Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 35

பண்டைய நாகரிகங்கள் – 35

மனித வாழ்க்கை முறையையும் வாழ்க்கைத் தரத்தையும் நிர்ணயிப்பதில், அவர்கள் வாழும் பகுதியின் வெப்ப தட்ப நிலை பெரும் பங்கு வகிக்கிறது. மாயர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் கீழ்ப்பகுதியைச் சுற்றி ஏராளமான சுண்ணாம்புக் கல் கிடைத்தது. இதனால், அந்த இடம் வெப்பம் அதிகமானதாக இருந்தது. எப்போதாவதுதான் மழை பெய்யும். தண்ணீர்த் தட்டுப்பாடுதான்.kli10

மேற்குப் பகுதி வெப்ப நிலையில் நேர் மாறானதாக இருந்தது. இங்கே ஏராளமான மலைகள், பள்ளத்தாக்குகள்.  இந்தப் பிரதேசம் மழைக்காடு (rainforest) எனப்படும். அகண்ட இலைகளையுடைய உயரமான மரங்கள் ஈரச் செறிவுள்ள இந்தப் பகுதிகளில் வளரும். இந்த மரங்கள் பசுமை மாறாமலே இருக்கும், அல்லது வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இலைகளை உதிர்க்கும் மர வகைகள்.

இங்கே பலத்த மழை பெய்யும். தரை ஈரப் பதம் கொண்டதாக இருக்கும். ஆனால், பூமி வளமானது அல்ல. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்ற சுமார் எழுபது ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. மாடுகள், குதிரைகள் போன்ற விவசாயத்துக்கு உதவும் மிருகங்களும் இல்லாததால், மனிதர்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே, தங்கள் நிலங்களில் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.

மாயர்கள் சோளத்தில் இருந்து கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று அவர்கள் இதிகாசம் சொல்வதைப் பார்த்தோமே? மாயர்களின் முக்கிய விவசாயம் சோளம்தான். அவர்கள் சோளத்தால் ரொட்டி செய்தார்கள். சோள ரொட்டிதான் அவர்களுடைய முக்கிய உணவு.

மாயர்களின் முக்கியப் பானம் கோகோ. ஆமாம், சாக்லெட்டின் முக்கிய மூலப் பொருளான கோகோதான். இதனால்தான், மாய நாகரிகம் சாக்லெட்டின் தாயகமாகக் கருதப்படுகிறது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, அதாவது சுமார் கி. மு. 2000 ல் கோகோ மரங்கள் வளர்க்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். கோகோ மரத்தை கேட்ஸால்கோயாட்டெல் கடவுள் சொர்க்கத்தில் இருந்து கொண்டு வந்தார் என்று மாயர்கள் நம்புகிறார்கள். கோகோ கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் சாக்லெட்டுக்கே எக் சுவாக் என்று ஒரு கடவுளை அவர்கள் உருவாக்கினார்கள்.

மாயர்கள் கோகோ கொட்டைகளை சுடுதண்ணீரில் போட்டு அந்தக் கஷாயத்தைக்  குடித்தார்கள். இந்த பானத்துக்கு அவர்கள் ஸோக்கால்டல் (Xocaltl) என்று பெயர் வைத்திருந்தார்கள். ஸோக்கால்டல் என்றால் கசப்பான பானம் என்று அவர்கள் மொழியில் பொருள். இந்த வார்த்தையிலிருந்துதான் சாக்லெட் என்ற பெயரே வந்தது. தங்கக் கோப்பைகளில் மட்டுமே கோகோ குடிப்பார்கள். ஒரு முறை குடித்தவுடன் இந்தக் கோப்பைகளை வீசி எறிந்துவிடுவார்கள். ஆமாம், தங்கக் கோப்பைகளைத்தான். இப்படி, வசதி கொண்டவர்கள் மட்டுமே குடிக்கும் ஆடம்பர பானமாக ஸோக்கால்டல் இருந்தது.

பானங்களில் மட்டுமல்ல, வியாபாரத்திலும் கோகோ ராஜா. மாயர்களின்  வியாபாரம் பண்டமாற்றுமுறையில் நடந்தது. இதற்கு கோகோ கொட்டை ஒரு பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பட்டது. நான்கு கொட்டைகளுக்கு ஒரு முயல் அல்லது ஒரு வான்கோழி வாங்கலாம். நூறு கொட்டைகள் கொடுத்தால் வாழ்நாள் முழுக்க வேலைக்காரனாக உழைக்கும் அடிமை கிடைப்பான்.

