Home » அதிசயம் ஆனால் உண்மை » சுய சரிதை » சந்திரபாபு (நடிகர்)!!!

சந்திரபாபு (நடிகர்)!!!

‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாமல், பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் ஈடுபாடுகொண்ட அற்புதக் கலைஞனாகவும் விளங்கியவர்.

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ போன்ற பாடல்களினால் 50 ஆண்டுகளைக் கடந்தும், தமிழிசை நெஞ்சங்களை இன்றும் முணுமுணுக்க செய்தவர்.

தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஆகஸ்ட் 04, 1927

பிறப்பிடம்: தூத்துக்குடி, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர்  

இறப்பு: மார்ச் 07, 1974

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

“ஜோசப் பிட்சை” என்னும் இயற்பெயர்கொண்ட சந்திரபாபு அவர்கள், 1927  ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “தூத்துக்குடி” என்ற இடத்தில் ‘ஜே. பி. ரோட்டரிக்ஸ்’, என்பவருக்கும், ‘ரோசரின்’ என்பவருக்கும் மகனாக ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் இவரை, ‘பாபு’ எனச் செல்லமாக அழைத்து வந்தனர். சந்திரகுலத்தில் பிறந்தவர் என்பதால் “சந்திர” என்ற பெயருடன் பாபுவை இணைத்து பின்னாளில், சந்திரபாபு எனத் தமது பெயரை மாற்றிக்கொண்டார். மேலும், இவருடைய தந்தை ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகி ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவருடைய குடும்பம் சுதந்திரப்போராட்டக் காலத்தில், விடுதலைப் போரில் ஈடுபட்டு, ஆங்கில அரசால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதால், சிறிதுகாலம் சந்திரபாபுவின் குடும்பம் இலங்கையில் வாழ்ந்து வந்தது. இதனால், தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் முடித்தார். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த அவருக்கு, எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அதிகம் காணப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மேல்நாட்டு உடைகள், பாவனைகள், கலச்சாரங்கள் போன்றவற்றின் மீது அலாதியான ஈடுபாடு இருந்தது.

திரைப்படத்துறையில் நுழைய மேற்கொண்ட முயற்சிகள்

இலங்கையில் சிறிதுகாலம் மட்டுமே வாழ்ந்த அவருடைய குடும்பம், மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு, சினிமா துறையில் நுழைய பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், முடியாமல் போகவே மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறுதியில் பல இன்னல்களுக்குப் பிறகு, 1947 ஆம் ஆண்டு ‘தன அமாராவதி’ என்னும் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமாத்துறையில் முதன் முதலாகக் கால்பதித்தார். பின்னர் 1952-ல் வெளிவந்த ‘மூன்று பிள்ளைகள்’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில், இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்து, எஸ். எஸ். வாசனின் பாராட்டைப் பெற்றார்.

வெற்றி பயணம்

1952 ஆம் ஆண்டு ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த ‘மோகனசுந்தரம்’ திரைப்படத்தில் டி. ஆர். மாகாலிங்கத்துடன் இணைந்து நடித்த இவர், ‘போடா ராஜா பொடி நடையா’ என்ற பாடலைப் பாடி, அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, 1950-களில் பெரும் நட்சத்திரங்களாக உருவாகிக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் என அனைவருடைய திரைப்படங்களிலும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்து மிக விரைவிலேயே முன்னணி நகைச்சுவை நடிகரானார்.

1958 ஆம் ஆண்டு, பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் வெளிவந்த ‘சபாஷ் மீனா’ திரைப்படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து அற்புதமான நகைச்சுவை கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த இவர், அத்திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகனாகவே நடித்து அனைவரையும் சிரிக்கவைத்தார் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் ‘புதையல்’, ‘சகோதரி’, ‘நாடோடி மன்னன்’, ‘குலேபகாவலி’, ‘நீதி’, ‘ராஜா’, ‘பாதகாணிக்கை’, ‘நாடோடி மன்னன்’, ‘கவலை இல்லாத மனிதன்’, ‘அடிமைப்பெண்’ போன்றவை இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பிடத்தக்கவையாகும். குறுகிய காலத்திற்குள் பல திரைப்படங்களில் நடித்து, நகைச்சுவை நடிப்பில் சிறந்த நாயகனாகத் திகழ்ந்த அவர், அப்பொழுதே ‘1 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

தமிழ் திரையுலக ரசிகர்களில், ‘சந்திரபாபு என்னும் கலைஞனை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை’ என்னும் அளவிற்கு ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ் திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்தார்.

‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகிறான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்தில’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னை தெரியலையா இன்னும் புரியலையா’ போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளையும் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனியிடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

‘கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ‘குமாரராஜா’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966 ஆம் ஆண்டு ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருப்பார்.

சொந்த வாழ்க்கை

நகைச்சுவை நடிகராக மற்றவர்களை சந்தோசப் படுத்திய இவரின் சொந்த வாழ்க்கை மகிழ்ச்சிகாரமானதாக இல்லை. அவர் திருமணம் செய்துகொண்ட பெண் முதலிரவில் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறவே, மறுநாள் அவரை மரியாதையுடன் அனுப்பிவைத்தவர்.

அவருக்குப் பொதுவாகவே தன் நடிப்பின் மீது எப்பொழுதும் ஒரு கர்வம் உண்டு, ஆகையால் ‘நினைத்ததை செயல்படுத்தியே தீருவேன்’ என்ற பிடிவாத குணம் என்பதால் பலரால் திமிர் பிடித்தவன் என்று புரிந்துகொள்ளப்பட்டார். இதனால், சர்ச்சைகளும் சக நடிகர்களுடனான சச்சரவுகளும் அவரைச் சூழ்ந்தே இருந்தன. மேலும் குடிபழக்கம் அதிகம் உள்ளவராகவும், பெத்தடின் என்னும் போதைப்பொருளுக்கு அடிமையானவராகவும் இருந்தார்.

இறப்பு

சந்திரபாபுவின் இறுதிக்காலத்தில் சோகம் அதிகமாக அதிகமாக, மதுபழக்கமும் அதிகரித்தது. இதனால் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர், 1974 ஆம் ஆண்டு மார்ச் 07 ஆம் நாள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் தன்னுடைய 47 வது வயதில் இறந்தார்.

உண்மையை சொல்லப்போனால், சந்திரபாபுவின் நடிப்பு ஒரு சவால்தான். தனக்கெனத் தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, நடிப்பில் புதுமையை புத்தியவர். தன்னுடைய புதுமையான சிந்தனைகளை, தான் நடிக்கும் படங்களில் கதாபாத்திரமாக வெளிப்படுத்தியவர். சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

சந்திரபாபு பற்றி சுவையான சிறு குறிப்புகள்

சந்திரபாபு…. ஆளைப் பார்த்தாலே சிரிப்பு வரும். அவர் பாட்டை ரசித்தால், ஆட்டம் வரும், சொந்தக் கதையைக் கேட்டால் கண்ணீர் வரும். அவரைப் போல இன்னொரு கலைஞன் எப்போது வருவான்?

* என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

* பெற்றோர் ரோட்ரிக்ஸ் – ரோஸலின் இருவரும் சுதந்திரப் போராட்ட வீரர்கள். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையும் நடத்தியவர்கள். உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டதால் இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட…. கூடவே சென்ற சந்திரபாபுவும் கொழும்பில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார்!* கடலோர நகரமான தூத்துக்குடியில் பிறந்த கலைமுத்து. பனிமயதாசன் என்று பெயர். கடும் காய்ச்சலில் இருந்து மீண்டது கர்த்தரின் கருணை என ஜோசப் பிச்சை என்ற பெயரை இணைத்தார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்!

