Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 39

பண்டைய நாகரிகங்கள் – 39

ரோம நாகரிகம்

ரோம நாகரிகம் (கி. மு. 753  – கி. பி. 476 )

தனித்துவம்

Spaeth-1நாம் இதுவரை பார்த்த ஆறு நாகரிகங்களுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. மெசபொடோமியா, எகிப்து, சீனா ஆகியவை பெரிய நாடுகள். மாயன் நாகரிகம் நடந்த இடம் இன்று ஐந்து நாடுகளாக இருக்கும் நிலப்பரப்பு. சிந்து சமவெளி சுமார் பதின்மூன்று லட்சம் சதுர மைல் பரப்பளவு. கிரேக்கம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகர ராஜ்ஜியங்கள் கொண்டது. ரோம நாகரிகம் தழைத்து வளர்ந்தது ரோம் என்கிற ஒரே ஒரு நகரத்தில்!

நாகரிகச் சான்றுகள்

பழங்கால  நாகரிகங்களை ஆராய்ச்சி செய்பவர்களுக்கு முக்கியப் பிரச்னை தகுந்த ஆதாரங்கள் கிடைப்பதுதான். இந்த வாக்கு ரோமாபுரிக்குப் பொருந்தாது. ஏராளமான ஆதாரங்கள் கல்வெட்டுகளாக, பண்டைக் கால சரித்திரப் படைப்புகளாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை:

புத்தகங்கள்

முதலில், கிரேக்க நாட்டு  வரலாற்று ஆசிரியர் புளூடார்க். கி.மு 45 முதல் கி.மு 120 வரை வாழ்ந்த இவர் மொத்தம் 227 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றுள் பேரலல் லைவ்ஸ் என்னும் நூல் ரோமாபுரியின் வரலாற்றுப் பிரியர்களுக்குத் தங்கச் சுரங்கம்.

இங்கிலாந்து நாட்டு வரலாற்று எழுத்தாளர் எட்வர்ட் கிப்பன் படைத்திருக்கும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்  என்ற மாபெரும் வரலாற்றுப் புத்தகம். பன்னிரெண்டு வருட ஆராய்ச்சியில் உருவானது.  ஆறு பாகங்கள், 2768 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு அது.

பாலிபியஸ் கி.மு. 200 – கி, மு 117 எழுதிய The Histories  என்ற புத்தகம். 40 பகுதிகள் கொண்டது. இதில் கி.மு. 220 முதல் கி.மு. 146 வரையிலான ரோமாபுரி வரலாறு, ரோமின் அரசியல் சட்டம் ஆகியவை பற்றி விவரமாக எழுதியுள்ளார். இவற்றுள் 5 முழுப் புத்தகங்களும் 35 புத்தகங்களின் பகுதிகளும் கிடைத்துள்ளன.

சிசரோ கி.மு. 106 – கி. மு. 43 எழுதிய On The Republic, On The Laws என்னும்  புத்தகங்கள் அன்றைய அரசியல் நிலைமையையும், நிர்வாகத்தையும் அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவர் எழுதிய 774 கடிதங்களையும் தேடிக் கண்டுபிடித்து, தொகுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள். அன்றைய ரோமை அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் இவர்.

ரோம் என்றாலே, நம் நினைவுக்கு வருபவர் ஜூலியஸ் சீஸர். கி.மு. 100 முதல் கி. மு. 44 வரை வாழந்த இவர் மாவீரர் மட்டுமல்ல, மிகச் சிறந்த படைப்பாளி.  Commentaries on the Gallic War, Commentaries on the Civil War ஆகிய இரண்டு புத்தகங்களும் சீஸரின் போர்க்கள நினைவுக் குறிப்புகள். அக்கால ராணுவம், போர் முறைகள், ஆட்சி, அரசியல் ஆகியவை பற்றித் தெளிவாக இவை விளக்குகின்றன.

சாலஸ்ட் (Sallust) கி.மு. 86 – கி. மு. 35. Jugurthine War, Catiline Conspiracy, Histories ஆகியவை  இவருடைய படைப்புகள்.   அன்றைய அரசியலை, ராஜதந்திரங்களை, சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்ள இவை உதவும்.

லிவி (Livy) கி.மு. 59 – கி. பி. 17. முழுநேரச் சரித்திர எழுத்தாளர். ரோமாபுரியின் வாழ்க்கையை எழுதுவதற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முப்பதாம் வயதில் ரோமாபுரியின் வரலாற்றை எழுதத் தொடங்கிய இவர் தன் 142 – வது புத்தகத்தை முடித்தபோது வயது 76.

