Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 41

பண்டைய நாகரிகங்கள் – 41

இசை, விளையாட்டு, குளியல், வாழ்க்கை

ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 )

attila1வசதியுள்ளவர்களின் அன்றாட வாழ்க்கை    

அதிகாலை விழிப்பு. ஏழைகளுக்கு அன்னதானம். தன் நிலபுலன், விவசாயம் பற்றி விசாரித்துத் தகுந்த நடவடிகைகள் எடுத்தல், அரசாங்கப் பணிகள். அன்றாட வேலைகள் இத்துடன் முடிந்தன. லேசான சாப்பாடு, கொஞ்சம் தூக்கம். இதற்குப் பிறகு பொதுக் குளியல் அறைகளில் வெந்நீர்க் குளியல், பூங்காக்களில் உலா, உடற் பயிற்சிகள், புத்தகங்கள் படித்தல். மறுபடி வெந்நீர்க் குளியல், அடிமைகள் கொடுக்கும் மஸாஜ்.

குடும்பம்

ஆண்தான் குடும்பத் தலைவர். திருமணம் ஆனபிறகும், மகன் தன் வருமானம் முழுக்கத் தந்தையிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் காலம்வரை, அவன் தனக்கெனத் தனியாக எந்த சொத்துகளும் வைத்துக்கொள்ள முடியாது.

குடும்பத்தோடு வசித்து, அவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து, ஆனால், தாமரை இலைத் தண்ணீர்போல் எஜமானர்களோடு ஒட்ட அனுமதிக்கப்படாத அடிமைகளின் வாழ்க்கை சோக காவியம். ஏழைகளும், கொடுத்த கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களும், பிற நாடுகளிலிருந்து கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களும் அடிமைகளாக்கப்பட்டார்கள். இவர்கள்  சொந்தக்காரரின் சொத்து. அவர் அடிமைகளை வாங்கலாம், விற்கலாம். அடிமைகளின் குழந்தைகளும் அடிமைகள்தாம். அடிமைகளை வாங்கவும் விற்கவும் அடிமைச் சந்தைகள் இருந்தன.

வீட்டு வேலைகள், விவசாயம், தொழிற்சாலைகள் ஆகிய பல தளங்களில்  அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள். பெரும்பாலான இடங்களில்,  அடிமைகளுக்கு அடி, உதை, அரைப் பட்டினி, அநியாய வேலைச்சுமை ஆகியவைதான் கிடைத்தன. அவர்களை அன்போடு நடத்தி, கல்வியறிவு கொடுத்து, வாழ்க்கை ஏணியில் ஏறவைத்த ஒரு சில நல்ல குடும்பங்கள் விதிவிலக்கானவை.

குழந்தைகள்   

மக்கள் தொகைப் பெருக்கம் நாட்டின் கொள்கை. எனவே, குழந்தையின் வரவு கோலாகலமாக வரவேற்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை அப்பா முன்னால் கொண்டுவந்து வைப்பார்கள். அவர் குழந்தையைக் கைகளில் தூக்கினால், அது தன் குழந்தை என்று ஒத்துக்கொள்கிறார் என்று அர்த்தம். அப்படித் தூக்காவிட்டால், அந்தக் குழந்தை உயிர் வாழ வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை அவருக்கு உண்டு. ஆரோக்கியமில்லாத குழந்தைகளும், உடல் ஊனமுற்ற குழந்தைகளும் கொல்லப்படும் அல்லது பெற்றோரால் கைவிடப்படும். யாராவது எடுத்து வளர்ப்பார்கள். பின்னர்அவர்கள் அடிமைகள் ஆகிவிடுவார்கள்.

