Home » படித்ததில் பிடித்தது » திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!
திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!

திக்கற்றோருக்கு தெய்வமே துணை!!!

வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’

‘திக்கற்றோருக்கு தெய்வமே துணை!’

முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. அந்த பகுதியை கடைச்சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன்.

தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள்.

தமிழகத்தில் இவன் ஆண்ட பகுதி ஓய்மா நாடு என வழங்கியது. இவனும் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் எனப்பட்டான். இன்றைய திண்டிவனம் (திண்டிருணிவனம்- புளியங்காடு) கூட ஓய்மாநாட்டின் ஒரு பகுதிதான்! திண்டிவனத்தில் இப்பொழுது கிடங்கில் எனப்படும் பகுதியில் நல்லியக்கோடனின் கோட்டை இருந்துள்ளது. கிடங்கில் என்பது கோட்டையைக் குறிக்கும்.

திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தது இடைக்கழிநாட்டு நல்லூர். இடைக்கழிநாடு என்பது மரக்காணம் அருகே இன்றும் உள்ளது. இந்த நல்லூரைச் சேர்ந்த புலவர் நந்தத்தனார். இவர் நல்லியக்கோடன்மீது பாடியது தான் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல். இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடன் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளான்.

நல்லியக்கோடன் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடன்மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

“முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்’ எனும் கொள்கையுடையவன் நல்லியக்கோடன். அந்த நம்பிக்கையோடு தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டான்.

நல்லியக்கோடனின் அமைச்சன் ஒருவன் கெடுமதியாளன். அவன் பகைவருக்கு உளவு சொல்லித் தந்தான். அதனால் நல்லியக் கோடனின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சிதறின. தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தான் நல்லியக்கோடன். இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்றுவிட்டான்.

இந்த வேலூர் இன்று மாவட்டத் தலைநகராயுள்ள வேலூர் அல்ல. இது மரக்காணத்திற்கு அருகேயுள்ளது. இப்பொழுது “உப்பு வேலூர்’ என வழங்கி வருகிறது.

நல்லியக்கோடன் வேலூரிலுள்ள முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தான். “”ஐயனே, தோல்வியால் மானமழிந்தபின் இனி உயிர் வாழேன்” என்று கூறிவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்தான். “நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி (கிணறு) நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக” என்று திருவருளாணையிட்டு மறைந்தார்.

விழித்தெழுந்த நல்லியக்கோடன் புத்துணர்ச்சி பெற்றான். போர்க்களம் சென்றான்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர்மீது வீசினான். மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

“அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே’

என்கிறது பாடல்.

(அயில்- வேல்; வீட்டி- அழித்து; தெவ்வர்கள்- பகைவர்கள்; கொய்து- பறித்து.)

வேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சன் தலையை வெட்டி நல்லியக்கோடன் கையில் சேர்த்தது! நல்லியக்கோடனைக் காக்கும் வேல் கொடிய அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னன் நல்லியக்கோடனிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடன் ஓர் ஆலயம் எடுத்தான். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

ஓம் சரவண பவ!

வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top