ஸூட்டோனியஸ் (Suetonius) கி.பி. 70 – கி.பி. 130. பன்னிரெண்டு சீஸர்கள் என்கிற இவருடைய புத்தகம் ஜூலியஸ் சீஸர் முதல் டொமிஷியன் சீஸர்  வரை கி.மு. 49 முதல் கி.பி. 96 வரையிலான காலகட்டத்தின் வரலாற்றை விவரமாகச் சொல்கிறது. பிற எல்லா ரோம வரலாறுகளும் பேரரசர்கள், அவர்கள் ஆட்சி, அரசியல், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவை  பற்றியே எழுதப்பட்டுள்ளன. ஸூட்டோனியஸ் மட்டும்தான் பன்னிரெண்டு சீஸர்களின் அகம், புறம், அந்தப்புரம் என அவர்களின் லீலா விநோதங்களையும் விவரிக்கிறார்.

நாள் குறிப்புகள்

ரோமர்களின் வாழ்க்கையில் மதம், கோவில்கள், இறை வழிபாடு ஆகியவை முக்கியப் பங்கு வகித்தன. வருட வாரியாக டயரி போன்ற குறிப்பேடுகள் எழுத வேண்டியது கோவில் பூசாரிகளின் கடமைகளுள் ஒன்று. இவற்றில் உள்ளூர் நீதிபதிகளின் பெயர்கள், அவர்கள் பணியாற்றிய பகுதிகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவை பதிவாகியிருந்தன. இதேபோல் ஏராளமான பிரபுத்துவக் குடும்பங்களிலும் பதிவேடுகள் இருந்தன. கி. மு. 753 முதல் கி. மு. 200 வரையிலான 453 வருட வரலாற்றை உருவாக்க இந்தக் குறிப்புகள் மிக உதவுகின்றன. இவை, கி.மு. 133 – இல் Annales Maximi என்னும் தலைப்பில் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டன. பாப்பிரஸ் என்னும் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட இவற்றுள் பல சேதாரமின்றிக் கிடைத்துள்ளன.

ரோமன் நீதிபதிகளின் டயரிக் குறிப்புகள், Fasti. கி. மு. 300 தொடங்கி ரோம் செய்த ஒப்பந்தங்கள், சாதனைகள், போர் வெற்றிகள் ஆகியவை துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வெட்டுக்கள்

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இன்றும் இருக்கும் Lapis Nige என்னும் கோவில் கல்வெட்டில் ரோமாபுரி பற்றிக் கண்டெடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கல்வெட்டு இதுதான். மதச்சடங்குகள், நியதிகள் ஆகியவை குறித்த விவரங்கள் இந்தக் கல்வெட்டில் கிடைக்கின்றன.

பொறிப்புக்கள்

அரசு ஆவணங்களைக் கற்களிலும், பித்தளைத் தகடுகளிலும் பொறிப்பது ரோமர் வழக்கம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான இத்தகைய பொறிப்புக்கள் / கல்வெட்டுகள்  கிடைத்துள்ளன. குறிப்பாக, கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் சட்டங்கள், அரச ஆணைகள், முக்கிய நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், போர் வெற்றிகள், அரசர்களின் சாதனைகள் என அவர்கள் பொறிக்காத அம்சங்களே இல்லை. இதைவிடச் சிறந்த ஆதாரங்கள் வேறு என்ன வேண்டும்?

நாணயங்கள்

கி. மு. 300 வாக்கில் ரோம் வெண்கல நாணயங்களைப் புழக்கத்துக்குக் கொண்டுவந்தது. சீக்கிரத்திலேயே தங்கம், வெள்ளி நாணயங்களும் நடைமுறைக்கு வந்தன. இவற்றில் உள்ள படங்கள் ரோமன் அரசர்கள், போர்கள், வெற்றிகள், மதம், கடவுள்கள், முக்கியக் கட்டடங்கள் ஆகிய   பல அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன.

காலகட்டங்கள்

கி. மு ஏழாம் நூற்றாண்டின் முடிவில் டைபர் நதியின் கரையிலிருந்து இட்ருஸ்கர்கள் (Etruscans) ரோமைக் கைப்பற்றினார்கள். அப்போது ரோம் நகரமாக இருக்கவில்லை. குடிசைகள் இருந்த சின்னக் கிராமம்.

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவில் உள்ளூர் மக்கள் இட்ருரியர்களை வெளியேற்றி தங்கள் குடியரசை ஏற்படுத்தினார்கள். கி. மு மூன்றாம் நூற்றாண்டில் அயல் நாடுகளை வென்றார்கள். இதற்குப் பின் பல உள்நாட்டுக் கலவரங்கள்.

கி. மு 27 – இல் ரோம சாம்ராஜ்யம் உருவானது. ஐநூறு ஆண்டுகளுக்குப் பரந்து விரிந்தது. 476 -இல் மேற்கு சாம்ராஜ்யம் எதிரிகளுக்கு வீழ்ந்தது. கிழக்கு சாம்ராஜ்யமும் நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்தன.

