Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 40

பண்டைய நாகரிகங்கள் – 40

மாடல் நகரம்

4romeஇரண்டாம் நூற்றாண்டில் ரோம்தான் மேற்கத்திய உலகின் பெரிய, சிறந்த நகரம். பிரம்மாண்டமான பொதுமக்கள் கூடும் இடம், அதைச் சுற்றி அரசுக் கட்டங்கள் எனச் சீராக வடிவமைக்கப்பட்டிருந்தது. பொது இடங்களுக்கு அருகே குறுகிய தெருக்கள். இந்தத் தெருக்களில், மக்கள், வியாபாரிகள், சாமான் தூக்கிச் செல்லும் அடிமைகள் என ஒரே நெரிசல். இந்தத் தெருக்கள் மனிதர் நடப்பதற்கே. எந்த வண்டிகளும் போகக்கூடாது.

மக்கள் தீவுகளாக வாழவில்லை. சமுதாயக் கூட்டு வாழ்க்கை ரோமாபுரியின் பெருமைக்குரியச்   சின்னம். சந்தைகள், விழாக்கள், விளையாட்டுக்கள், சந்திப்புகள் என அவர்களுக்குள் ஏராளமான உறவுச் சங்கிலிகள் இருந்தன. இதற்காகவே, நகரின் மையப் பகுதியில் ஃபாரம் என்னும் இடம் இருந்தது. இங்கே பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள் ஆகியவையும் நடந்தன.

அன்றைய ரோமில் குடிநீர் விநியோகம் இருந்திருக்கிறது. எனென்றால், நீர் நிலைகளிலிருந்து நகரின் பல பாகங்களுக்குத் தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்கள்பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன. குடிநீரில் ஈயம் கலக்கக்கூடாது என இன்றைய அறிவியல் சொல்கிறது. இதையே அன்றைய ரோம் கடைப்பிடித்திருக்கிறது. ரோமில் அப்போது பல ஈயப் பட்டறைகள் இருந்தன. இவற்றில் வேலை பார்த்த பலருக்கு உடல்நலப் பிரச்சனைகள் வந்தன. இந்த அடிப்படையில், வீட்டுத் தண்ணீர்க் குழாய்களை ஈயத்தால் செய்யக்கூடாது, களிமண் குழாய்களை உபயோகிக்கவேண்டும் என்று அரசு நெறிமுறை வகுத்திருந்தது.

குடிநீர் விநியோகத்தோடு, கழிவுநீர் அமைப்பும் கனகச்சிதமாக இருந்தது. கி.மு. 600 – இல் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் Cloaca Maxima (இந்த லத்தீன் வார்த்தைக்கு மாபெரும் கழிவுநீர் அமைப்பு  என்று பொருள்) என்னும் இத்திட்டம்தான் உலகின் கழிவுநீர்த் திட்டங்களுக்கு முன்னோடி.

ரோம் நகரத்தில் பல தாழ்வான பகுதிகள் இருந்தன. நகரமே மலைகளும் சமவெளிகளும் நிறைந்த இடம். இதனால், மழைக் காலங்களில் தாழ்வுப் பகுதிகளில்  தண்ணீர் தேங்கியது, மக்கள் நடமாட இடைஞ்சல் கொடுத்ததோடு அவர்கள் உடல்நலம் பாதிக்கும் நோய்கள் பரவவும் காரணமாக இருந்தது. மேற்கண்ட திட்டத்தின்மூலம் உபரித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு தைபர் நதியில் கலந்தது. இதன் சில பகுதிகள் பூமிக்கு அடியிலும், சில பகுதிகள் திறந்தவையாகவும் கட்டப்படிருந்தன.  இந்தக் கழிவுநீர் அமைப்பின் சில பகுதிகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

