Home » படித்ததில் பிடித்தது » உலகக் கோப்பையும் கபிலும்!!!
உலகக் கோப்பையும் கபிலும்!!!

உலகக் கோப்பையும் கபிலும்!!!

உலகக் கோப்பையும் கபிலும்… சிறப்பு பகிர்வு..

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற நாள்  ஜூன் 25!!!

எழுபதுகளுக்கு பிந்தைய இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் தந்த ஒரு படம் மற்றும் நிகழ்வு இருக்குமென்றால் அது கபில்தேவ் உலகக்கோப்பை தூக்கிய அந்த தருணம் தான். அதற்கு முன் நடந்த உலகக்கோப்பைகளில் ஒரே ஒரு வெற்றியை பெற்றிருந்த இந்திய அணி உலகக்கோப்பை தூக்கும் என்பதை யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.

“இந்தியான் கோப்பை தூக்கினால் நான் என் தொப்பியை சாப்பிடுவேன்.” என்று விஸ்டன் எடிட்டர் முழங்குகிற அளவுக்கு இந்தியா கேலிக்குரிய அணியாக பார்க்கப்பட்டது. பெரிய நட்சத்திரங்கள் இல்லாத டெஸ்ட் போல முந்தைய உலகக்கோப்பைகளை ஆடிய அணி கலக்கி எடுத்து கோப்பையை வென்ற கதையின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கபில் தேவுக்கு இடமுண்டு.

எதுவும் முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த கபில் தேவிடம் படிக்க உண்டு பல பாடங்கள். பத்து மட்டும் இங்கே :

* கிடைக்கிற தருணத்தில் கில்லியாகு :

கிரிக்கெட் வாசனையே இல்லாத குடும்பத்தில் பிறந்திருந்தார் கபில். 13-வது வய்தில் கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்காக வந்த இடத்தில் ஒரு ஆள் குறைகிறது என்று சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தான் கபில். அப்பொழுதில் இருந்து அடித்து ஆடத்தொடங்கியது காலத்துக்கும் தொடர்ந்தது.

* என்னால் எதுவும் முடியும் :

நாற்பது வருடங்களுக்கு முன்னால் பிராபோர்ன் மைதானத்தில் வீரர்களுக்கு உணவு கம்மியாக வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. பதினைந்து வயது சிறுவன் கபில் ,”எனக்கு கூடுதலாக சாப்பாடு போடுங்கள் ! நான் வேகப்பந்து வீச்சாளன் !” என்ற பொழுது இந்தியாவில் அப்படி யாருமே இல்லையே என்று நகைத்தார்கள் சுற்றி இருந்தவர்கள். அப்பொழுது எதுவும் சொல்லாத கபில் ஒய்வு பெற்ற பொழுது அதிகபட்ச டெஸ்ட் விக்கெட்கள் அவர் வசமே இருந்தன

* புலிகள் போலியாக ஜெயிப்பதில்லை :

ஆஸ்திரேலிய அணியுடனான 1978 ஆம் வருடப்போட்டி அது. ஒரு சிக்ஸர் கபில் இருந்த பக்கம் பாய்ந்து வந்தது. நடுவர் பவுண்டரி என்று அறிவித்தார். கபில் அதை சிக்சர் என்று சொல்லி மாற்றினார். இந்திய அணி ஒரு ரன்னில் தோற்றுப்போனது. கிரிக்கெட் என்னவோ ஜெயித்திருந்தது.

* புதிய பாதை உன்னுடையது :

இந்தியர்கள் என்றால் சுழல்பந்து வீச்சுக்கு லாயக்கானவர்கள் என்கிற எண்ணமே எல்லா நாட்டவருக்கும் உண்டு. அதுதான் கபிலுக்கு முதல் டெஸ்ட் போட்டி. கபில் பாகிஸ்தானின் சாதிக் முகமதுக்கு பந்து வீசப்போனார். முதல் பந்தே இந்தியர் ஒருவர் அதுவரை வீசிய மிகவேகமான பவுன்சராக எகிறியது. உலகம் நிமிர்ந்து உட்கார்ந்தது அப்பொழுது தான்.

