் விதத்தில் வாடகை வீடு பிடித்தான்.

புது கலெக்டர் சஸ்பென்ட் ஆனால் அந்த அவமானம் தாங்காமல் நரேன் முடங்கி விடுவான்; தன் சஸ்பென்ஷனை நேர் செய்து போஸ்டிங் வாங்கவே அவனுக்கு நேரம் சரியாக இருக்கும் என்று கணக்குப் போட்ட மார்ஷல், நரேன் தன்னை இன்னும் நெருங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தான்! இவன் கதையை முடிக்க வேண்டும்!

அன்று நரேனுக்கு உடம்பு சரியில்லை. தலைவலித் தைலம் பூசியவன் மூடி கட்டிலுக்குக் கீழ் விழுந்ததால் கட்டிலை நகர்த்தினான். ஜன்னலுக்குப் பக்கத்தில் இருந்த கட்டில் அறையின் மறு கோடிக்குப் போன பின் மூடி கிடைத்தது. திரும்பவும் கட்டிலை நகர்த்த உடல் ஒத்துழைக்கவில்லை. சோபாவை மட்டும் இழுத்து ஜன்னலுக்குப் பக்கத்தில் போட்டு விட்டு தூங்கி விட்டான்.

நரேனின் உதவியாள் வாசல் கதவை சும்மா சாத்தி விட்டு அப்போதுதான் வீட்டை விட்டு வெளியே போனான். சும்மா சாத்தி விட்டுப் போய் விடும்படிதான் அவனுக்கு உத்தரவு – உத்தரவு கொடுத்தது நரேன் அல்ல!

நள்ளிரவு நேரம்!

சோகை பிடித்த நிலா தானும் ஒளிராமல் நட்சத்திரங்களையும் மறைத்துக் கொண்டிருந்தது.

சரசரவென்று ஒரு உருவம் நரேனின் வீடு நோக்கி நடந்தது. எதிரே இன்னொரு உருவம், சாக்குப் பையால் உடம்பை மூடிக் கொண்டு!

“மூவாயிரம் ரூவா! அந்த வெள்ளைக்கார விக்டர் மாமா கொடுத்தார்!” பெருமையடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்தது சாக்குப் பை உருவம்! முதல் உருவம் நரேனின் படுக்கையறைக்குள் தயங்கி நுழைந்தது! சின்ன இரவு விளக்கு வெளிச்சத்தில் அது….

லாவண்யா…

லாவண்யா அங்கு கண்ட காட்சி……!

சோபாவில் பொத்தல் விழுந்து ஸ்பாஞ்ச் வெளியில் வந்திருந்தது. ஒரு கருநாகம் நரேனின் மார்பில் சுருண்டு படுத்திருந்தது!

இன்னொருத்தராயிருந்தால் பயந்து கத்தி நாகத்தை எழுப்பி இருப்பார்கள்; சீண்டப்பட்ட நாகம் ஒரு போடு போடாமல் ஓய்ந்திருக்காது!

லாவண்யாவுக்கு நாகத்தைப் பார்க்க பொறாமையாக இருந்தது! காக்கை குருவி எங்கள் ஜாதி என்பார்கள்; பாம்பும் பல்லியும் லாவண்யாவின் ஜாதி! பக்கத்தில் சென்று பாம்பை மென்மையாகத் தடவினாள். எட்டடிக்குக் குறையாத ஆக்ரோஷமான ஆண் பாம்பு! செதில்களுக்கு இடையில் இது என்ன?

கருவேல முள்!

பாம்பைப் பிடித்து கருவேல முள்ளால் உடம்பைக் குத்தி, கோபப்படுத்தி நரேனின் படுக்கையறைக்குள் போட்டிருக்கிறான் அந்த சாக்குவாலா! அப்படி செய்யச் சொல்லி மூவாயிரம் ரூபாய் கொடுத்தது விக்டர் மார்ஷல்! என்ன கொழுப்பிருந்தால் என் நரேனின் உயிரோடு விளையாடுவான்? நல்ல வேளையாக கோபாலண்ணனிடம் கதவை சும்மா சாத்தி விட்டுப் போகச் சொல்லி நான் வந்தேன்…

கோபமாக உள் நுழைந்த பாம்பு சோபாவை கொத்தி விட்டு, காய்ச்சல் கண்ட நரேனின் உடம்புச் சூட்டுக்கு அவர் மார்பு மேலேயே தூங்கி விட்டது!

