Home » பொது » சுனில் கவாஸ்கர்!!!
சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர்!!!

சுனில் கவாஸ்கர்

கிரிக்கெட் உலகத்தால் “தி லிட்டில் மாஸ்டர்” என்று செல்லமாக புகழப்பட்டவர் சுனில் கவாஸ்கர் (கவாஸ்கரின் உயரம் 5 அடி. 5 அங்குலத்திற்கு அங்குலம் குறைவு). அதனாலேயே அப்படி அவரை கருதியோர் உண்டு.
ஆனால் “பேட்டிங்”கில் அவர் உயர்ந்து நின்றார். அவர் (கவாஸ்கர்) ஆடிய காலத்தில் உலகின் தலைசிறந்த “பேட்ஸ் மென்” என்று கருதப்பட்டார். “டெஸ்ட்” கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளை படைத்து இந்திய அணிக்கு பெருமை சேர்த்தார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகள் புரிந்த சுனில் கவாஸ்கர்.

இந்த சாதனையாளர் பற்றிய சில குறிப்புகள்

பெயர்: சுனில் மனோகர் கவாஸ்கர்

பிறந்த தேதி, இடம்: மும்பை, 10.07.1949

செல்லப் பெயர்:சன்னி

பேட்டிங்: வலதுகை ஆட்டக்காரர்

பெளலிங்: வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்

களமிறங்கும் இடம்: துவக்க ஆட்டக்காரர்

முதல் போட்டி: வாசிர் சுல்தான் கோல்ட்ஸ் அணிக்காக, துர்காபுர் அணிக்கு எதிராக மொய்ன் உத் தெளலத் கோல்ட் கோப்பைப் போட்டிக்காக 17 வயதில் (1966).

கடைசி போட்டி: உலக அணிக்காக, எம்.சி.சி.க்கு எதிராக 1988 இல் லார்ட்ஸ் மைதானத்தில் களமிறங்கினார்.

அதிகபட்ச ரன்: பாம்பே அணிக்காக, பெங்கால் அணிக்கு எதிராக பாம்பேவில் நடந்த 1981-82க்கான ரஞ்சி போட்டியில் 340 ரன்கள் எடுத்தார்.

விக்கெட் வீழ்ச்சி: போர்டு பிரசிடெண்ட் அணிக்காக, ராஞ்சி அணிக் எதிராக 1972- 73 இல் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் 43 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியது.

இந்திய அணிக்காக முதல் ஆட்டம்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 1970 இல் நடந்த போட்டியில். அப்போது கவாஸ்கர் 22 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

கடைசி போட்டி: 1986 – பெங்களூரில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி

அதிகபட்ச ரன்: 1983 இல், சென்னையில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டாகமல் 236 ரன்கள் எடுத்தது.

அணித் தலைவராக: போட்டிகள் – 47, வெற்றி – 9, தோல்வி – 9, ட்ரா – 30

டெஸ்ட் போட்டி சாதனை: போட்டிகள் -125, இன்னிங்ஸ் – 214, நாட் அவுட் – 16, ரன்கள் – 10,122, சராசரி – 51.12, அதிகபட்ச ரன்: 216 நாட் அவுட், நூறு – 34, ஐம்பது – 45, காட்சுகள் – 108.

ஒரு தினப் (முதல்)போட்டி: 1974 இல் லீட்ஸில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் முதல் முதலாக ஆடினார்.

கடைசிப் போட்டி: அதே இங்கிலாந்திற்கு எதிராக, மும்பையில் 1987 இல் நடந்த போட்டியில் கடைசியாக பங்கேற்றார்.

அதிகபட்ச ரன்கள்: 1987 இல் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாக்பூரில் நடந்த போட்டியில் அவுட்டாகாமல் 103 ரன்கள் எடுத்தார்.

