Home » சிறுகதைகள் » இராமன் வனவாசம்!!!
இராமன் வனவாசம்!!!

இராமன் வனவாசம்!!!

அயோத்தி மன்னன் தசரதனின் பட்டத்தரசிகள் மூவரில், இளையவள் கேகயன் மடந்தை கைகேயி. அழகு, அறிவு, வீரம் அனைத்திலும் சிறந்து விளங்கிய கைகேயி அனைவராலும் நேசிக்கப்பட்டவள். தான் பெற்ற மகன் பரதனைவிட கோசலை புத்திரனான இராமனிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டிருந்தாள். தசரதனும் தன் மற்ற இரு மனைவியரைவிட கைகேயியிடம் மிகுந்த அன்பும் மதிப்பும் கொண்டிருந்தான்.

இத்தனை சிறப்புக்களைக் கொண்டிருந்த கைகேயி தசரதனிடம், “தன் மகன் பரதன் நாடாளவும், இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செய்யவும்’  இரண்டு வரங்களைக் கோரினாள் என்பது அவளது இயல்புக்கு மாறானதாகத் தோன்றுகிறது. உயிருக்கு உயிரான இராமனைப் பிரிந்தால் தசரதனின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை அறிந்திருந்தும், கைகேயி இவ்வரத்தைக் கோரினாளெனில், அதற்குப் பொருத்தமான காரணம் ஏதேனும் இருக்கவேண்டும். கொடியவள் என அனைவராலும் இகழத்தக்க அச்செயலை அவள் ஏன் செய்தாள்?

ஒருசமயம் தசரதன் சம்பாசுரன் என்ற அசுரனை எதிர்த்துப் போருக்குச் சென்றபோது, கைகேயி தேர்ச் சாரதியாக தசரதனுடன் சென்றாள். போரின்போது தேர்ச் சக்கரத்தின் கடையாணி கழன்று விட்டது. அதை தசரதன் கவனிக்கவில்லை. ஆனால் சாரதியாக இருந்த கைகேயி அதையறிந்து, தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து தேர் கவிழாமல் நிலைநிறுத்தி தசரசன் உயிரைக் காத்தாள். சம்பாசுரனை வென்ற தசரதன் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு அன்புப் பரிசாக இரண்டு வரங்கள் அளிப்பதாகக் கூறினான்.

“இப்போது வேண்டாம்; தேவையானபோது கேட்டுப் பெற்றுக் கொள் கிறேன்’ என்று கைகேயி கூறிவிட்டாள்.

அதன்பின்னர் ஒருசமயம் தசரதன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். அங்கே தடாகம் ஒன்றில், சிரவணகுமாரன் என்ற சிறுவன் கண் தெரியாத தன் பெற்றோரின் தாகம் தணிக்க தண்ணீர் முகந்துகொண்டிருந்தான். அந்த சப்தத்தைக் கேட்டு ஏதோ மிருகம் தண்ணீர் குடிக்கிறது என்றெண்ணிய தசரதன் தொலைவிலிருந்து அந்த திசைநோக்கி அம்பெய்தான். அந்த அம்பு சிறுவன்மீது பாய்ந்து அவன் உயிரிழந்தான். அவனது அலறல் சப்தம் கேட்டு தசரதன் அங்கு சென்றபோது, சிறுவனின் கண் தெரியாத பெற்றோர் தன் மகன் உயிரிழந்ததற்கு தசரதனே காரணம் என்றறிந்து, “”நாங்கள் புத்திரனைப் பிரிந்ததைப்போல் நீயும் புத்திரனைப் பிரிந்து அந்த சோகத்தில் உயிரிழப்பாய்” என்று சாபமிட்டு உயிர்துறந்தனர்.

அந்த சாபத்தைக் கேட்டு தசரதன் மனம் கலங்கினான். கானகத்திலிருந்து அரண்மனை திரும்பியபின் தசரதன் அதே நினைவாக சஞ்சலத்துடன் இருந்தான்.  தசரதன் சோகமேஉருவாக குழப்பத்துடன் இருப்பதைக் கண்ட கைகேயி, தசரதனுடன் வேட்டைக்குச் சென்றகாவலர்களை அழைத்துவரச் செய்து, அவர்களிடமிருந்து காட்டில் நடந்தவற்றைக் கேட்டறிந்தாள்.