* கடந்தகாலம் கடந்து வா ! :

முந்தைய இரண்டு உலகக்கோப்பையை டெஸ்ட் போல ஆடிவிட்டு வந்திருந்தது இந்திய அணி. வெற்றி என்பதை சுவைத்ததே இல்லை என்கிற சூழலில் தான் உலகக்கொப்பைக்குள் நுழைந்தது அணி. கபில் தேவ் கூட்டு முயற்சியை தொடர்ந்து சாதித்தார். இறுதிப்போட்டியில் கம்மியான ஸ்கோர் அடித்ததும் ,”அடித்திருப்பது அருமையான ஸ்கோர். பந்து உங்களைத்தேடி வரக்கூடாது. பந்தை தேடி நீங்கள் போங்கள். கோப்பையோடு டெல்லி போகிறோம் நாம் !” என்று சொல்லி அடித்தார்.

* போராடத்தான் வந்தோம் நாம் :

இந்திய அணியினர் ஒரு நாளையும் டெஸ்ட் போல ஆடிக்கொண்டு இருந்த காலம் அது. அணிக்குள் ஒரு வேகத்தை புகுத்தியது கபில் தான் ! உலகக்கோப்பையின் முதல் போட்டியில் உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டிப்போட்ட அந்த எனர்ஜியை கடைசி வரை அணியை விட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார் அவர்.

“நாம் எதற்கும் லாயக்கில்லை என்பது எல்லாரின் கணிப்பும் ! நம்மால் முடிந்ததை செய்வோம் ; போராடிவிட்டுப்போவோம் !” என்பதே அவர் தந்த மந்திரம்

* வெற்றிக்கும்,தோல்விக்கும் இடையே ஒரே கோடு :

உலககோப்பையில் ஜிம்பாப்வே அணியுடன் போட்டி. வென்றால் மட்டுமே அரையிறுதி போகமுடியும் அணி என்கிற சூழல். 17/5 என்று அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. வந்தார் கபில். அடித்து ஆடினார். 17/5 175 என்கிற அவரின் ஸ்கோர் ஆனது. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள அந்த ஒரு கோடு உங்கள் மீதான சமரசமில்லா நம்பிக்கை

* சுற்றி எதிரிகளா ? சுழன்று அடி :

இங்கிலாந்து அணியுட பாலோ ஆனை தவிர்க்கப்போராடி கொண்டிருந்தது இந்திய அணி. ஆல் அவுட் எப்பொழுது வேண்டுமானாலும் ஆகலாம் என்கிற சூழல். எட்டி ஹெம்மிங்க்ஸ் பந்து வீச வந்தார். சுழன்று அடித்தார் கபில்.
அதிகமில்லை-தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் நான்கு சிக்ஸர்கள். இந்தியா தப்பித்தது

* ஓயாமல் ஓடிக்கொண்டிரு :

கிரிக்கெட் உலகின் ராட்சசன் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகக்கோப்பையை இந்தியாவிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிற மாதிரி ஆடிக்கொண்டு இருந்தார். மதன் லால் வீசிய பவுன்சரை தூக்கி அடித்தார். அது எங்கோ போய்க்கொண்டு இருந்தது. “கபில் மோசமான பந்தை வீசிவிட்டேன். விட்டுவிடு !” என்று மதன் லால் கத்திக்கொண்டே இருந்தார். கபில் பின்னோக்கி ஓடிக்கொண்டே அந்த பந்தை துரத்தினார். அந்த கேட்ச் இந்திய அணிக்கு கோப்பையை வென்று
தந்தது.

* கொடுக்கப்பட்ட கத்தியை கூர்தீட்டு ! :

கபிலின் இன்ஸ்விங் யார்க்கர் வெகு பிரபலம். கடைசி வரிசை பேட்ஸ்மன்களை அதைக்கொண்டு காலி செய்தவர் அவர். அவரிடம் இதைப்பற்றி கேட்கப்பட்ட பொழுது “கடவுள் எனக்கு அவுட்ஸ்விங்கர் தந்தார். நான் மிச்சத்தை
வளர்த்துக்கொண்டேன் !”.

அதே போல பந்துவீச்சாளராக தொடங்கி ஆல் ரவுண்டரானதும் ஆட்டத்தின் மீதான காதலை கூர்தீட்டிக்கொண்டதால் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top