ஒரு தினப் போட்டியில் கேப்டனாக டிசம்பர் 80 முதல் மார்ச் 85 வரை இருந்தார். போட்டிகள் – 37, வெற்றி – 14, தோல்வி – 21, முடிவு தெரியாதது – 2.

ஒரு தினப் போட்டி சாதனை

போட்டிகள் – 108, ஆடியது – 102 இன்னிங்ஸ், அவுட்டில்லை – 14, ரன்கள் – 3,092, சராசரி – 35.14, அதிகபட்ச ரன் – 103 நாட்அவுட், நூறு – 1 ஐம்பது – 27, காட்சுகள் – 22.

கவாஸ்கர் செய்த சில சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளன.

கவாஸ்கர் தான் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் சீரியசாசில் 774 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை, முதல் முதலாக போட்டியில் பங்கேற்ற எந்த வீரரும் இன்னும் முறியடிக்கவில்லை.

1983 இல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர் 236 ரன்கள் அடித்தார். அந்த சமயத்தில் இந்திய வீரர்கள் அடித்த ரன்களில் அதிகபட்ச ரன் இதுதான். குறிப்பாக அவர், இந்த போட்டியில் வழக்கம்போல துவக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் 4ஆவது வீரராக களமிறங்கி சாதனை செய்தார்.

டெஸ்ட் போட்டிகளில் முதல் முதலாக 9000 மற்றும் 10000 ரன்களைத் தொட்டது கவாஸ்கர் தான்.

டெஸ்ட் போட்டியில் 34 முறை நூறு ரன்கள் அடித்து சாதனை புரிந்தவர்.

கவாஸ்கர் களமிறங்கிய இரண்டு இன்னிங்சிலும் நூறு ரன்களை மூன்று முறை அடித்த பெருமைக்குரியவர்.

உலக அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் (125) விளையாடிவர், தொடர்ந்து 106 போட்டிகளில் ஆடியவர், அதிகபட்ச ரன்கள் (10,122) எடுத்தவர், அதிகபட்ச நூறு (34) அடித்தவர், அதிகபட்ச ஐம்பது (79) அடித்தவர், பார்ட்னர்ஷிப்பில் அதிக முறை நூறு ரன்களை அணிக்காக (58) சேர்த்தவர் என்ற பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

1975 இல் முதல் ஒரு தின உலகக்கோப்பை போட்டி லண்டனில் நடந்தபோது, இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கிய கவாஸ்கர் 36 ரன்களே சேர்த்தாலும் 60 ஓவர் முடியும்வரை களத்தில் இருந்தார்.

ஒரு தினப் போட்டியில் முதல் முதலாக 1000, 2000, 3000 என அதிகபட்ச ரன்களைச் சேர்த்தவர் கவாஸ்கர் மட்டும்தான்.

1970 – 71. மேற்கிந்தியத் தீவுகள். ஹெல்மெட் அணியாமல் முதல் போட்டியை அணுகும் இளம் இந்தியன். வேகப்பந்துவீச்சுக்கு இலக்கணம் வகுக்கும் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்கள். அற்புதமாக 65 ரன்கள் அடிக்கிறான் அந்த இளைஞன். இரண்டாவது இன்னிங்ஸிலும் 67 ரன்கள். சுனில் கவாஸ்கர், இந்தியாவின் ஒப்பற்ற ஓப்பனிங் பேட்ஸ்மேன். அவரது பிறந்த நாள் இன்று. இடுகை, அவருக்கும், உலகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அர்ப்பணம்.
22_வது வயதில் அவரது `டெஸ்ட்’ அரங்கேற்றம் வெஸ்ட் இண்டீசில் 1971 மார்ச் மாதம் தொடங்கியது. போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2_வது டெஸ்டில் கவாஸ்கர் மொத்தம் எடுத்தது 774 ரன்கள் (சராசரி 154.80). அத்தொடரை இந்தியா 1_0 என வென்றது. அந்த போட்டியில் இருந்தே அவரது சாதனை தொடங்கியது.

