Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 1
ஒரு நகரத்தின் கதை – 1

ஒரு நகரத்தின் கதை – 1

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஒரு நாடா? ஒரு சிறு நகரமா  அல்லது ஒரு நகர நாடா? இப்படி தெற்கிலிருந்து வடக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து விட முடியும் என்ற சாத்தியங்கள் இருக்கும் ஒரு சிறிய நகரம் ஒரு தனி நாடாக வளர்ந்து இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக, உலகில் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக,  மக்கள் வசதியாக வாழக் கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்கு குடியேறிய புதிதில் பல ஆச்சரியங்களைக் கொடுத்தது இந்நகர வாழ்க்கை.  அந்த ஆச்சரியங்கள் சலிப்புத் தட்டத் தொடங்கும் போது இன்னும் அதிக உத்வேகத்தோடு புதிய மாற்றங்களைத் தந்தது. அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் முகத்தை அழகு படுத்திக் கொள்ளும் பணக்கார வீட்டு வாலிபன் போல் ஒரு முறை காட்டிய முகத்தை மாற்றிக் கொண்டு வெவ்வேறு முகங்களைக் காட்டியது. இன்றையிலிருந்து இரு நூறு வருடங்களுக்கு முன்னால், இன்னும் சற்று துல்லியமாகச் சொன்னால் 193 வருடங்களுக்கு முன்னால் ஃபிப்ரவரி மாதம் சிங்கப்பூர் என்ற சிறு தீவு மீண்டும் உயிர் பெற்றது. அந்த வரலாறு பற்றி நகரத்தின் கதையில்!!!!!!! 

பிப்ரவரி 6, 1819 (6-2-1819) ஜோகூர் சுல்தானிடமிருந்து 5,000 ஸ்பானிஷ் டாலருக்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிழக்கிந்தியக் கம்பெனியால் குத்தகைக்கு எடுக்கப்பட்டது சிங்கப்பூர். மேலும்  ஆங்கிலேய அரசு ஜோகூர் சுல்தானுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தது. ஆளரவமற்ற சிங்கப்பூரின் தெற்குக் கடற்கரையில் யூனியன் ஜாக் என்று அழைக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது.

ஜனவரி 28 ஆம் நாள் மாலை சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜான் தீவில் பென்கூலன் லெஃப்டினெண்ட் கவர்னர் ராபிள்ஸ் இறங்கினார்.  ராணுவத் தளபதி வில்லியம் ஃபர்குவாரின் உதவியுடன் உள்ளூர் தலைவன் தெமெங்கெங் அப்துல் ரஹ்மானைச் சந்தித்தார். சிங்கப்பூரில் ஒரு தொழிற்சாலை கட்டுவதற்கு சம்மதம் கேட்டார். அவர் சம்மதத்துடன் ஜனவர் 29ஆம் தேதி தற்காலிகமாக சிங்கப்பூரில் இங்கிலாந்து நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டது. பின்னர் முறைப்படி ஜோகூர் சுல்தானைச் சந்தித்து ஆவணங்கள் எழுதப்பட்டு அதிகாரப்பூர்வமாக சிங்கப்பூர் ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமானது. 

கிழக்கிந்தியக் கம்பெனியின் வர்த்தகத்திற்கு மலேயாவில் ஏற்கனவே பினாங்குத் துறைமுகம், சுமத்ராவில் பென்கூலன் போன்ற இடங்கள் இருந்தன. இருந்தாலும் அவர்கள் வர்த்தகத்திற்கு மற்றுமொரு துறைமுகம் இன்னும் சற்று வசதியான இடத்தில் தேவைப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி 1819ஆம் ஆண்டு ‘தி இந்தியானா அண்ட் எண்டர்பிரைஸ்’ என்ற கப்பலில் மலாக்காவிற்குத் தெற்கே ஒரு துறைமுகத்தைத் தேடிப் புறப்பட்டது.அதில் கேப்டன் ஜேம்ஸ் பேர்லின் ஆணைப்படி ராஃபிள்ஸும், ஃபர்குவாரும் ஆங்கில அரசுக்கு ஒரு புதிய குடியேற்றத்தைத் தேடிப் புறப்பட்டனர். 

ஜனவரி 27ஆம் தேதி கரிமூன் தீவைத் தேர்ந்தெடுக்கலாமா என்று வில்லியம் ஃபர்குவாரின் யோசனை நிராகரிக்கப்பட்டது. மறு நாள் 28ஆம் தேதி மாலை சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் இருக்கும் செயிண்ட் ஜான் தீவில் கப்பல் நிறுத்தப்பட்டது. இந்தக் கணத்திலிருந்து  நவீன சிங்கப்பூரின் வளர்ச்சி தொடங்குகிறது. சிங்கப்பூரைத் திட்டமிட்ட ஒரு அழகிய துறைமுக நகரமாக்க ராபிள்ஸ் கண்ட கனவின் கதை இது.