லாவண்யா சமையலறை போனாள். பெரிய ஓட்டைக் கரண்டியை துணியில் சுற்றியெடுத்தாள். ஒரு கோணிப் பைக்குள் தலையணையை கிழித்துப் போட்டு மெத்து மெத்தென்று ஆக்கினாள். கயிறு எடுத்து வைத்துக் கொண்டாள்.

நரேனுக்குப் பக்கத்தில் தரையில் அமர்ந்தாள்; நரேன் மாத்திரையின் உபயத்தால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். ஒரு வேளை பாம்பு கொத்தியிருந்தால் அதன் வலியைக் கூட உணர்ந்திருக்க மாட்டானோ, என்னவோ?

லாவண்யா முழங்கை வரை பயன்படுத்தி பாம்பின் தலையை லேசாக அதன் உடம்போடு அழுத்திப் பிடித்தாள். ஓட்டைக் கரண்டியால் பரோட்டா எடுப்பது மாதிரி பாம்பை சுருட்டிய வாக்கில் எடுத்து கோணிப்பையில் போட்டு கட்டி விட்டாள். பிறகு அதை தலை மாட்டில் வைத்துக் கொண்டு அப்படியே தூங்கி விட்டாள். பாம்பு தூங்கி முடிக்கட்டும்; அப்போதுதான் அதனால் ஏவிய வேலையை சரியாகச் செய்ய முடியும்!

இரவு இரண்டு மணிக்கு கோணிப் பை நெளிந்தது! பாம்பை வெளியே எடுத்து அதன் உடலில் தளர்வாக சணல் கயிறை கட்டி, அந்தப் பகுதியில் உலாவ விட்டாள். புதருக்குள் புகுந்து கழிவு நீர்க் கால்வாய்க்குள் இறங்கி விட வேண்டும். அதுதான் பயிற்சி! காட்டுக்குப் போக அதுதான் பாதுகாப்பான வழி- பாம்புக்கு மட்டுமல்ல; மனிதனுக்கும் அதுதான் பாதுகாப்பு! நாலைந்து முறை பழக்கிய பின் திரும்ப பாம்பைத் தூக்கி கோணிப் பைக்குள் போட்டுக் கொண்டாள்.

விக்டர் மார்ஷலின் படுக்கையறை இரண்டாவது தளத்தில் இருந்தது! மூடிய கண்ணாடி ஜன்னல்கள்! ஒரு பெரிய கல்லை துணியில் சுற்றி பந்து போலாக்கினாள். மேலே விட்டெறிந்தாள்; லேசான சப்தத்துடன் நொறுங்கியது கண்ணாடி! பாம்பை எடுத்து சணல் கயிறை நீக்கிய பின் ஒரு கல்லால் அதன் தாடைகளில் அடித்தாள். அப்படியே மேலே தூக்கிப் போட்டாள்!

லாவண்யா!

கீழே நின்றபடி வெட்டரிவாளை விட்டெறிந்து தென்னை மரத்தின் குலைகளை அறுப்பவள்! இப்போது புதருக்கருகில் இருட்டில் நின்ற நிலையில் ஆவேசத்துடன் காட்டுத் தேவதையாகக் காட்சியளித்தாள்!

சரியாக இரண்டே நிமிடத்தில் விக்டர் மார்ஷலின் அறையிலிருந்து “குய்யோ முறையோ” என்று அலறல் சத்தம் கேட்டது! விக்டரின் சகாக்கள் பரபரவென்று ஓடினர். தெருவே விழித்துக் கொண்டது.

கால் மணி நேரம் கழித்து புதரைக் கடந்த கருநாகம் கழிவு நீர்க் கால்வாய்க்குள் இறங்கியது!!!

திருப்தியுடன் திரும்பினால் நரேன் நின்றிருந்தான்- வெற்று மார்பில் கைகளைக் கட்டியபடி!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top