அதிலும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி பந்துகளை விளாசி தள்ளினார். எக்கோணத்தில் இருந்து வரும் பந்துகளையும் சாதூரியமாக சந்தித்து ஆடக்கூடிய திறமை மிக்க “பேட்ஸ்_மென்” என்ற பெருமையை பெற்றார். அந்த காலத்தில் ஆண்டி ராபெர்ட்ஸ், மைக்கேல் ஹோல் டிங், ஜெப் தாம்சன், டென்னஸ் லில்லி, இம்ரான்கான் போன்ற வேகபந்து வீச்சாளர்களை சமாளித்த கவாஸ்கர் உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரராக விளங்கினார்.
மொத்தம் 17 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் இந்திய அணி வீரராக வலம் வந்த கவாஸ்கர், சாதனைக்கு மேல் சாதனை படைத்தார்.
`பேட்டிங்’ மாமேதை என்று கருதப்பட்ட டான் பிராட்மேன் (ஆஸ்திரேலியா) 52 டெஸ்ட்டுகளில் 6,996 ரன்கள் (சராசரி 99.94) எடுத்து 29 சதம் (செஞ்சுரி) அடித்தது உலக சாதனையாக இருந்தது. அதனை கவாஸ்கர் 1983 டிசம்பர் மாதம் 28_ந்தேதி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முறியடித்தார். அன்று கவாஸ்கர் அடித்தது 30_வது “செஞ்சுரி” ஆகும்.

அவர் “செஞ்சுரி” அடித்து சாதனை புரிவதை பார்க்க ஆவலுடன் காத்திருந்த 45 ஆயிரம் ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஸ்டேடியமே அதிரும் வண்ணம் ரசிகர்களின் கரவொலியும், ஆனந்தக் கொண்டாட்டமும் அடங்க சில நிமிடங்கள் பிடித்தன. கவாஸ்கர் தனது “பேட்”டை உயர்த்தி ரசிகர்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த ரவிசாஸ்திரி ஓடிவந்து கவாஸ்கரை கை குலுக்கி பாராட்டினார்.

சென்னை கிரிக்கெட் போட்டி கவாஸ்கரின் சரித்திர புகழ் படைக்கும் போட்டியாக அமைந்தது. அந்த ஆட்டத்தில் 236 ரன்களை குவித்து இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்தார். அதன் மூலம் சென்னை மண்ணில் கவாஸ்கர் 2 புதிய சாதனைகளை படைத்தார். போட்டியின் சிறந்த வீரராக (மேன் ஆப் தி மேட்ச்) அறிவிக்கப்பட்டு பரிசுகள் குவிந்தன.
“தம்ஸ் அப்” குளிர்பான நிறுவனம் கவாஸ்கருக்கு “மாருதி கார்” பரிசளித்தது. சென்னை கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஏ.சிதம்பரம் ரூ.10 ஆயிரம் வழங்கினார். கிரிக்கெட் ரசிகரான தமிழக அமைச்சர் ராகவானந்தம் தனது சொந்த பொறுப்பில் கவாஸ்கருக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.
அதுமட்டுமல்ல `டெஸ்ட்’ கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் கவாஸ்கர் நிகழ்த்தினார். அவர் மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10,122 ரன்களை (சராசரி 51.12) குவிந்தார். (34 சதம், 45 அரை சதம் இதில் அடங்கும்) 106 டெஸ்ட் தொடர்களில் இடைவிடாது ஆடி இருக்கிறார். 4 முறை இரட்டை சதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதி அதிகபட்சமாக 236 ரன் எடுத்துள்ளார். கவாஸ்கர் அடித்த 34 செஞ்சுரிகளில் கிட்டத்தட்ட பாதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டங்களில் எடுத்தவை. (மீதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8, பாகிஸ்தானுக்கு எதிராக 5, இங்கிலாந்துக்கு எதிராக 4, நியுசிலாந்து, இலங்கைக்கு எதிராக தலா 2 சதம் அடித்துள்ளார்.)
இலங்கைக்கு எதிராக 1986 டிசம்பரில் கான்பூரில் எடுத்த 176 ரன்தான் கவாஸ்கர் எடுத்த கடைசி சதம் ஆகும்.
இந்திய அணியை 47 `டெஸ்ட்’ ஆட்டங்களில் கேப்டனாக இருந்து வழி நடத்தி இருக்கிறார். இதில் 9 போட்டிகளில் வெற்றி, 8 போட்டியில் தோல்வி, 30 போட்டிகள் `டிரா’வில் முடிந்தன.
கேப்டன் பதவியை துறந்த பிறகும் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடினார். `டெஸ்ட்’ போட்டியை போல ஒரு நாள் போட்டியில் அவரால் அதிகமாக ஜொலிக்க முடியவில்லை. 108 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 3,092 ரன் குவித்தார் (இதில் ஒரு சதம், 27 அரை சதம் அடங்கும்).
தனது 38_வது வயதில் கவாஸ்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.1987_ம் ஆண்டு லண்டனில் சிறப்பு கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. இங்கிலாந்து நாட்டில் கிரிக்கெட் கிளப் தோன்றி 200 ஆண்டுகள் ஆனதையொட்டி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் இங்கிலாந்து அணியும், உலக அணியும் மோதின. உலக அணியில் பல்வேறு நாட்டு முன்னணி வீரர்கள் இடம் பெற்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கரும், கபில்தேவும் பங்கேற்றார்கள். இந்த போட்டியில் கவாஸ்கர் 80 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.அங்குதான் தனது ஓய்வு பெறும் முடிவை கவாஸ்கர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

