தொலைநகலி!!!

பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொலைபேசியுடன் கூடவே அதைப்போன்ற வேறொரு கருவியும் உடன் இருப்பதைக் கண்டிருக்கலாம். இதுவே தொலை நகலி அல்லது ஃபேக்ஸ் எந்திரம் எனப்படுவது.

தொலைபேசி மூலம் சேய்மையில் இருப்பவரிடமும் தொடர்பு கொண்டு பேச இயலும். எழுதப்பட்ட செய்தி எதையும் இதன் வாயிலாகப் பரிமாற்றம் செய்து கொள்ள முடியாது; ஆனால் தொலைநகலி வாயிலாக இது இயலும். எனவே வணிக உலகில் இந்த எந்திரம் மிகுந்த பயனுள்ளதாக விளங்குகிறது.

இங்கிலாந்து நாட்டில் அலெக்சாண்டர் பெயின் (Alexander Bain) என்பவர் 1843ஆம் ஆண்டு ஒரு வகை எந்திரத்தை உருவாக்கினார். அவர் பல சோதனைகளையும் அதில் மேற்கொண்டார். அவரது சோதனைகளுக்குத் தேவைப்பட்ட கருவிகள் இரண்டு பேனாவும் செம்புக் கம்பிச்சுருளால் கட்டி இணைக்கப்பட்ட இரண்டு ஊசல்களுமே (pendulums) ஆகும். செம்புக் கம்பிச்சுருளில் இருந்த ஒரு பேனா எழுதும்போது, அதே சுருளில் மற்றோர் இடத்தில் இருந்த இரண்டாவது பேனா, முதல் பேனா எழுதியதை நகல் எடுக்கத் துவங்கியது. ஆனால் அவர் இந்தச் சோதனையைப் பொதுமக்களிடம் விளக்கிக் கூறவில்லை.

பின்னர் 1851ஆம் ஆண்டு ஃபிரெட்ரிக் பேக்வெல் (Fredric Bakewell) என்பவர் லண்டனில் நடைபெற்ற உலக வணிகப் பொருட்காட்சியில் இதனை மக்களிடம் விளக்கிக் காட்டினார். தொடர்ந்து 1862ஆம் ஆண்டு இத்தாலி மருத்துவர் ஒருவர் இக்கருவியை ஒத்த வேறோர் கருவியை உருவாக்கி அதற்கு பான் டெலிகிராஃப் (Pan telegraph) எனப் பெயரிட்டார். இக்கருவி பெயின் உருவாக்கிய கருவியின் கோட்பாட்டில் அமைந்திருந்தது. “பிரெஞ்ச் அஞ்சல் மற்றும் தந்திச் சேவை” என்ற நிறுவனம் இச்சாதனத்தை 1856 முதல் 1870 வரை செய்திகளையும் பதிவேடுகளையும் பரிமாற்ரம் செய்து கொள்ளப் பயன்படுத்தியது.

ஆர்தர் கோர்ன் (Arthur Korn) என்ற ஜெர்மன் நாட்டு அறிவியல் அறிஞர் 1902ஆம் ஆண்டு ஒளிப்படங்களையும் (photographs) அனுப்பக்கூடிய ஓர் எந்திரத்தை உருவாக்கினார். இத்தகையதொரு புதிய தொலைநகலி எந்திரத்தைக் கண்டறிந்த பெருமை அவரையேச் சேரும். இந்த எந்திரம் ஒரு ஒளிஉணரி உருளையையும் (photosensitive cylinder) ஒரு ஒளிப்படத் தாளையும் கொண்டிருந்தது. அந்நாளில் பல ஜெர்மன் நாட்டுச் செய்தித்தாள் நிறுவனங்கள் இந்த எந்திரத்தைப் பயன்படுத்தி வந்தன.

பின்னர் 1925ஆம் ஆண்டு ஒரு பிரென்ச் நாட்டு விஞ்ஞானி இதன் ஒளிப்படத் திறனை அதிகரித்து இக்கருவியை மேம்படுத்தினார். இந்த எந்திரமே சிற்சில மாறுதல்களுடன் தொலைநகலி எந்திரமாகத் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இரு பேனாக்களுடனும் செம்புக் கம்பியுடனும் துவங்கிய இக்கருவி இன்று தொலை நகலிக் கருவியாகப் பயன்பட்டு வருவது உண்மையிலேயே வியப்புக்குரியதாகும்.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top