தாமஸ் ஸ்டாம்ஃபொர்ட் ராஃபிள்ஸ் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாதாரண எழுத்தராக தன் பதினான்காம் வயதில் கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்தார். தனது 24 ஆம் வயதில் துணைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்று  தன் புது மனைவியான ஒலிவியாவுடன் பினாங்கிற்குப் புறப்பட்டார். கிட்டத்தட்ட ஆறுமாதக் காலக் கப்பல் பயணம். புது மாப்பிள்ளையான ராஃபிள்ஸ் தன் மனைவியுடன் தேனிலவைக் கொண்டாட ஒரு அருமையான வாய்ப்பு என்று எண்ணவில்லை. அப்போது புதிதாக கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மலேயா தீபகற்பத்திற்குச் சென்று கொண்டிருந்த அலுவலுக அதிகாரிகள் கொண்ட குழாமில் யாருக்கும் மலாய் மொழி தெரியாது.

இதை உணர்ந்த ராஃபிள்ஸ் அந்த ஆறு மாதப் பயணத்தை தனக்கு மலாய் மொழி கற்கக் கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு என்று தன் சொந்த முயற்சியால் மலாய் மொழியைப் பேசவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.  இதனால் பினாங்கு போனதும் துணைச் செயலாளராக வேலைக்குச் சேர்ந்தவர் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். அதனுடன் உள்ளூர் மக்களுடன் ஆங்கிலேய ஆளுனர்களும் பிரபுக்களும் பேசிப் பழக மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார்.

1807ஆம் ஆண்டிலிருந்து 1819 ஆண்டுவரை பன்னிரெண்டு ஆண்டுகளில் பினாங்கில் ஐந்து ஆளுனர்கள் மாறி மாறி ஆட்சி செய்தனர். இத்தனை ஆளுனர்கள் மாறியதற்கு என்ன காரணம்? ஐரோப்பிய மித தட்ப வெப்பப் பருவ நிலையில் பிறந்து வளர்ந்த ஆங்கிலேயர்களால் மலேயா தீபகற்பத்தின் கடுமையான வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. மழைக்காடுகள் நிறைந்த மலேயா தீபகற்பத்தில் பல வகையான தாவரங்கள், விலங்குகள். இவை இறந்து மக்கிப் போகும்போது ஏற்பட்ட வெப்பம், பல வித உயிரினங்கள் அவற்றை சிதைக்கும்போது திசுக்கள் அழுகலால் ஏற்படும் ஒரு வித முடை நாற்றம், சுகாதாரமற்ற சுற்றுப்புறச் சூழலால் வயிற்றுப் போக்கு,கடுமையான காய்ச்சல், மலேரியா பரப்பும் கொசுக்கள்  இவற்றைத் தாங்க முடியாமல் பினாங்குத் தீவுக்கு வந்த ஆளுனர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். ஆலோசனை உறுப்பினர்கள், பினாங்குக்கு பிழைப்புத் தேடி வந்த ஐரோப்பியர்கள் எனப் பலர் இத்தகைய ஆரோக்கியமற்ற சூழலால் உடல் நலம் கெட்டு மாண்டனர். இப்படிப்பட்ட சூழலில் ராபிஃள்ஸுக்கும் உடல் நலம் கெட்டது. பினாங்கிலிருந்து மலாக்கா வந்து தங்கினார். அப்போது மலாக்காவை ஆங்கில அரசுக்குக் கீழ் கொண்டு வந்தால்  அது மலேயா முழுதும் ஆங்கில ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரும் திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்.

உலகிலேயே மிக அதிகமான உயிரினங்கள் வாழ உகந்த இடம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்ட இடங்கள். பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தப் பிரதேசங்களில் வருடம் முழுவதும் மழை. எனவே தேவைக்கு அதிகமாகத் தண்ணீர். பருவ நிலை மாற்றம்  இல்லாமல் வருடம் முழுவதும் சீரான வெப்பம். பலவித தாவரங்கள், விலங்குகள் வாழும் இந்தப் பிரதேசம் ஐரோப்பியர்கள் வாழ உகந்ததாக இல்லை.

இதனால் பல ஆளுனர்கள் இங்கிலாந்திலிருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு வரப் பயந்தனர். வந்தவர்களும் எப்போது இங்கிலாந்து திரும்பிச் செல்வோம் என்று காத்திருந்தனர். ராபிஃள்ஸுக்கும் இதைப் போன்ற ஒரு காத்திருத்தலின் முடிவில் அவரது முடிவும் அமைந்தது.

தொடரும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top