“லண்டனில் நடைபெறும் இந்த 5 நாள் போட்டிதான் நான் கடைசியாக கலந்து கொள்ளும் டெஸ்ட் ஆகும். இந்தியா _ பாகிஸ்தான் இணைந்து நடத்தும் ரிலையன்ஸ் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் விளையாடுவேன். அதன் பிறகு கிரிக்கெட் ஆடமாட்டேன்.

எனக்கிருந்த கிரிக்கெட் பசி இப்போது அடங்கிவிட்டது. ஏன் ஓய்வு பெறவில்லை என்று யாரும் கேட்பதற்கு முன்பே விலகிவிடவேண்டும். ஏன் ஓய்வு பெறவில்லை என்று கேட்கும் வரை காத்திருக்க கூடாது.”
இவ்வாறு கவாஸ்கர் கூறினார். என்றாலும் கவாஸ்கர் சில ஆண்டு காலம் கிரிக்கெட் ஆடுவார் என்று எதிர்பார்த்தார் கள். ஆனால் 1987 நவம்பர் 9_ந்தேதி கிரிக்கெட் போர்டு தலைவர் ஸ்ரீராமனுக்கு தனது விலகல் கடிதத்தை கவாஸ்கர் அனுப்பி வைத்தார். இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான வாடேகர், பெடி, பட்டோடி நவாப் போன்றவர்கள் கவாஸ்கருக்கு புகழாரம் சூட்டி அவரது முடிவை வரவேற்றார்கள். “நான் பார்த்த கிரிக்கெட் வீரர்களில் இவர் (கவாஸ்கர்) தான் தலைசிறந்த வீரர்” என்று கிரிக்கெட் வீரர் தேர்வு குழு தலைவர் பாபுநட்கர்னி தெரிவித்தார்.
ஓய்வுக்குப்பிறகு சிறிது காலம் கவாஸ்கர் கிரிக்கெட் நடுவராகவும் (ரெப்ரி), பிறகு வர்ணனையாளராகவும் இருந்தார். தனது வாழ்க்கை சுயசரிதையையும், கிரிக்கெட் சம்பந்தமாக பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