குழந்தை பிறந்த எட்டு நாட்கள் விதவிதமான பூஜைகள், சடங்குகள், பரிகாரங்கள் நடக்கும்.   முக்கியமாக, காத்து கருப்புகள் குழந்தைளைத் தொந்தரவு செய்யும் என்று நினைத்தார்கள்.    இதற்குப் பரிகாரமாக, வீட்டு வாசலை இரவில் மூடுவார்கள்.   வாசலில் மூன்று ஆண் அடிமைகள் ஒரு கையில் கோடரியும், இன்னொரு கையில் உலக்கையும் வைத்துக்கொண்டு காவல் இருபார்கள். வீட்டு வாசலைக் கோடரியாலும், உலக்கையாலும் பலமுறை தட்டுவார்கள். பிறகு வாசல்புறத்தைச்  சுத்தமாகப் பெருக்குவார்கள்.  இவற்றைச் செய்தால், துர்தேவதைகள் வீட்டுப் பக்கமே வராமல் பயந்து ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

குழந்தைகள் கழுத்தில், புல்லா  என்னும் தாயத்தைப் பூசாரி கட்டுவார். தங்கத்தால் செய்யப்பட்ட அதனுள் மந்திரித்த ஈயத்தகடு வைக்கப்பட்டிருக்கும். சிறுவர்கள் இளைஞர்களாகும்போது, சில மதச் சடங்குகள் செய்துவிட்டு, இந்தப் புல்லாவைக் கழற்றவேண்டும். பெண் குழந்தைகளுக்கு புல்லா கிடையாது.

சமூக வாழ்க்கை

ஆண்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டார்கள். ஃபாரம் என்னும் நகரின் மையப் பகுதியில் சந்தித்துப் பேசினார்கள். பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரைகளைக் கேட்டார்கள். வீர விளையாட்டுகளில் ஈடுபட்டார்கள். அல்லது அவற்றைக் கண்டு களித்தார்கள். பெண்களுக்கு இத்தனை சுதந்தரம் இல்லை. கடைகளுக்கும் சொந்தக்காரர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கும் மட்டுமே தனியாக வீட்டைவிட்டு வெளியே போனார்கள். திருவிழாக்கள், சர்க்கஸ், கோவில், விருந்துகள் ஆகியவற்றுக்குக்  கணவனுடன் மட்டுமே போக அனுமதிக்கப்பட்டார்கள்.

சமூக உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான மத அல்லது சமூகக் கொண்டாட்டங்களைத் திருவிழாக்களாக ஏற்பாடு செய்தது. இவை :

  • Feriae Stativae  –  ஒவ்வொரு வருடமும் குறிப்பிடப்பட்ட அதே நாட்களில் இந்த விசேஷங்கள் நடக்கும்.
  • Feriae Conceptivae-  இவற்றுக்குக் குறிப்பிட்ட நாள்கள் கிடையாது. பூசாரிகள் ஒவ்வொரு வருடமும் இவற்றுக்கான நாட்களைக் குறித்துக் கொடுப்பார்கள்.
  • Feriae Imperativae –  இவை வருடா வருடம் நடப்பவையல்ல. சாதாரணமாகப் போர்களில்  வெற்றி பெற்றால் கொண்டாடப்படும் விழாக்கள் இவை.

உணவுகள்

கோதுமைக் கஞ்சியும் ரொட்டியும்தான் முக்கிய உணவுகள். ரொட்டியைத் தேன், பாலாடை, முட்டை, சிக்கன், மீன்,  இறைச்சி ஆகியவற்றோடு சேர்த்துச் சாப்பிட்டார்கள். மீனும், சிப்பியும் சுவையான உணவுகளாகக் கருதப்பட்டன.  அவரைக்காய், வெங்காயம், பூண்டு, முட்டைக்கோசு ஆகிய காய்கறிகள் அவர்களுக்குப் பிடித்தமானவை. பழங்கள், தேன், வினிகர் என்னும் புளிச்சாறு ஆகியவற்றோடு சேர்த்து இறைச்சியும் காய்கறிகளும் சமைக்கப்பட்டன.

