Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » செயற்கைத் துணைக்கோள்!!!

செயற்கைத் துணைக்கோள்!!!

அறிவியல் அறிவு வளர வளர, விண்வெளி பற்றியும் இப்புவியின் பல்வேறு பகுதிகளில் நடப்பவை பற்றியும் அறியும் ஆவல் மனிதனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாகத் தோன்றியதுதான் செயற்கைத் துணைக்கோள்கள் ஆகும்.

செயற்கைத் துணைக்கோள்கள் உண்மையில் மனிதரால் உருவாக்கப்பட்ட எந்திர சாதனங்களே. ராக்கெட்கள் எனப்படும் ஏவூர்திகளின் உதவியால் இத்துணைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.

செயற்கைத் துணைக்கோள்கள் இப்புவியைச் சுற்றிக் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (orbit) செல்லும்; அப்போது அவை பதிவு செய்த, திரட்டிய தகவல்களை அனுப்பி வைக்கும். இந்தத் துணைக்கோள்களின் உதவியுடன் புவியின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்குச் செய்தித்தொடர்பை ஏற்படுத்த முடியும்; மேலும் மழை, புயல், பருவநிலை, காலநிலை, கனிம வளத் தகவல்கள் போன்றவற்றையும் அறிய இயலும்.

ஆர்தர் சி. கிளார்க் என்ற புகழ் பெற்ற எழுத்தாளர் “கம்பியில்லா உலகம் (wireless world)” என்ற ஆங்கில அறிவியல் இதழில் 1945 அக்டோபர் திங்கள் ஓர் அறிவியல் கட்டுரையை எழுதினார். இது அறிவியல் உலகில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

இக்கட்டுரையில் கூறப்பட்ட செய்தி என்னவெனில், “ஒரு துணைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தி, அதன் துணையுடன் உலகின் ஒரு பகுதியிலிருந்து அனுப்பப்படும் செய்திகளை மற்றொரு பகுதியில் பெற இயலும்” என்பதாகும். அப்போது அனைவரும் இச்செய்தியை ஒரு கற்பனை என்றே கருதினர். ஆனால் இது உண்மையாக நடைபெறக் கூடியது என்பது பின்னாளில் நிறுவப்பட்டது.

அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையே நடைபெற்று வந்த பனிப்போர், வானியல் துறையில் பெரும் பங்கு வகித்ததே, இதற்கான முக்கிய காரணமாகும்.

செயற்கைத் துணைக்கோள்களை உருவாக்குவதற்கான ஆய்வு மையம் ஒன்று 1955ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஜான் ஹேகன் என்ற சிறப்பு வாய்ந்த அறிவியல் அறிஞர் தலைமையில் நிறுவப்பட்டது. ரஷ்யாவும் இதே நோக்கத்திற்காக அனடோபி மற்றும் போலொஸ்கோவ் என்ற இரு அறிஞர்களின் தலைமையில் ஆய்வு மையம் ஒன்றை இதே காலப்பகுதியில் அமைத்தது.

இப்போட்டியில் 1957 அக்டோபர் 4ஆம் நாள் அன்று ஸ்புட்னிக் –1 என்ற செயற்கைத் துணைக்கோளை விண்ணில் ஏவி ரஷ்யா உலகை வியக்க வைத்தது. இதுவே முதலாவது செயற்கைத் துணைக்கோள்; இதன் விட்டம் 58 செ.மீ., எடை 82 கிலோகிராம். இது 96 நிமிடத்திற்கு ஒரு முறை புவியின் 226 கி.மீ. முதல் 940 கி.மீக்கு இடைப்பட்ட உயரத்தில் உலகைச் சுற்றி வந்தது. ஏவூர்திகளின் உதவியுடன் இச்சோதனைத் துணைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் விடப்பட்டது. ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின் 1958 ஜனவரி 4 ஆம் நாள் இத்துணைக்கோள் தனது சேவைகளை முடித்துக்கொண்டு கடலுக்குள் முழ்கியது.

ரஷ்யாவின் சாதனையைக் கண்டு அதிர்ந்து போன அமெரிக்கா, ஸ்புட்னிக்–1ஐ விட எடை குறைவான துணைக்கோளை வேன்கார்ட்–1 என்ற பெயரில் அனுப்புவதற்கு முயன்றது. ஆனால் இம்முயற்சி தோல்வியடைந்தது.

இதற்கிடையில் ரஷ்யா மேலும் ஒரு படி முன்னேறி 1957 நவம்பர் 3 ஆம் நாள் ஸ்புட்னிக்–2 என்ற துணைக்கோளை, லைகா என்ற நாய் ஒன்றை அதில் உயிருடன் வைத்து, விண்வெளிக்கு ஏவியது. அத்துணைக்கோள் புவிக்குத் திரும்பும் வரை அதில் இருந்த நாய் உயிருடன் நலமாக இருந்தது. இதன் மூலம் உயிரினங்களும் விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற உண்மை நிரூபணமாயிற்று; மேலும் வளி மண்டலத்தில் (atmosphere) உள்ள கதிர்வீச்சுகள் பற்றிய விவரங்களும் தெரியவந்தன.

