Home » சிறுகதைகள் » தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!!!
தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!!!

தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்!!!

பூபதி ராஜன் என்ற சோழ மன்னனின் ஆட்சியில் இருந்த இடமே கீழ் தஞ்சாவூரில் உள்ள பூபதி ராஜபுரம் என்பது. அதுவே தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. வரகூர் தஞ்சாவூரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்.

இங்குள்ள வெங்கடேச பெருமான் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது. பல ஆலயங்கள் ஸ்வயம்புவாகத் தோன்றியதாகக் கூறப்படும் தெய்வங்களின் சிலையை கொண்டுள்ளதாக உள்ளதினால் அவை புனித தீர்த்தங்களாக ஆகி உள்ளன.

அவற்றில் காவேரியின் கிளை நதியான குடமுருட்டி நதிக்கரையில் அமைந்துள்ள, சோழர்கள் காலத்தை சேர்ந்த, எண்ணூறு அல்லது ஆயிரம் ஆண்டுகள் புராதானமான ஆலயம் எனக் கூறப்படும் இந்தத் தலமும் ஒன்று.

இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் தனது மடியில் தாயாரை அமர்த்திக் கொண்ட கோலத்தில் உள்ளார்.  அற்புதமான சோழ மன்னர்கள் காலத்துக் கலையில் காணப்படும் அதை வீர நாராயணன் எனும் சோழ மன்னனே  பிரதிஷ்டை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இங்குள்ள வெங்கடேச பெருமான் ஸ்வயம்புவாகத் தோன்றியவர் என்பது ஆலய வரலாற்றின் ஒரு பகுதி. அந்த ஆலய வரலாற்றுக்  கதை என்ன? 

கர்ண பரம்பரை செய்திகளின்படி ஆந்திராவில் வரஹாபுரி எனும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயண தீர்த்தர். அவருடைய தந்தையின் பெயர் நீலகண்ட சாஸ்திரிகள்.

வைஷ்ணவ பரம்பரையை சேர்ந்தவர். கிருஷ்ண லீலா தாரண்கிணி எனும் புகழ் பெற்ற நாட்டிய பாடல்களை இயற்றியவர். கி.பி. 1675 இல் அவதரித்த அவருக்கு கோவிந்த சாஸ்திரி என்று பெயரிட்டு இருந்தார்கள். அந்த காலங்களில் வேதங்களை பயில்வது வைதீக குடும்ப பிராமணர்களின் பழக்கம்.

அதை பின்பற்றியே அவரும் வேதங்களைப் பயின்றது மட்டும் அல்ல, அதன் கூடவே நடன சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். சில வருடங்களில் திருமணம் அடைந்தாலும் விரைவிலேயே குடும்பத்தை துறந்து சன்யாசத்தை ஏற்கும் மன நிலை ஏற்பட்டது. அதற்கும் ஒரு நிகழ்ச்சியே அடித்தளமாக அமைந்தது.

திருமணம் ஆன கோவிந்த சாஸ்திரியின் மனைவியின் வீடு கிருஷ்ணா எனும் நதிக்கரைக்கு அந்தப் பக்கத்தில் இருந்தது. அகவே மனைவி எப்போதாவது தன்னுடைய தாய் வீட்டிற்குப் போனால் அவளைக் காண வேண்டும் என்பதற்காக அந்த நதியில் நீந்திக் கொண்டுதான் அந்தக் கரைப் பகுதியை அடைய வேண்டும் என்ற நிலை. இப்படியாக இருந்தபோது ஒருமுறை அவருடைய மனைவி தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள்.

அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வழக்கம்போல நதியில் இறங்கி நீந்தத் தொடங்கினார். திடீர் என நதியில் எங்கிருந்தோ வந்த வெள்ளமும் சுழல் போன்றதும் ஏற்பட்டு அவரை நீந்த விடாமல் தடுத்தது. எத்தனை முயன்றும் அவரால் நீந்த முடியவில்லை. நதியில் முழுகப் போகின்ற நிலைக்கு வந்தவர் தன்னை மறந்து வேண்டினார் ‘கிருஷ்ணா, என்னை இந்த வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினால் நான் சங்கரரைப் போலவே சன்யாசத்தை ஏற்றுக் கொண்டு விடுகிறேன்’.