ரோம் நகரம் பிறந்த கதை

கிரேக்கர்களின் போர்க் கடவுள் செவ்வாய். இவருக்கும் ரியா ஸில்வியா என்கிற பெண் பூசாரிக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். இவர்கள் பெயர்கள் ரோமுலஸ், ரேமஸ். செவ்வாயின் எதிரியான அமுலியஸ் குழந்தைகளை டைபர் நதியில் எறிந்தான். ஒரு ஓநாய் அவர்களைக் காப்பாற்றியது. ஆட்டிடையன் ஒருவன் குழந்தைகளைக் கண்டுபிடித்தான். பதினெட்டு வயதில் தங்கள் பிறப்பு ரகசியம் புரிந்துகொண்ட அவர்கள் அமுலியஸைக் கொன்றார்கள்.ஆனால், விரைவிலேயே அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்தது. ரோமுலஸ் ரேமஸைக் கொன்றார். கி. மு 753 – இல் ரோம் நகரை நிறுவி, அரச கட்டில் ஏறினார்.

அரசியல் கட்டமைப்பு

மேல்சபை, கீழ்ச் சபை என்று உலகம் எங்கும் இன்றும் பின்பற்றப்படும் மக்கள் பிரதிநித்துவ முறைக்கு அடிக்கோல் போட்டது ரோம்தான். ரோம் நகரை நிறுவிய ரோமுலஸ் அரசர் தொடக்க நாள்களிலேயே. நாட்டை நிர்வாகம் செய்யவும், தனக்கு ஆலோசனை கூறவும் இரண்டு சபைகள் உருவாக்கினார். அவை கமிஷா க்யூரியட்டா, செனட் என்பவை. இவற்றுள் நம் லோக் சபாபோல் மக்கள் குரலே மகேசன் குரலாக கமிஷா க்யூரியட்டா ஒலித்தது. செனட் அரசர்களை மக்கள் தேர்ந்தெடுக்க உதவுதல், பேரசர்கள் பாதை தவறும்போது அவர்களுக்குக் கடிவாளம் போடுதல் என ராஜ்யசபாவின் இலக்கணமாக, அறிவுஜீவிகளின்  அரங்கமாகத் திகழந்தது. மன்னராட்சி மட்டுமே நிலுவையில் இருந்த பண்டைய காலகட்டத்தில், மக்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்த ரோமின் வழிகாட்டல்தான், ஏராளமான நாடுகளில்   மக்களாட்சிக்கு மலரக் கிரியா ஊக்கியாக இருந்தது.

நாட்டின் போர்க்குணம்

கி.மு 753 – ல், ஒரே ஒரு சிறிய ஊராகப் பிறந்த ரோம், சுமார் 650 ஆண்டுகளில் இத்தாலி, கிரீஸ், திரேஸ், பாசிடோனியா, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், சிரியா, பாலஸ்தீனம், எகிப்து, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்தியதரைக்கடல் தீவுகள் ஆகிய பூகோளப் பாகங்கள்மீது போர் தொடுத்து வெற்றி கொண்டு 59 லட்சம் சதுரக் கிலோமீட்டர் பரப்பளவில் தன் கொடியைப் பறக்க வைத்தது. இந்த ஏரியா எத்தனை பெரியது தெரியுமா? இந்தியாவின் பரப்பளவு 32,87,590 சதுரக் கிலோ மீட்டர்கள்.

அதாவது, இரண்டு இந்தியா அளவுக்கு! அண்டை நாடுகள்மீது போர் தொடுத்து, களமெல்லாம் கண்ட வெற்றிகள் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணம். ரோமாபுரியின் படைபலம், பயன்படுத்திய ஆயுதங்கள், காலமாற்றங்களுக்கு ஏற்ப ஆயுதங்களில் வந்த புதுமைகள். அரசர்களின் ராஜ தந்திரங்கள், அவர்கள் வகுத்த யுத்த வியூகங்கள், தளபதிகளின் தலைமைப் பண்புகள், போர் வீரர்களின் கட்டுப்பாடு… என்று இன்றும் உலகம் வியக்க பல விஷயங்கள் ரோமில் உள்ளன.

சாதாரணமாகப் பண்டைய நாகரிகங்களில், எல்லா நாடுகளிலும் சிறிய போர்ப்படைகள் இருக்கும். யுத்தங்கள் வரும்போது, பெரும் படையினரைத் திரட்டுவார்கள், பயிற்சி தருவார்கள், களத்தில் இறக்குவார்கள். ஆனால், ரோமாபுரியில் ராணுவம், ஆட்சியின் ஒருங்கிணைந்த அம்சம்.  ஒவ்வொரு நகர சாம்ராஜ்யத்திலும் சுமார் 5000 காலாட்படை வீரர்கள் நிரந்தரப் படையாக இருந்தார்கள்.  இவர்களுக்கு, மாதச் சம்பளம் ஓய்வூதியம் ஆகியவற்றோடு நிலமும் வழங்கப்பட்டது. அமைதி காலத்தில் போர் வீரர்கள், பாதுகாப்பு, சாலை போடுதல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top