ரோமர்களுக்குப் பிடித்த பானம் ஒயின் என்னும் திராட்சை ரசம். ஆனால், இந்த ஒயின் போதைக்காக அருந்தப்படவில்லை. புளித்த திராட்சை ரசத்தில் தண்ணீர் ஊற்றி நீர்க்கவைத்துக் குடித்தார்கள். பால் குடிப்பது அநாகரிகமாகக் கருதப்பட்டது. பாலாடை செய்ய மட்டுமே பால் பயன்பட்டது.

பணக்காரர்களின் காலை உணவு பலமானது – பாலாடை, பழம், ரொட்டி, பால் அல்லது திராட்சை ரசம். பகல் உணவில் முதலில் முட்டை, மீன், பச்சைக் காய்கறிகள். அடுத்து வேகவைத்த மாமிசம், காய்கறிகள், கடைசியாகப் பழங்கள், இனிப்புக்கள். சோபாக்களில் படுத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். அடிமைகள் உணவு பரிமாறுவார்கள்.

உணவு சமைக்க மண், வெண்கலப் பாத்திரங்களும், பரிமாற மரம், வெண்கலம், வெள்ளி, எலும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கரண்டிகளும் பயன்பட்டன. உணவைக் கை விரல்களால் சாப்பிட்டார்கள்.

ரோமன் ஆடைகள்

அன்றைய ரோமர்களின் ஆடைகள் அதிகமாகக் கிடைத்த ஆட்டு ரோமம், லினன் ஆகியவற்றால் நெய்யப்பட்டன. பட்டும், பருத்தியும் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல உள்ளாடைகள் இருந்தன, பல வடிவங்களில் வந்தன. வடிவங்களுக்கேற்ப subligaculum, campestre, licium, cinctus என்னும் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. நம் ஊர்க் கோவணம் போன்ற இடுப்புத் துணியும் உண்டு. ஆண் பெண் இருபாலரும் இந்த உள்ளுடைகளை அணிந்தார்கள். இவற்றோடு பெண்கள் பிரா போன்ற மார்புக் கச்சு அணிந்தார்கள்.

மேலாடைகள் ட்யூனிக் என்று அழைக்கப்பட்டன. ஆண்களின் உடைக்கும், பெண்களின் உடைக்கும் ஒரே பெயர்தான். சாமானிய ரோமர்கள் உள்ளாடைகளுக்குமேல் ட்யூனிக் மட்டுமே அணிவார்கள். ஆண்களின் ட்யூனிக் அரைக்கைச் சட்டைபோல் இருக்கும்,  முட்டிவரை வரும். பெண்களின் ட்யூனிக்கில் சட்டை முழுக்கை. அவர்களின் கால்களை மூடித் தரையைத் தொடும் நீளம் இருக்கும்.

ரோமன் நாட்டுக் குடிமக்கள், வெளிநாட்டிலிருந்து வந்து ரோமில் வசிப்பவர்கள் ஆகிய எல்லோருமே ட்யூனிக் அணியலாம். ஆனால், ரோமன் பிரஜைகள் மட்டுமே அணிய அனுமதிக்கப்பட்ட உடை டோகா. போர்வைபோல் நீளமாக அரைவட்ட வடிவத்தில் இருக்கும். சுமார் 27 அடி நீளமும் 20  அடி அகலமும் சாதாரண அளவுகள். உடலின் மேல் பாகத்தையும் ஒரு கையையும் இது மறைக்கும்.  ஆரம்ப நாட்களில் வெற்றுடம்பில் டோகாவைப் போர்த்திக்கொள்ளூம் வழக்கம் இருந்தது. நாளவட்டத்தில் ட்யூனிக் அணிந்து அதன்மேல் டோகா போர்த்திக்கொள்ளும் நடைமுறை வந்தது.

ஆண்களும், பெண்களும் செருப்பு அணியும் வழக்கம் இருந்தது.