அவர் அப்படி சத்தியம் செய்து கொடுத்த அடுத்த கணம் வெள்ளம் வடியத் துவங்கியது. கலைப்படைன்தவர் அவர் அந்தக் கரையை அடைந்தார். ஆனால் நதியில் கிருஷ்ணருக்கு சத்தியம் செய்து கொடுத்ததை மனைவியிடம் சென்று எப்படி கூறுவது என்று யோசனை செய்தவாறு மனைவியின் வீட்டை அடைந்தார். அங்கு இன்னும் ஒரு ஆச்சர்யம். அவரைக் கண்ட அவரது மனைவிக்கு எந்த சலனமும் இல்லை.

வீட்டிற்கு வந்தவரை கணவராக பார்க்காமல், ஒரு சன்யாசி வந்துள்ளதைப் போல அவருக்கு உபசாரம் செய்து தட்சணையும் கொடுத்து அவரை திருப்பி அனுப்பியும் வைத்தாள். அதுவே அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு வேளை கிருஷ்ண பகவான் தன்னை சன்யாச கோலத்தை ஏற்கச் செய்யத்தான் அந்த நாடகத்தை நடத்தி உள்ளாரோ என்று குழம்பியவர் பல காலம் தனிமையில் இருந்தவாறு தியானம் செய்து வந்தார். மனம் பக்குவப் படத் துவங்கியது.

அதே சமயம் அது முதல் அவருடைய மனைவியும் முகம் கோணாமல் தனது கணவரும், சன்யாசி  ஆகி விட்டவரான கோவிந்த சாஸ்திரிக்கும் ஒரு குருகுலத்தில் ஒரு துறவிக்கு அவருடைய சீடர்கள் எப்படி பணிவிடை செய்வார்களோ அதைப் போலவே அனைத்து பணிவிடைகளையும் செய்து வரலானார். சன்யாச தீட்ஷை பெற்றுக் கொள்ள முடிவு செய்தாலும் அவருக்கு சன்யாச தீட்ஷை தருவதற்கு அந்த ஊரில்  தக்க ஆசான் கிடைக்கவில்லை. சில நாட்களாக அவருடைய உள்ளுணர்வு காசிக்குப் போகுமாறு அவரை தூண்டிக் கொண்டே இருந்தது.

ஆகவே ஒரு நாள் காசிக்கு கிளம்பிச் சென்றவர் அங்கு சிவராமானந்த தீர்த்தர் என்பவரை சந்திக்க நேர்ந்தது. தனது நிலையை விளக்கிக் கூறிய கோவிந்த சாஸ்திரிக்கு அவர் சன்யாச தீட்சையை முறைப்படி தந்து தனது சிஷ்யராக ஏற்றுக் கொண்டார். அங்கு அவருக்கு நாராயண தீர்த்தர் என்ற மறு பெயர் நாமகரணம் செய்யப்பட்டது. இப்படியாக கோவிந்த சாஸ்திரி என்பவர் நாராயண தீர்த்தர் என ஆனார்.

மெல்ல மெல்ல அவருக்கு பல மகான்களுடன் தொடர்ப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் போதேந்திர பிரும்ம ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதர ஐயாவாள் என்கிறார்கள். அவர்கள் இருவருமே அந்த காலத்தில் புகழ் பெற்றவர்கள். அவர்களிடமும் பாடங்களைப் பயின்றவருக்கு ஒருமுறை தீராத வாயிற்று வலி வந்துவிட்டது.

என்ன செய்தும் நோய் குணமாகவில்லை என்பதினால் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல பெரியோர்களின் அறிவுரைப்படி நோய் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பெருமாள் தலங்களுக்கு சென்று வேண்டிக் கொள்ளத் துவங்கினார். அதுவே அவர் பெருமாள் ஆலயங்கள் பலவற்றுக்கும் விஜயம் செல்வதை துவக்கிய கட்டம் என்றும் கூறலாம். ஆனாலும் நோய் குணமாகவில்லை.

அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்தவர் ஒருமுறை நடுக் காவேரி எனும் கிராமத்தில் வந்தடைந்தபோது இரவாகி விட்டது. வயிற்று வலியும் தாங்கவில்லை. எதையும் உண்ண முடியாமல் அவதிப்பட்டவர் இரவில் எங்கு போய் தங்குவது என குழம்பியவாறு, வேறு வழி இன்றி அங்கிருந்த பிள்ளையார் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் படுத்துக் கொண்டார்.

அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய ஒரு முதியவர் உருவில் தோன்றிய பெருமாள் காலையில் எழுந்ததும், அவர் முன்னால் யார் தென்படுகிறார்களோ அவர்களை பின் தொடர்ந்து சென்று பெருமாளை தரிசிக்குமாறும், அதை செய்தால் வயிற்று வலி பிணி தீரும் என்றும் கூறினார். வந்தது கனவே என்றாலும் சரி அதையும் செய்யலாம் என முடிவெடுத்த நாராயண தீர்த்தர் வாயிற்று வலியோடு தூங்கினார். மறுநாள் விடிந்தது. அவர் கண் விழித்ததும் முதலில் கண்ணில் பட்டது ஒரு வெள்ளைப் பன்றியே. இறைவனது கட்டளைப்படி அவர் அதைப் பின்பற்றி சென்றார்.

அந்தப் பன்றியும் நேரே பூபதிராஜபுரம் கிராமத்தில் நுழைந்து, தற்போது அங்குள்ள வேங்கடேசபெருமாள் ஆலயத்துக்குள் நுழைந்து மறைந்து விட்டது. எத்தனை தேடியும் அதைக் காணவில்லை. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள் புரிந்துள்ளார் என்பதை அறிந்து கொண்ட நாராயண தீர்த்தார் அங்கிருந்த பெருமாளை வணங்கித் துதித்தார். அடுத்த கணமே அவரது வயிற்று வழியும் மாயமாக அகன்றது.

மகிழ்ச்சியில் பெருமாளை போற்றி அங்கேயே கீர்த்தனை பாடத் துவங்க, பெருமாள் அவருக்கு ருக்மிணி மற்றும் பாமாவுடன் சேர்ந்து கிருஷ்ணரின் உருவில் காட்சி கொடுத்தார். அந்த மகிழ்ச்சியில் மேலும் அவர் அங்கு பாடியதே கிருஷ்ண லீலா தரங்கிணி என்பது. பெருமாள் வராக ரூபத்தில் வந்து அவருக்கு காட்சி கொடுத்ததினால் பிற காலத்தில் அந்த கிராமம் வரகூர் என்ற பெயரையும் அடைந்தது.

இந்த ஆலயத்தில் மிகவும் பிரபலமானது உருயடி உற்சவம். பெருமாள் கிருஷ்ணர் வடிவில் வந்து காட்சி அள்ளித்ததினால் கிருஷ்ணருக்குப் பிடித்தமான உரியடி போன்ற ஆட்டத்தை ( உரியில் வைத்து இருந்த வெண்ணையை எடுத்து உண்ட கிருஷ்ணரின் கதை) இங்கு திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். அதை இந்த ஆலயத்தில் கொண்டாடுவதற்கான தத்துவம் ஒன்று உள்ளது.

கடவுளைக் காண்பது எளிதல்ல. விடா முயற்சி கொண்டு, எத்தனை ஏமாற்றம் பெற்றாலும், அவர் நாமத்தை விடாமல் மனதில் உறுதியாகக் கொண்டால் கடவுளைக் காணலாம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக கடவுளே உறி மீது கட்டப்பட்டு பொருள், வெண்ணை தடவிய கட்டை மீது எத்தனை வழுக்கினாலும் ஏறச் சென்று அல்லது தண்ணீரை பீச்சி அடித்து முகத்தை மறைத்தாலும், விடாமல் பலரது தோளின் மீது ஏறிச் சென்று, உறியை தட்டிப் பறிப்பதைப் போல, எந்த வழியிலாவது தீர்மானமாகச் சென்று கடவுளை அடைவதைக் காட்டும் நிகழ்ச்சியாக இந்த விழா அமைந்து உள்ளது. ஆண்டு தோறும் ஆவணியில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் அதாவது காயத்திரி ஜபத்தன்று தொடங்கிப் பத்து நாட்கள் இவ்விழா நடைபெறும்.

முதல் நாள் அன்று உறியடி, அதற்கு அடுத்த நாள் அன்று ருக்குமணி கல்யாணம், மற்றும் கடைசியாக ஹனுமார் ஜெயந்தி என திருவிழாகைக் கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழாவை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் அவர் இயற்றிய கிருஷ்ண லீலா தரங்கிணியில் கொடுத்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

கிருஷ்ணரின் லீலையை எடுத்துக் காட்டுவதே இனிமையும் எளிமையம், சொல்லழகும், பக்தி சுவையும் நிறைந்த நூலான கிருஷ்ண லீலா தரங்கிணி. இந்த நூலை இசை நாடகமாக மேடையில் அரங்கேற்றுவதற்கு ஏற்ற முறையில் நாராணய தீர்த்தர் இயற்றியிருக்கிறார்.