சமுதாய அமைப்பு

கி.மு. 600ம் ஆண்டே மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தினார்கள். கணக்கெடுப்பில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் சொல்லப்போவது அத்தனையும் உண்மை என்று சத்தியப் பிரமாணம் செய்யவேண்டும். அதற்குப் பிறகு தங்களின் வயது, சொத்து, தொழில் ஆகிய விவரங்களைச் சொல்லவேண்டும். இந்த விவரங்களின் அடிப்படையில் மக்கள் ஐந்து வகையினராகப் பிரிக்கப்பட்டார்கள். வரி விதிக்கவும், போர்களுக்கு வீரர்களைக் குறுகிய காலத்தில் திரட்டவும் இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வீடுகள்

பிரம்மாண்டமான பெரிய பங்களாக்கள், தனி வீடுகள், வரிசை வரிசையாகச் சிறிய வீடுகள் என வகை வகையான வீடுகள் இருந்தன.  எல்லா வீடுகளின் நடுப்பகுதியிலும், அட்ரியம் என்னும் முற்றம் இருக்கும். வீட்டின் அளவைப் பொறுத்து இவை சிறியவை அல்லது பெரியவையாக இருக்கும்.  அட்ரியம் விருந்தாளிகளை வரவேற்று உட்காரவைக்கும் அறையாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. முற்றத்தைச் சுற்றியோ அல்லது வாசல் பக்கமோ நிறையச் சின்ன அறைகள் இருக்கும்.  சில வீடுகளில் தனியான குளியல் அறைகளும் இருந்தன.  ஒரு கதவும், ஒன்றோ இரண்டோ ஜன்னல்களோ தெருவை பார்த்தபடி இருக்கும்.

வீட்டின் அளவும் அமைப்பும் வீட்டு சொந்தக்காரரின் பணவசதியைப் பொறுத்து அமைந்தன. பெரும் பணக்காரர்களின் வீடுகளில் பெரிய முற்றம் இருந்தது. இவை விருந்தாளிகள் உட்காரும் வரவேற்பு அறைகளாகவும், குடும்பத்தார் எல்லோரும் சேர்ந்து பொழுதுபோக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன. முற்றத்தைத் தாண்டினால், டாபுலே என்னும் அறை வரும். இது குடும்ப ஆவணங்கள், முன்னோர்களின் பொருள்கள், படங்கள் ஆகியவை பாதுகாக்கப்படும் அறை. இவை தவிரப் படுக்கை அறைகள் (க்யுபிக்குலி), ட்ரிக்லினியா என்னும் சாப்பாட்டு அறை, ஓசி  என்னும் வரவேற்பு  அறை, அடுக்களை,  கழிப்பறை எனத் தனித் தனி அறைகள் இருந்தன. சிலர் வீட்டில் நூலகங்களும் வைத்திருந்தார்கள்.

கி. மு. முதல் நூற்றாண்டில், மக்கள் தொகைப் பெருக்கத்தால், நகரங்களில் நிலம் தட்டுப்பாடானது. தனி வீடுகள் கட்டப் போதிய இடம் இல்லை. எனவே, வீடுகள் வரிசை வரிசையாகச் சேர்ந்திருக்கும் குடியிருப்புகள் வரத் தொடங்கின. அடுத்த கட்டமாக, மூன்றடுக்குக் கட்டடங்கள் வந்தன. இவற்றில் எட்டு குடியிருப்புகள் இருந்தன. சில குடியிருப்புகளில் தெருவை எதிர் கொண்டபடிக் கடைகளும் இருந்தன.

வீடுகளுக்குக் கற்களால் அஸ்திவாரம் போட்டார்கள். வீடு கட்ட வேலமரங்கள் பயன்படுத்தப்பட்டன. வேலமர விளார்களில் களிமண் தோய்த்து உபயோகப்படுத்தும் வழக்கம் இருந்தது. களிமண் செங்கல்களும் பயன்பட்டன. வீட்டின் கீழ்ப்பகுதியைச் சிவப்பாகவும், மேல்பகுதியை வெள்ளையாகவும் வண்ணம் அடிப்பார்கள்.

