Home » சிறுகதைகள் » லட்சியத்தில் வெற்றியடைய!!!
லட்சியத்தில் வெற்றியடைய!!!

லட்சியத்தில் வெற்றியடைய!!!

உங்கள் லட்சியத்தில் வெற்றியடைய

ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது.

மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான்.

அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.

தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூஜிக்கப்பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை…! என்று ஆணையிட்டான். உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது.

கொஞ்சநேரம் கழிந்தது. அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன்.

வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா? சீற்றமாக கேட்டார்.

மன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை. வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது; வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது.. நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான்.

பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு. இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும். லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top