சாக்லெட் கதை 

மாயர்கள் உலகைத் தாண்டி கோகோவின் மகிமையை வெளி உலகத்துக்குத் தெரிய வைத்தவர் கிரிஸ்டோஃபர் கொலம்பஸ். ஒரு பயணத்தின்போது, 1502ம் ஆண்டு அவர் ஒரு படகைப் பார்த்தார். படகு நிறைய கோகோ கொட்டைகள். ஸ்பெயின் நாட்டில் கோகோ கொட்டைகளே கிடையாது. கொலம்பஸும் அவருடைய சகா மாலுமிகளும் முதன் முறையாக இவற்றைப் பார்த்தார்கள். வித்தியாசமான இக்கொட்டைகளைத் தங்கள் மன்னரிடம் கொடுக்க ஒரு பிடி எடுத்துக் கொண்டார்கள். மொழி தெரியாததால், மாய நாட்டுக்காரர்களிடம் பேசி கொக்கோ கொட்டைகளின் மகிமையை அவர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.    கொலம்பஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்குக் கொண்டு வந்தார். தன் மன்னருக்கு அவற்றைப் பரிசாகக் கொடுத்தார்.

மன்னருக்கு கோகோ சுவை  பிடித்தது. ஆனால் கொலம்பஸ் புதிய கண்டமான அமெரிக்கா கண்டுபிடித்தது தலைப்புச் செய்தியாகிவிட்டபடியால் கோகோ மன்னரின் நினைவில் பின்னுக்குத் தள்ளப்பட்டது.      கொலம்பஸ் கோகோவை ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால், கோகோ வரலாற்றில் சிறப்பு இடம் பெறுபவர் ஹெர்னாண்டோ கோர்ட்டெஸ் (Hernando Cortez) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரர். புதிய நாடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆசையில் பயணங்கள் மேற்கொள்ளும் துணிச்சல்காரர்.   கோர்ட்டெஸ் பயணம் செய்த கப்பல் மாயர் பகுதியில் கரை தட்டியது. கோகோவின் சுவை கண்ட கோர்ட்டெஸ் கோகோ கொட்டைகளை ஸ்பெயினுக்கு எடுத்துப் போனார்.

மன்னர், பிரபுக்கள், பணக்காரர்கள் அதன் சுவையை விரும்பினார்கள். ஆனால், இப்போதும் கோகோ ஒரு பானமாகத்தான் இருந்தது.   ஸ்பெயின் நாட்டு மக்கள் கோகோ பயிரிடத் தொடங்கினார்கள். கொட்டைகளைத் தூளாக்கி அந்தத் தூளால் பானம் தயாரித்தால் கூடுதல் சுவை வரும் என்று அறிந்தார்கள். இந்தத் தூளை, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்விட்ஸர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். ஏற்றுமதி பெருகியது. ஆனால், தூள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்பதைப் பரம ரகசியமாக வைத்துக்கொண்டார்கள். அந்த நாடுகளும் கோகோ பயிரிட ஆரம்பித்துவிட்டால் ஸ்பெயினின் ஏற்றுமதி வியாபாரம் படுத்துவிடுமே?

ஆனால் இந்த விஷயங்களை எத்தனை நாள்கள் ரகசியமாகக் காப்பாற்ற முடியும்? பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோகோ ரகசியம் ஐரோப்பிய நாடுகளுக்குக் கசிந்தது. குறிப்பாக பெல்ஜியம், இங்கிலாந்து, சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர்கள் கோகோவைப் பிடித்துக்கொண்டார்கள்.  கசப்பைப் போக்க, அவர்கள் இந்தப் பானத்தில் சர்க்கரை சேர்த்தார்கள். இங்கிலாந்தில் கோகோ கிளப்புகள் தொடங்கப்பட்டன. இங்கே இனிப்பு கோகோ பானம் மட்டுமே கிடைக்கும். இவை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றன.  கோகோவின் சுவை மக்களுக்குப் பிடித்தது.

1674 ல் சாக்லெட் தூளை கேக்களில் சேர்க்கும் வழக்கம் வந்தது. குடிப்பதற்குப் பதில் சாப்பிட முதன் முதலாகக் கோகோ பயன்பட்டது இப்போதுதான்.  1828 ல் கொன்ராட் வான் ஹூட்டன் (Conrad Von Houten) கோகோவில் எண்ணெய் எடுக்க ஒரு இயந்திரம் உருவாக்கினார். கோகோவின் எண்ணெய்  வெண்ணெய் என்று அழைக்கப்பட்டது.    இதற்குப் பிறகு 19 ஆண்டுகள் ஓடின. ஜோஸஃப் ஃப்ரை (Joseph Fry) என்ற ஆங்கிலேயர் சாக்லெட்டின் முதல் வடிவை உருவாக்கினார். கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணைய் ஆகிய மூன்றையும் சேர்த்தார். பசைத் தன்மை கொண்ட மாவு கிடைத்தது. இவற்றைப் பல வடிவங்கள் கொண்ட சாப்பிடும் சாக்லேட்டுகளாக மாற்றினார்.