* கொழும்புவில் வாழ்க்கை நடத்த வழியில்லாமல் பாபுவின் பெற்றோர் சில ஆண்டுகளிலேயே சென்னைக்கு வந்தார்கள். திருவல்லிக்கேணியில் வீடு. சாந்தோம் கடற்கரையில் இசையமைப்பாளர் வேதா. தபேலா தாழு ஆகியோர் அறிமுகம் கிடைத்தது. இசை ஞானத்தை விதைத்தது இந்த இருவரும்தான்!

* காமராஜருக்கு அறிமுகமான குடும்பம் பாபுவின் அப்பா சிறையில் இருந்த காலத்தில் அழைத்துச் சென்று குளிப்பாட்டி அரவணைத்தவர் காமராஜ். சந்திரபாபு மறைந்தபோது மலர் மாலையுடன் வந்த முதல் ஆளும் காமராஜரே!

* சந்திரபாபுக்கு ஆங்கில அதிகாரிகள். பிரிட்டிஷ் பெண்கள், அவர்களது உடைகள் பாவனைகள் மீது சிறுவயதில் அலாதியான ஈடுபாடு இருந்தது. ஷர்ட் பேண்ட் இன் செய்து, சுத்தமான உடுப்பை அணியும் ஆசை அப்படித்தான் ஆரம்பித்தது!

* மேற்கத்திய இசை கேட்பது, ராக் அண்ட் ரோல் நடனம் ஆடுவது, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவது. ஹாலிவுட் படங்களை மட்டுமே பார்ப்பது- பாபுவின் இளமைக் காலப் பொழுதுபோக்குகள். சந்திரபாபுவை கலைவாணி பிலிம்ஸீக்கு அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் சிறுகதை மன்னர் புதுமைப்பித்தன். அவருக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!

* முதல் படம், ‘தன அமராவதி’ (1947), கடைசிப் படம் ‘பிள்ளைச் செல்வம்’ (1974), 50-களில் சுமார் 15 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தார்!

* புனித ஃபாத்திமா ஓவியத்தை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். இறந்தபோது அவருடன் வைத்து அதுவும் புதைக்கப்பட்டது!

* ரப்பரைப்போன்ற உடல்வாகு. எவ்வளவு உயரத்தில் இருந்தும் குதிப்பார் எத்தனை தடவை சொன்னாலும் திரும்பத் திரும்பக் குதிப்பார். அவர் படங்களில் டூப் போட்டது இல்லை!

* எம்.ஜி.ஆரை ‘மிஸ்டர் எம்.ஜி. ஆர்.’ என்று அழைத்த ஒரே ஆள் இவர்தான் சிவாஜியை வாடா, போடா போட்டுக் கூப்பிட்டதும் இவரே. அவர்களுக்கு இது பிடிக்கவில்லை. அதுபற்றி இவர் கவலை படவும் இல்லை!

* ‘புகழ் பெறுவதற்காக விளம்பரம் அடையும் வரை தொழிலில் அக்கறை காட்டுவது இயற்க்கை. ஆனால், புகழ்பெற்ற பிறகும் நல்ல விளம்பரம் கிடைத்த பிறகும் சந்திரபாபுவைப் போல அக்கறை காண்பிப்பவர்கள் குறைவு’ என்று சொன்னவர் எம்.ஜி.ஆர்!

* ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர்!

* ‘குங்குமப் பூவே கொஞ்சம் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போது அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியல உலகத்துல’, பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’, ‘என்னைத் தெரியலையா இன்னும் புரியலையா’ ஆகிய 10 பாடல்களும் 50 ஆண்டுகளாக இன்னமும் தமிழகத்தின் இரவு நேரச் சங்கீதம்!

* எஸ். எஸ் வாசனைச் சந்திக்க முடியாத வருத்தத்தில் ஜெமினி ஸ்டுடியோ வாசலில் மயில் துத்தநாகத்தைக் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர், தீக்குச்சியை உரசி தன் கையைச் சுட்டுக்கொண்டார். ‘நான் தீக் குச்சியைக் கொளுத்தியதை உணரலாம். ஆனால், அந்த சூட்டை உங்களால் உணர முடியாது’ என்று நீதிபதிக்குத் தன் துயரத்தை உணர்த்தினார்!