தசரதன் பெற்ற சாபத்தைக் கேட்டு கைகேயியும் கலக்க மடைந்தாள். சாபத் தின் விளைவுகளின் உண்மை நிலையைத் தெளிவாக அறிந்து கொள் ளவேண்டும் என்பதற்காக, அரண்மனை ஆஸ்தான ஜோதிடர்களிடம் தசரதன் மற்றும் புத்திரர் களின் ஜாதகத்தைக் கொடுத்து கிரகங்களின் அமைப்பில் நாட்டின் நிலைமை, தசரதன் மற்றும் தசரத புத்திரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களைக் கண்டறிந்து கூறும்படி கேட்டாள். ஜோதிடர்கள் ஜாதகங்களை ஆராய்ந்து, “அப்போதைய கிரக அமைப்பின் படி அயோத்தி சிம்மாசனத்தில் அமர்பவர் சில நாட்களில் மரணமடைவார்’ என்று கூறினார்கள்.

புத்திரனைப் பிரிந்து தசரதன் உயிர் துறப் பான் என்பதற்கு, “தந்தையைவிட்டு புத்திரன் வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால் எங்காவது ஓரிடத்தில் அவன் உயிரோடு இருப்பான். மகனைப் பிரிந்த சோகத்தில் தசரதன் மட்டும் உயிர்துறப்பான்’ என்றும் ஒரு விளக்கம் கூறினர்.

சாபத்தின்படி தசரதன் உயிர்துறக்க வேண்டும் என்பது தவிர்க்கமுடியாதது என்ற நிலையில், இராமன் அவதார புருஷன் என்றறிந்திருந்த கைகேயி அவனது அவதாரப் பணி நிறைவேற இராமனையாவது காப்பாற்ற வேண்டுமென்று முடிவுசெய்தாள். தசரதனிடமிருந்து இராமனை எப்படிப் பிரிப்பது என்று யோசித்தாள். அதன்விளைவாக அவள் மனதில் தோன்றியதே “இராமனின் வனவாசம்’.

உலகோர் தன்னைப் பேராசைக்காரி, கொடியவள் என்று நிந்திப்பார்களே என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், இராமனை தசரதனிடமிருந்து பிரிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக, பரதனுக்கு முடிசூட்டும்போது குழப்பம் ஏற்படாதவாறு இராமனைக் காட்டுக்கு அனுப்புகிறாளென்று தோன்றும்படி தசரதனிடம் இரண்டு வரங்களைப் பெற்றாள் கைகேயி. பரதன் நாடாள வேண்டுமென்பது ஒன்று; இராமன் காடேக வேண்டு மென்பது மற்றொன்று.

சிம்மாசனத்தில் அமர்பவன் உயிர்துறப் பான் என்று தெரிந்திருந்தும், பரதனுக்கு முடிசூட்டுவதன் மூலம் அவனைத் தியாகம் செய்தாவது இராமனைக் காப்பாற்ற நினைத்தாள் கைகேயி. அதற்கு அவளுக்குக் கிடைத்ததோ சதிகாரி என்ற பட்டம்.

தர்மத்தை நிலைநாட்ட அவதரித்திருக்கும் இராமனைக் காப்பதை தன் கடமையாகக் கருதிய கைகேயி, ஊரார் பழிச் சொல்லைப் பரிசாகப் பெற்றாள்.

இராமன் கானகம் புறப்பட்டபோது நாடே அழுதது; கைகேயியும் அழுதாள். கைகேயி அழுதது இராமன் பிரிந்து செல்வதற்காக மட்டுமல்ல; இராமனைப் பிரிந்த சோகத்தால் தன்னைவிட்டு நிரந்தரமாகப் பிரியப்போகும் கணவன் தசரதனுக் காகவும்தான்.

இராமனைக் கானகத்திற்கு அனுப்பியதற் காக கைகேயியை வாழ்த்தியவர்களும் உண்டு. இராமன் தன் அவதாரப் பணியைத் தொடங்க வழிசெய்த கைகேயியை மானசீகமாக வாழ்த்தியவர்கள் பகவானின் அவதார ரகசியம் அறிந்த தேவர்கள், முனிவர்கள், ஸ்ரீராமர் ஆகியோர். அவர்கள் கைகேயியின் பெருந்தன்மையையும் தியாகத்தையும் போற்றினர்.

மந்தரையின் துர்போதனையைக் கேட்டு, தன் சுயநலத்துக்காக கைகேயி அடாத செயல் செய்தாள் என்ற புறக் காரணத்துக்குப்பின், அவளது பெருந்தியாகம் ஒளிவீசுவதை இதிலிருந்து அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top