1861- இல் ரிச்சர்ட் காட்பரி (Richard Cadbury) சாக்லெட் கடை தொடங்கினார். இவருடைய உற்பத்தி பெரிய அளவில் இருந்தது. சாப்பிடும் சாக்லெட் அதிக அளவு மக்களைச் சென்றடையத் தொடங்கியது. மில்க் சாக்லெட், ஃபை ஸ்டார், ஜெம்ஸ், எக்லயர்ஸ் போன்ற உங்களுக்குப் பிடித்த சாக்லெட் ரகங்கள் தயாரிக்கும், உலக நாடுகள் பலவற்றிலும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் காட்பரி கம்பெனி பிறந்த கதை இதுதான்.   இன்னும் பதினைந்து வருடங்களுக்கு சாக்லெட் என்பது கோகோ தூள், சர்க்கரை, கோகோ வெண்ணெய் ஆகிய மூன்றின் கலவைதான். மாற்றம்தானே முன்னேற்றம்?

1879 – இல் டானியல் பீட்டர் (Daniel Peter) என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டுக்காரர் இந்த மூன்று பொருள்களோடு பால் கலந்தார். சுவை அமிர்தம்! அன்று முதல் இன்றுவரை எல்லோருக்கும் பிடித்த இனிப்பாக இருக்கிறது சாக்லெட்.

சோளம், கோகோ ஆகிய பொருள்களுக்கு ஈடாக மாயர்களின் வாழ்வில் மிக முக்கியமான பொருளாக உப்பு இருந்தது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை மாயர்கள் முழுக்க நம்பினார்கள்.

மாயர்கள் வாழ்க்கையில் சாப்பாடு தவிர உப்புக்கு இன்னொரு உபயோகமும் இருந்தது. காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றை உப்பில் போட்டு வைத்தால், அந்தப் பொருட்களைக் கெட்டுப் போகாமல் காப்பாற்றலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

நாம் இன்று உப்பு தயாரிப்பது போலவே மாயர்களும் உப்பு உற்பத்தி செய்தார்கள்.
கடல் நீரை கடற்கரையில் தேக்கி வைப்பார்கள். இந்த உப்பளங்களில் உள்ள தண்ணீர் வெயிலில் உலரும்போது உப்பு கிடைக்கும். கடற்கரைப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட உப்பு நாட்டின் பல பாகங்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

மாயர்கள் வாழ்க்கையில் ஆடைகள் மிக முக்கியமானவை. ஒருவர் அணியும் உடைகள் அவர்களுடைய சமூக அந்தஸ்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை.

ஒவ்வொரு கிராமத்துக்கும் தனித் தனியான வகை உடைகள் இருந்தன. அவற்றை அணிவதுதான் தன்மானமுள்ள, பெருமைக்கு உரிய விஷயம் என்று அவர்கள் நினைத்தார்கள். அடுத்த கிராமத்து ஸ்டைல் ஆடைகளை அணிபவர்கள் கேலி செய்யப்பட்டார்கள்.

ஆண்களின் உடை மிக எளிமையானது. இடுப்புப் பாகத்தை மட்டும் மறைக்கும் அரைத் துணிதான் அவர்கள் ஆடை. மகாத்மா காந்தியை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பெண்களின் உடைகள் தனிக் கவனத்தோடு வடிவமைக்கப்பட்டன. பெண்கள் இடுப்பில் பாவாடை அணிவார்கள். அதற்கு மேல் Huipil என்ற பிளவுஸ் மாதிரியான மேல் உடை. இந்த உடை பருத்தி, கம்பளி, சணல், கற்றாழை நார் போன்றவற்றால் செய்யப்படும். இது செவ்வக வடிவத்தில் தைக்கப்பட்டிருக்கும். கழுத்தை நுழைப்பதற்காக  ஓர் ஓட்டை இருக்கும். பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் தைக்கப்பட்டது. அதன் மேல் பல நிறங்களில் படங்கள், கை வேலைப்பாடுகள் செய்வார்கள். நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் பிரபலமானவை. நீல நிறம் செடிகளிலிருந்து தயாரிக்கப்பட்டது. சிவப்பு நிறம் கோச்சினீயல் (Cochineal) என்ற பூச்சியைக் கொன்று அதன் ரத்தத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பூ வேலைகள், எம்ப்ராய்டரி போன்ற கைவினை வேலைகள் ஆடையின்மீது நெய்யப்பட்டன. இவையும் ஆடைகளில் வரையப்பட்ட படங்களும் கடவுள்களின் உருவங்களாகவும் இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருந்தன.