ஆனால் அமெரிக்காவின் நிலைமை வேறாக இருந்தது. வேன்கார்ட் வரிசையில் 1957 டிசம்பர் 6ஆம் நாள் ஒரு துணைக்கோளை அமெரிக்கா ஏவியது; அது 3 அடி உயரம் மேலெழுந்தவுடனே வெடித்துச் சிதறியது. மீண்டும் 1958 பிப்ரவரி 5ஆம் நாள் வேறொரு துணைக்கோளை ஏவி, அதுவும் 6.5 கி.மீ. உயரம் சென்றவுடன் வெடித்துச் சிதறியது.

அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் பொதுமக்களும் இத்தோல்விகளால் மனம் உடந்து கவலையில் ஆழ்ந்தனர். அடுத்து வெர்னர் வான் பிரவுன் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவினர் தம் முயற்சியில் வெற்றி பெற்று 1958 ஜனவரி 31ஆம் நாள் எக்ஸ்ப்ளோரர்–1 என்ற செயற்கைத் துணைக்கோளை விண்வெளியில் ஏவினர்; இதன் எடை 14 கிலோகிராம்.

இதனால் ஊக்கமடைந்த அமெரிக்கா 1958 மார்ச் 17இல் மேலும் ஒரு செயற்கைத் துணைக்கோளை விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக விண்வெளியை அடைந்த இத்துணைக்கோள், புவியின் சுற்றுப்பாதை நீள்வட்டம் (elliptical) வடிவில் உள்ளது எனவும், ஏற்கனவே கருதப்பட்டு வந்தது போல வட்டம் (round) அல்ல என்றும் வெளிப்படுத்தியது.

ரஷ்யாவும் 1958 மே திங்களில் மற்றொரு பெரிய செயற்கைத் துணைக்கோளை ஸ்புட்னிக்–3 என்ற பெயரில் ஏவியது. இத்துணைக்கோளில் ஓர் ஆய்வுக்கூடமே அமைந்திருந்து பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தத்தில் ஸ்புட்னிக் வரிசையில் ஏழு ஸ்புட்னிக் விண் ஓடங்களை ரஷ்யா ஏவியது.

யூரி காகரின் என்ற ரஷ்யர் 1961 ஆம் ஆண்டு விண் வெளியில் பயணம் மேற்கொண்டு நலமுடன் புவிக்குத் திரும்பி வந்தார். இதற்குப் போட்டியாக அமெரிக்காவும் 1969 ஜூலை 20ஆம் நாள் நெயில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் என்ற இருவரை அப்போலோ–II என்ற விண்வெளி ஓடத்தில், நிலவுக்கு அனுப்பி வைத்தது. நிலவில் முதன் முதலாக கால் பதித்த இவர்கள் நலமுடன் புவிக்குத் திரும்பி வந்து உலகையே வியக்க வைத்தனர்.

ஆர்யபட்டா என்ற தனது முதலாவது செயற்கைத் துணைக்கோளை இந்தியா 1975 மார்ச் 19 அன்று விண்ணில் ஏவியது. செய்திகள், காலநிலை அறிவிப்புகள் போன்றவற்றை அனுப்ப இத்துணைக்கோள் பயன்பட்டது.

பின்னர் 1979 ஜூன் 7இல் பாஸ்கரா என்ற தனது இரண்டாவது செயற்கைக் கோளையும் இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. புவியமைப்பு, நீர்வளம், காடுகள், கனிம வளம் ஆகியவை பற்றிய பல விவரங்களைத் திரட்டி இத்துணைக்கோள் புவிக்கு அனுப்பி வைத்தது.

இவ்விரு துணைக் கோள்களையும் ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடனேயே இந்தியா விண்ணில் ஏவிற்று. தொடர்ந்து மேலும் சில துணைக்கோள்களையும் இந்தியா விண்ணிற்கு அனுப்பி வைத்தது.

இதுவரை இறக்குமதி செய்த ஏவூர்திகளையே பயன்படுத்தி வந்த இந்தியா 1979 ஆகஸ்ட் 10இல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட SLV-3 என்ற ஏவூர்தியினைப் பயன்படுத்தி ரோஹிணி-1 என்ற துணைக்கோளை விண்ணில் ஏவியது. தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படும் கிரையோஜினிக் எஞ்சின்களுடனான ஏவூர்திகளைக் கொண்டு இந்தியத் துணைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top