கிருஷ்ண லீலா நாட்டிய நாடகம் 

பின்னர் பல ஊர்களுக்கும் விஜயம் செய்து பக்தியைப் பரப்பி வந்தார். கடைசி கட்டத்தில் வரகூருக்கு வந்து நீண்ட நாட்கள் தங்கினார். அதன் பின்பு திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கு ஒரு சோலைப் பகுதியில் இருந்த மாமரத்தடியில் சென்று நிஷ்டையில் அமர்ந்து விட்டார்.

வெகு நாட்கள் கழித்து கண்விழித்த அவர், தனது 70 ஆவது வயதில் ஜீவ சமாதி அடைந்து விட்டார் என்றும், தற்போது அவர் சித்தியடைந்த இடம் குன்றக்குடி ஆதீனத்தினால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள்.

மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது.

இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.

பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, வாழ்ந்து வந்தவர் ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற துறவி.

ஒருநாள், இவரது சீடர்கள், ஏராளமான பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து, அவர் பாதங்களில் சமர்ப்பித்தனர்.

‘இவை எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைத்தன…’ என, ஸ்ரீநாராயண தீர்த்தர் கேட்டார்.

அதற்கு சீடர்கள், ‘குருவே… காஷ்மீரி கவி என்பவர், அதிகம் படித்து விட்டோம் என்ற கர்வத்திலும், வாதப் போரில் அனைவரையும் வென்று விட்டோம் என்ற அகங்காரத்திலும் இருந்தார்.

அவரை நாங்கள், வாதப்போரில் வென்று விட்டோம். தோற்றுப்போன அவர், சமர்ப்பணம் செய்த பொருட்கள் தான் இவை…’ என்றனர்.
உடனே நாராயண தீர்த்தர், ‘இந்தப் பொருட்களையெல்லாம் காஷ்மீரி கவியிடமே திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஒருவருடைய மன வருத்தத்தால், கிடைத்த பொருள் நமக்கு வேண்டாம்…’ என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார்.

இத்தகைய நல்ல உள்ளம் கொண்ட நாராயண தீர்த்தர், ஏழு ஆண்டுகள் கடுமையான வயிற்று வலியால், வேதனையை அனுபவித்து வந்தார். வலியின் வேதனை தாளாமல், பகவானை நோக்கி, தன்னுடைய வயிற்று வலிக்கான காரணத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

அதன் விளைவாக, பெருமான், பூபதிராஜபுரம் எனும் திருத்தலத்தில் அவருக்கு காட்சி தந்து, ‘நாராயண தீர்த்தரே… நீர் முற்பிறப்பில், பத்மநாபன் என்னும் ஏழை அந்தணனாக பிறந்திருந்தாய்.

அப்போது, நீ சாதுக்களிடம் கொண்ட அன்பின் காரணமாக, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரிக்க நினைத்தாய். அதற்காக, செல்வந்தர் ஒருவரிடம் சிறிது கடன் வாங்கி, சிறிய கடை வைத்து, அதில் அரிசி முதலான தானியங்களை விற்பனை செய்யத் துவங்கினாய்.

அதில் கிடைத்த லாபத்தில், நீ நினைத்ததைப் போலவே, அவர்களுக்கு அன்னமிட்டு உபசரித்தாய். நாட்கள் செல்லச் செல்ல, இன்னும் பெரிய அளவில் தானங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாய்.

‘அதன் விளைவாக, தானியங்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்கத் துவங்கினாய். அதில் கிடைத்த பணத்தில், பாகவத ஆராதனை செய்து, வாழ்ந்து, இறுதியில், உலக வாழ்வை நீத்தாய்.

‘நீ செய்த நற்செயல்களின் காரணமாக, உனக்கு இப்பிறப்பில், நற்குலத்தில் பிறப்பும், செல்வம், தெய்வ அனுக்கிரகமும் கிடைத்தன. அதே சமயம். உணவுப்பொருட்களில் கல்லையும், மண்ணையும் கலந்து விற்ற பாவத்தால், உனக்கு கடுமையான வயிற்று வலியும் வந்தது…’ என்றார்.

இதன் பின், பகவான் கிருஷ்ணரின் அனுக்கிரகப்படி, ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ எனும் பாடல்களைப் பாடி, தன் துயரம் தீர்த்தார் நாராயண தீர்த்தர். தவறு செய்தவர்கள், அதற்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். இறைவன் அருளால் மட்டுமே, துயரம் தீரும் என்பதை விளக்கும் வரலாறு இது.

விதுர நீதி!: தீயவர்கள், மற்றவர்களிடம், என்னென்ன நல்ல குணங்கள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதில், ஆர்வம் காட்டுவதில்லை. மற்றவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்பதை கண்டுபிடிப்பதில் தான், அக்கறை செலுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top