அழகுபடுத்துதல்

ஆண்கள் தாடி வளர்த்தார்கள், தினமும் சவரம் செய்துகொண்டார்கள். தலை முடியைக் குட்டையாக வெட்டிக்கொண்டார்கள். இளம்பெண்கள் முடியைச் சுருட்டி முதுகுப் பக்கமாய்ப் பந்துபோல் வைத்துக்கொள்வார்கள். திருமணமான பெண்கள் தலைமுடியைச் சுற்றி வளைத்து தலை நடுவில் பந்துபோல் ரிப்பன்களால் கட்டி வைத்துக்கொண்டார்கள். பொய்முடிவைத்துக் கேசத்தின் அடர்த்தியை அதிகமாக்கிக்காட்டுவது சர்வ சாதாரணமாக இருந்தது.

பெண்கள் இரும்பு, வெண்கலம், தங்கம் ஆகியவற்றால் செய்த நகைகளை அணிந்தார்கள்.    தம்மை அலங்கரித்துக்கொள்ள அவர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள் – நெக்லஸ் போன்ற கழுத்தணி, காதுத் தொங்கட்டான்கள், கைகளில் ப்ரேஸ்லெட்கள் ஆகியவை.  தங்கத்தால் செய்யப்பட்ட இந்த நகைகளில் முத்துக்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

பொழுதுபோக்குகள்

விளையாட்டுப் போட்டிகள் – மக்கள் கூட்டம் அலைமோதிய இரண்டு நிகழ்ச்சிகள்  தேரோட்டப் போட்டிகளும், கிளேடியேட்டர் சண்டைகளும்தாம். தேரோட்டிகளுக்கு நாடு முழுக்க ரசிகர் கூட்டம் இருந்தது. தேரோட்டிகளுக்கு அடுத்தபடியாக மக்கள் ஆதரவு பெற்றவர்கள் கிளேடியேட்டர்கள். லத்தீன் மொழியில் கிளேடியேட்டர் என்றால் வாள் வீரர் என்று பொருள். இவர்கள் பெரும்பாலும் அடிமைகள் அல்லது கைதிகள். வாள் சண்டை விளையாட்டை  முழு நேரத் தொழிலாகக் கொண்டவர்கள்.

நாடக அரங்குகள் – விளையாட்டுகள் நடக்கும் நாள்களில் நாடகங்கள் அரங்கேறுவது வழக்கமாக இருந்தது. இதற்காக தியேட்டர்கள் என்னும் தனியான நாடக அரங்குகள் இருந்தன. நாடகங்களில் ஆண் அடிமைகள் மட்டுமே நடித்தார்கள். பெண் வேடங்கள் போடுவதும் இவர்கள்தாம். பாத்திரங்களுக்கு ஏற்ப முகமூடி அணிவார்கள். வயதைக் காட்ட வெள்ளை, கறுப்பு விக் போடுவார்கள். ஒரே நடிகர் இரண்டு வேஷம் நடிப்பதும் உண்டு. காமெடி, டிராஜெடி நாடகங்கள் ஆகிய இரண்டு வகைகளும் இருந்தன.

கி.மு. முதல் நூற்றாண்டில் ஊமைக்கூத்துக்கள் (pantomimes)  தொடங்கின. பாட்டு, நடனம் ஆகியவற்றின் துணையோடு நடிகர்கள் சைகைகளால் நடிப்பை வெளிப்படுத்துவார்கள். காலப்போக்கில் ஊமைக்கூத்துக்கள் ஆபாசக் களஞ்சியங்களாயின.

பொதுக் குளிப்பிடங்கள்  – ரோமன் பொழுதுபோக்குகளில் பொதுக் குளிப்பிடங்களுக்குத் தனி இடம் உண்டு. ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோருமே இந்த வசதியை அனுபவித்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான குளிப்பறைகள் இருந்தன.