தனது விக்கெட்டை எளிதில் வீழ்த்த இயலாத வியூகம் அவருடையது. வேகப்பந்தோ, ஸ்பின்னோ நேர்த்தியான Footwork, Hand-Eye Co-ordination இவற்றால் தடுப்பார்; விரும்பினால் தாக்குவார். நிதானமான அணுகுமுறை. செல்வத்தைச் சேர்ப்பதுபோல் ரன்களைச் சேர்ப்பவர். கருமியைப் போல் தனது விக்கெட்டைக் காப்பவர். எத்தனையோ ஓப்பனிங் பேட்ஸ்மேனைப் பார்த்துவிட்டது இந்தியா. இவரே மிகச் சிறந்தவர்.

தனது அறிமுகத் தொடரில் 774 ரன்கள். இன்றுவரை முறியடிக்கப்படாத சாதனை. 2 சதங்கள். இரண்டுமே ஒரே டெஸ்டில். மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக மட்டும் 13 சதங்கள். அன்றைய மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சு ஆக்ரோஷமானது.

குறைந்த ஸ்கோரில் இந்தியா ஒருமுறை விளையாடிக் கொண்டிருக்கும்போது கடைசி ஆட்டக்காரர்கள் காயமடைந்துவிடக் கூடாது என்றஞ்சி அன்றைய கேப்டன் வெங்கட்ராகவன் டிக்ளேர் செய்யும் அளவுக்கு மிரட்டலானது. 70 களில் ஹோல்டர், 80 களில் மால்கம் மார்ஷல்,ஜோயல் கார்னர், ஆண்டி ராபர்ஸ், மைக்கேல் ஹோல்டிங் வேகத்தில் வேங்கைகள். அவர்களுக்கெதிராகத் தலைக்கவசமின்றி கவாஸ்கர் பெற்ற சதங்கள் யாவுமே சாதனைகள்.

ஸ்ரீகாந்துடன் இவர் இணைந்து மிரட்டிய ஆட்டங்கள் ரசிகர்களின் திருவிழாக் காலங்கள். 1987 உலகக் கோப்பையில் இவரது முதல் ஒருநாள் சதம். இவர்கள் இருவரும் இணைந்து நியூஸிலாந்து அணியைப் போட்டியிலிருந்து விரட்டியதை ரசிகர்கள் மறக்கமாட்டார்கள். ஒருமுனையில் கவாஸ்கர் நிதானமாக ரன்களைச் சேர்க்க, மறுமுனையில் ஸ்ரீகாந்த் அதிரடியாக ரன்னெடுப்பார். இன்றைய அதிரடி ஆட்டக்காரர்களுக்கெல்லாம் முன்னோடி ஸ்ரீகாந்த்.

கவாஸ்கர் மீதான விமர்சனங்கள் நிறைய. கபில்தேவுக்குரிய அங்கீகாரம் தராதது, வெங்கட்ராகவன் தலைமையில் உலகக்கோப்பையில் 174 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தது இது போன்று இன்னும் இன்னும்! அவையெல்லாம் இந்த சாதனையாளரின் புகழைக் குலைக்க இயலவில்லை.

கவாஸ்கரின் சாதனைகளை பாராட்டி மத்திய அரசு 1977_ம் ஆண்டு “அர்ஜுனா” விருதும், 1979_ம் ஆண்டு “பத்மபூஷன்” விருதும் வழங்கி கவுரவித்தது.

இந்திய அரசின் பத்மபூஷன் விருது, இன்னும் பல விருதுகள் பெற்றவர். ஆட்டத்திலிருந்து ஓய்வு பெறும்போது 10,122 டெஸ்ட் ரன்கள் மற்றும் 34 சதங்கள். (அன்றைய உலக சாதனை!) . இன்றும் வர்ணனையாளராக, இந்தியக் கிரிக்கெட்டின் குரலாகத் திறம்படப் பணியாற்றுகிறார். இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் சார்பில் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top