ரோமர்களுக்குத் தங்கள் வீடுகளை ஒவியங்களால் அலங்கரிப்பதில் அமோக விருப்பம். இயற்கைக் காட்சிகள் கொண்ட படங்களை வாங்கித் தங்கள் வீடுகளில் மாட்டினார்கள்.
வீட்டுச் சுவர்களைப் பல வண்ண மார்பிள் கற்களால் அலங்கரித்தார்கள்; வீட்டின் உட்புறச் சுவர்களில் மரங்கள்,  செடிகள், மிருகங்கள், கட்டங்கள் ஆகிய படங்கள் வரைந்தார்கள். தொடங்கினார்கள். வீட்டில் சிற்பங்கள் வைக்கும் பழக்கம் ஆரம்பத்தில் இல்லை, பின்னாட்களில்தான் வந்தது.

கடைகள்

வீடுகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் முன்பக்கம் கடைகள் இருந்தன. வீடுகளும் குடியிருப்புகளும் கட்டும்போதே கடைகள் அவற்றின் ஒரு பகுதியாகத் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன. சாதாரணமாகக்  ஓர் அறை மட்டுமே கொண்ட கடைகள் அவை. பல கடைகளில் சாமான்கள் ஸ்டாக் செய்துவைக்கக் கிடங்கும் இருந்தது. கடைகளில் உணவுப் பொருள்கள், வீட்டுச் சாமான்கள், ஒயின், ரொட்டி ஆகியவை விற்கப்பட்டன.   கடைவீதிகளில் பலசரக்குக் கடைகளோடு, மதுபானம் அருந்தும் இடங்களும் இருந்தன. கிரேக்கம், அரேபியா, எகிப்து, கால் ஆகிய பல நாட்டு வணிகர்கள் அங்கே வருவார்கள்.

கட்டடக் கலை

கட்டடங்கள், ரோம சாம்ராஜியத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒளிவிளக்குகள். இன்றய நிபுணர்களையே பிரமிக்கவைக்கும் பொறியியல் சாதனைகள். சில உதாரணங்கள்:

சர்க்கஸ் மாக்ஸிமஸ் (Circus Maximus)  

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கம் இது.  தேரோட்டப் பந்தயங்கள், வீர விளையாட்டுகள் ஆகியவை இங்கே நடந்தன. மரத்தால் உருவான இந்த அரங்கம் கி.மு. 31, கி. பி. 64  என்று இரண்டு முறை தீப்பற்றி எரிந்தது. இரண்டு முறையும் மறுபடி கட்டப்பட்டது. கி. மு. 103 ல் ரோம் தன் அதிகார உச்சியில் இருந்த காலம், ட்ராஜன் மன்னர் அரங்கத்தை 2000 x 500 அடி அளவில் பெரிதாக்கினார். அரங்கமும் மார்பிள் கற்களால் இரண்டு அடுக்கு மாளிகையாக உயர்ந்தது. இங்கே இறுதியாக கி. பி. 549ல் தேரோட்டப் போட்டி ஒன்று நடந்ததாக நிரூபணங்கள் கிடைத்துள்ளன. இன்று சர்க்கஸ் மாக்ஸிமஸ் இல்லை. அங்கே வெறும் புல்தரை மட்டுமே இருக்கிறது.

Colosseum ஸ்டேடியம்

50,000 பேர் உட்காரும் சுற்றரங்கம். மக்கள் ரசித்துப் பார்த்த வாள் சண்டை, வீரர்களுக்கான போட்டிகள், விலங்கு மனித விளையாட்டுப் போட்டிகள், மாதிரி கப்பற்படைப் போர்கள். இந்த ஆடுகளம் இன்று சிதிலமடைந்திருந்தாலும், நிலைத்து நிற்கிறது, பிரமிக்க வைக்கிறது. எப்போது கட்டினார்கள் தெரியுமா? கி.பி. 70  தொடங்கி, கி.பி. 80 முடித்த பொறியியல் பிரம்மாண்டம்!