பொதுக் குளிப்பிடங்கள் 32 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தன. சில குளிப்பிடங்களின் சிதிலங்கள் இன்றும் காணக் கிடைக்கின்றன. குளிப்பிடங்களின் மையப் பகுதியில் 200 அடிக்கு 100 அடி அளவில் நீச்சல் குளம் இருக்கும். அருகில் சூடான தண்ணீர் கொண்ட தனி  நீச்சல் குளமும் இருக்கும். நெருப்பின் மூலமாக நீராவியை உருவாக்கினர்கள். இதைத் தரையின் அடியில் ஓடும்  குழாய்கள் மூலமாக நீச்சல் குளத்தின் அடிப்பாகத்துக்குக் கொண்டு போனார்கள்.

குளிப்பதற்கு மட்டுமல்லாமல், மக்கள் சந்திப்பதற்கும் இந்தக் குளிப்பிடங்கள் உதவின. கடைகள், உணவு விடுதிகள், பூங்காக்கள், உடற் பயிற்சி மையங்கள், மஸாஜ் செய்யும் இடங்கள், நூல் நிலையங்கள், பொருட்காட்சி சாலைகள் ஆகிய வசதிகளும் இந்தக் குளிப்பிடங்களில்  வந்தன.

தினமும் ஒரு முறையாவது இங்கே வந்து குளித்துவிட்டுப் போவது எல்லா ரோமர்களின் பழக்கம்.

விளையாட்டுக்கள்  – அரசாங்கத்தால் அடிக்கடி நாடு தழுவிய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தப் பொது விளையாட்டுகளுக்கு லத்தீன் மொழியில் லுடி என்று பெயர். இவை சாதாரணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் நடந்தன.

உடற் பயிற்சிகள் – தைபர் நதிக்கரையில் காம்ப்பஸ் என்னும் பெயரில் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. பொது மக்கள் ஓடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் இங்கே வருவார்கள். இளைஞர்கள் மேற்கொண்ட முக்கிய உடற்பயிற்சிகள் ஓடுதல், குதித்தல், குஸ்தி, மல்யுத்தம், நீச்சல் போன்றவை. காலால் பந்தை உதைத்தல், கையால் தூக்கி எறிந்து பிடித்தல் போன்றவை.

பணம்  படைத்தவர்களின்  சிறப்பான பொழுதுபோக்குகள் – ஆடம்பர விருந்துகள், பாட்டு,  நடனக் கச்சேரிகள், கவிதை அரங்குகள், பட்டிமன்றம் போன்றவை. இந்த வசதி இல்லாத சாமானியர்கள் சங்கங்கள் அமைத்தார்கள். இவைமூலமாக விருந்துகளும் பிற கோலாகலங்களும் நடத்தி, அந்தச் செலவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இசை ரசனை

ரோமர்கள் இசையை அனுபவித்தார்கள். குழந்தையின் பெயர் சூட்டு விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள், தனியார் விருந்துகள், மரண ஊர்வலங்கள் எனப் பிறப்பு முதல் இறப்புவரை ரோமர்கள் வாழ்க்கையில் இசைக்கு முக்கிய பங்கு இருந்தது.
ரோமின் தனித்துவமான சில இசைக் கருவிகள் இருந்தன. அவை:

வாயால் ஊதி வாசிக்கும் கருவிகள்: ட்யூபா என்னும் வெண்கல டிரம்பெட், கோர்னு (என்னும் ஆங்கில எழுத்து ஜி வடிவக் கருவி, புல்லாங்குழல் போன்ற ஒரு கருவி. சித்தாரா, லையர், லூட் ஆகியவை முக்கிய மீட்டும் இசைக் கருவிகள். ட்ரம், சிஸ்ட்ரம் போன்றவை நம் ஊர் மிருதங்கம்போல், தட்டுவதால் இசை எழுப்பும் இசைக் கருவிகள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top