* சென்னை பாஷையை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். ‘சகோதரி’ படத்து பால்காரனைப் பார்த்துத்தான் இப்படியும் ஒரு தமிழ் இருக்கிறது என்பதை தமிழகம் உணர்ந்தது!

* எழுந்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் ‘எனக்காக அழு’, ஆனால், அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை!

* ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போதே தனக்கு உள்ள இன்னொரு தொடர்பை அந்தப் பெண் சொன்னார். மறுநால் காலையில் மனப்பூர்வமாக ஷீலாவை அனுப்பிவைத்துவிட்டார்!

* நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது தன்னுடைய பலவீனம் என்ன என்பதைப் பகிரங்கமாக அறிவித்தார். ‘சில சமயங்களில்  என் திறமையை நினைத்து நானே அடைந்துகொள்ளும் பெருமை எனது பலவீனம். அடுத்தது, என்னுடைய குடிப்பழக்கம். நான் பெண்களைத் தேடி அலையும் லோலன் அல்ல’, அவர்கள் என்னைத் தேடி வரும்போது கதைவைத் தாழிட்டுக் கொள்பவனும் அல்ல’ என்று சொன்னார்!

* மூன்று பேரைத் தனது வழிகாட்டிகளாகச் சொன்னார். ‘மனிதனாக வாழ்வது எப்படி என்று போதித்தவன் ஆபிரகாம்லிங்கன். ஒரு மனிதனைச் சாகடிக்காமல் சித்ரவதை செய்வது எப்படி என்பதை எனக்குக் கற்றுத்தந்த என்னுடைய மாமனார், ராஜதந்திரம் என்றால் என்ன என்பதையும் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதையும் கற்றுத்தந்தவர் ஜெமினிகணேசன்’என்றவர்!

* ‘பாபு இஸ் பாபு, ஐ யம் பாபு’ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். படப்பிடிப்புத் தளத்தில் நுழையும் போது, ‘ஓ ஜீசஸ்! என்று சொல்லியபடிதான் நுழைவார்!

* ஜனாதிபதி மாளிகையில் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் முன்னால் ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’ பாடலைப் பாடினார். பிரமாதம் என்று அவர் பாராட்ட., உடனே ஓடிப் போய் அவரது மடியில் உட்கார்ந்துகொண்டார் சந்திரபாபு, ‘கண்ணா நீ ரசிகன்டா’ என்று அவரது தாடையைத் தடவ… ஜனாதிபதியும் மகிழ…. உற்சாகமானபொழுது அது!

* ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ அவர் இயக்கிய படம். அதில்தான் கதை, திரைக்கதை, டைரக்‌ஷனுடன் நடனம் என்றும் சேர்த்துப் போட்டார். அப்படி போட்ட முதல் இயக்குநர் இவர்தான்!

* நடிப்பு, பாட்டு, நடனம், இசை, ஒவியம், நாடகம், சிற்பம் ஆகிய அனைத்தின் மீதும் ஈடுபாடும், அது தொடர்பான கலைஞர்கள் அனைவரையும் ‘தேடித் தேடிப் பழகிய வந்தாலும் கூட ‘எனக்கு நடிப்பைத் தவிர, செல்ஃப் ஷேவிங் மட்டும்தான் தெரியும்’ என்று சிரிப்பார்!

* ‘நீ ஒரு கலைஞன், கற்பனைவளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்’என்ற ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்று சந்திரபாபு சொன்னார். இப்படிப் பாராட்டியவர், அவருக்கு ஒரு நாள் மட்டுமே மனைவியாக இருந்த ஷீலா!

* ‘என் நடிப்பு மற்றவர்களுக்கு ஒரு சவால்தான். யாராவது இதைப்போல நடித்துக் காட்டட்டும். பார்க்கலாம்!’ என்று சவால்விட்டார் சந்திரபாபு. எதிர்கொள்ள இன்று வரை யாரும் இல்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top