பிரம்மாண்ட கட்டடங்கள் இன்னும் பல பண்டைய நாகரிகங்களிலும் உள்ளன. ஆனால், அவற்றை அன்றே, அறிவியல் பூர்வமாக அணுகியவர்கள் ரோமர்கள். மார்க்கஸ் விட்ருவியஸ் போலியோ (Marcus Vitruvius Pollio), கி.மு 80 முதல் கி.மு 17 வரை வாழ்ந்ததாகக் கருதப்படும் கட்டடக் கலை நிபுணர், பொறியியல் வல்லுநர், எழுத்தாளர். ஜுலியஸ் சீஸரின் போர்ப் படையில் பொறியியல் வல்லுநராகப் பணியாற்றிய இவர்தான் உலகத்தின் முதல் எஞ்சினியர் என்று சில சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

டீ ஆர்க்கிட்டெக்ச்யுரா  என்னும் தலைப்பில் கட்டடக் கலை பற்றிப் இவர் பத்துப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். கட்டடக் கலைக் களஞ்சியம் இது. கட்டக்கலை தாண்டி கட்டட நிர்வாகம், சிவில் எஞ்சினீரிங், கெமிக்கல் எஞ்சினீரிங், மெக்கானிக்கல் எஞ்சினீரிங், மிலிட்டரி எஞ்சினீரிங், நகர உருவாக்கத் திட்டம் என ஏராளமான தொழில்நுட்பத் துறைகளை இந்தப் புத்தகங்கள் ஆழமாக அலசுகின்றன.

நெடுஞ்சாலை

Appian Way என்னும் சாலை ரோமின் புராதனப் பெருமைகளில் ஒன்று. கி.மு. 312 – இல் அப்போதைய கான்சலாக இருந்த அப்பியஸ் க்ளாடியஸ் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது. பெயர்க் காரணமும் அவர்தான்.     ரோம் நகரத்தையும், ப்ரிண்டிஸி துறைமுகத்தையும் இணைக்கும் இந்த 132 மைல் சாலை இன்றும் நிலைத்து நிற்கிறது. 2300 வருடங்களுக்கு முன்னால் ரோமர்கள் கையாண்ட தொழில்நுட்பம் இன்றைய பொறியியல் வல்லுநர்களையே பிரமிக்கவைக்கிறது.

பாதையில் ஒரு பகுதி காடும் புதருமான இடம், இன்னொரு பகுதி சதுப்பு நிலம், மிச்சப் பகுதி புழுதி படர்ந்த இடம். புதரையும், காட்டையும் வெட்டிச் சீராக்கினார்கள். சதுப்பு நிலத்தில் சேறை நீக்கி அடிப்பாகத்தை உறுதியாக்கினார்கள்.

இந்த அடிப்படை வேலைகள் முடிந்தவுடன்  முழு சாலையும் தரைமட்டமாக்கப்பட்டது. அதன்மேல் ஜல்லி அடித்தார்கள். இதற்குமேல் சுண்ணாம்புக் கலவை  பூசி பெரிய கற்கள் வைத்தார்கள், சமசீராய், கத்தியின் கூர்முனைகூட நுழையமுடியாமல் நெருக்கமாக, இறுக்கமாக சாலைகள் இருந்தன என்று ஆதாரங்கள் சொல்கின்றன.

சாலையின் நடுப்பாகம் மேடாகவும், ஓரங்கள் நடுவிலிருந்து ஒரே கோணத்தில் சரிவாகவும் இருந்தன. ஓரங்களில் பள்ளமான ஓடைகள் இருந்தன. மழை பெய்யும்போது தண்ணீர் கட்டாமல், போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் செய்த யுக்தி இது. இந்த அபார வேலையை ஒரே வருடத்தில் முடித்துக் காட்டியது நம்ப முடியாத இன்னொரு ஆச்சரியம்!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top