சோளக் கடவுளான கேட்ஸால்கோயோட்டெல் மாயர்களுக்கு மிக முக்கியமானவர் என்பதால் அவர் படம் பெரும்பாலான ஆடைகளில் தீட்டப்பட்டது. அவர் பாம்பு வடிவானவர். எனவே பாம்புகள் மாயர்களின் ஆடைகளில் அடிக்கடி தோன்றின.

பெரும்பாலும் வீட்டுப் பெண்கள்தான் ஆடைகளைத் தைத்தார்கள், அவற்றில் ஓவியங்கள் வரைந்தார்கள், வேலைப்பாடுகள் செய்தார்கள். இதனால் பெண்களிடம் கற்பனைத் திறமை அதிகமாக இருந்தது. பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்கு இந்தத் திறமை உதவியது. ஜேட் என்கிற பச்சை மணிக்கல் அதிர்ஷ்டமானது என்று மாயர்கள் நம்பினார்கள். இவற்றால் அங்கிகள்போல் உடைகள் தைத்து வீப்பிலின்மேல் அணிந்து கொண்டார்கள்.

உணவு, உடை ஆகிய அடிப்படைத் தேவைகளில் கடவுள்களிடம் மரியாதை காட்டிய மாயர்கள் ஆண்டவனிடம் மட்டுமல்ல, தம்மை ஆண்ட அரசர்களிடமும் மரியாதையும் பயமும் கொண்டிருந்தார்கள். அரசர்கள் கடவுள்களின் அவதாரங்கள் என்று நம்பினார்கள்.  அவர்கள் என்ன கட்டளையிட்டாலும் மறு பேச்சுப் பேசாமல் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

அரசர்களின் அதிகாரத்துக்கு எதிர்ப்பே இல்லாததால், நாட்டில் அமைதி நிலவியது. மன்னர்கள் நாட்டின் முன்னேற்றத்தில் தங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த முடிந்தது.

புதுப் புது நகரங்களை ஏற்படுத்துவதில் அரசர்களுக்கு உற்சாகமும் ஈடுபாடும் இருந்தது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக உயர்த்த முடியும் என்பது அவர்களுடைய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படை.

நகரம் உருவாக்கும்போது கட்டடங்கள் கட்ட வேண்டும். இதற்குக் கற்கள், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பெரும் அளவில் தேவைப்படும். இந்தத் தொழில்கள் அமோகமாக வளரும்.

நூற்றுக்கணக்கில் கட்டடக் கலைஞர்கள், தச்சு வேலைக்காரர்கள், ஓவியர்கள் போன்ற பல்வேறுபட்ட தொழிலாளர்களின் உழைப்பு தேவை. இவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் இருப்பதால் புதியவர்கள் இந்தத் தொழில்கள் படித்து இந்தத் துறைகளில் நுழைவார்கள்.,

அந்தக் காலகட்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், மாயர்கள் உருவாக்கிய சில நகரங்கள் பிரம்மாண்டமானவை. டிக்கல் (Tikal), எல் மிராடர் (El Mirador) போன்ற   நகரங்களில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்தார்கள்.

இந்த மக்களுக்குச் சோளம், கொகோ, உப்பு, மீன் ஆகிய உணவுப் பொருள்கள் வேண்டுமே? இவை கிராமங்களில் இருந்து வந்தன. கிராம மக்களின் பொருளாதார நிலை உயர்ந்தது.

நகரங்கள், கிராமப் பொருள்களை விற்க வாய்ப்பு கொடுக்கும் சந்தை ஆனது. தாம் பொருள்களைத் தயாரித்தால், அவற்றை விற்கும் சந்தை இருக்கிறது என்ற ஊக்கத்தால் மக்கள் தொழில்களில், வியாபாரத்தில் தைரியமாக ஈடுபட்டார்கள்.

நாட்டின் பல பாகங்களும் வணிகத்தால் இணைக்கப்பட்டன. வியாபார எல்லைகளைத் தாண்டி, தாம் எல்லோரும் ஒரே நாட்டினர் என்கிற பாசப் பிணைப்பையும் நகர உருவாக்கம் கொண்டு வந்தது.

நகரங்களின் உருவாக்கம், கட்டமைப்பு ஆகியவை பொருளாதார வளர்ச்சியின் கிரியா ஊக்கிகள் என்பது அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் கண்டறிந்த, அறியும் உண்மை. இந்தச் சித்தாந்தத்தை அன்றே நிரூபித்தவர்கள் மாயர்கள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top