Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 18 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 18 ( மர்மத் தொடர் )

டிவியில் விளம்பரதாரர் மக்களுக்கு பல வகையான பொருட்களை வழங்குகிறார்கள். இதில் எத்தனை மக்களைப் போய் சேருகிறது என்பது ஆராய்ச்சி செய்ய வேண்டிய விஷயம்.

வீட்டுப் பொருட்கள் டிவி ஃபிரிஜ் வாஷிங் மெஷின் துவங்கி சோப் சீப் கண்ணாடி ஷாம்பு வரை டிவியில் வேலை செய்பவர்களுக்கு தினமும் ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்கும்.

சென்று முறை பெருங்காய வியாபாரி கொடுத்த நிகழ்ச்சியினால் இன்னும் மூன்று மாதத்திற்கு பல வீட்டில் பெருங்காயமே வாங்கத் தேவையில்லை எனும் நிலை.

பலரும் உள்ளே நுழைந்தவுடன் அக்பர் இன்னிக்கு என்ன கிஃப்ட் என்று கேட்டுக் கொண்டே நுழைவார்கள்.

இன்றும் அக்பர் ஒரு பெரிய தட்டில் ஸ்வீட் கொடுப்பது போல ஒவ்வொருவரிடமும் சென்று தட்டை நீட்டினான். கௌவரம் பார்ப்பவர்கள் ஒன்று மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். பேராசைப்படுபவர்கள் பலவற்றை அள்ளிக்கொள்வார்கள்.
அதில் ரவியும் ஒருவன். இரண்டு தங்கைகள் அல்லவா. அக்பர்

இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?

பேனா சார். ரெனால்ட்ஸ் ஸ்பான்சர்.

சே வெறும் பேனாதானா என்றான்?

இல்லை சார். அப்படிச் சொல்லாதீங்க. இது ஒரு ஸ்பெஷல் பேனா. மூன்று நிறத்தில எழுதும். முன்னாடி சின்ன டார்ச் லைட். அலார்ம் க்ளாக்குன்னு பல சங்கதி இதில. விலையே 250 ரூபாய் சார். பாருங்க இதில கழுத்துல மாட்டிக்க ஸ்டராப் கூட இருக்கு என்றான்.

அப்படியா? போனாவில இவ்வளவு சங்கதியா? என்ற ஆச்சர்யப்பட்டுக் கொண்டே 4-5 எடுத்து டிராவில் போட்டுக் கொண்டான். அக்பர் விடை பெறுவதற்கு முன் இன்னொன்றை எடுத்து கழுத்தில் மாட்டிக் கொண்டான். அக்பர் லேசாக சிரித்துவிட்டு அடுத்த டேபிளுக்குச் சென்றான்.

அவனுடன் சேர்ந்து இந்த பேனாவை இன்று கழுத்தில் அணிந்து திரிபர்கள் இந்த ஆபிஸில் 60 பேர். எல்லோரும் பேனாவை பற்றியே பேச்சு. நந்தினிக்கு இதில் ஆர்வமில்லை. ஒரு பேனாவை எடுத்துக்கொண்டாலும் அதில் ஆர்வம் செலுத்தவில்லை. அவள் நினைப்பு முழுவதுமாக ராஜேஷ் ஆக்கரமித்திருந்தான். இப்ப வந்துடுவான் இப்ப வந்துடுவான் என்று லிஃப்டையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அந்த ஹீரோவும் புயலாக உள்ளே நுழைந்தான். சட்டென்று பையிலிருந்த ஒரு ரோஜாவை எடுத்து நீட்டிவிட்டு தன் அறைக்குச் சென்றான்.

அதில் ஒரு போஸ்ட் இட்.

�இந்த நிஜ ரோஜாவுக்கு இயற்கையின் பொய் ரோஜா�

பைத்தியம் ஆகிவிட்டாள். டேய் நில்லுடா உன்னோட பேசனும் என்று சொல்லத்தோன்றியது. இதே போஸ் இட்டில் நான் உன்னை காதலிக்கிறேன்னு எழுதியிருந்தா குறைந்தா போயிடுவான் என்று கடிந்துக் கொண்டாள்.

7 முறை நந்தினி 2 போஸ்ட் இட் 2 முறை தனிமையில் சந்திப்பு 1
ரோஜாப்பூ என்று டைரியில் எழுதிக் கொண்டாள்.

உள்ளே சென்று அறையில் அமர்ந்ததும் ராதிகா உள்ளே வந்தாள். அக்பரும் உள்ளே வந்தான். தட்டை நீட்டினான்.

என்ன இது என்று கேட்டான்

பேனா பரிசு ஐடம் என்றான் அக்பர்.

முக்கியமாக வேலையை இருக்கும் போது ஏம்பா இப்படி தொந்தரவு செய்யறீங்க. அது தான தினமும் ஏதாவது குப்பை வருதுல்ல. அப்படி போட்டுட்டு போவீங்களா என்னமோ சொந்த காசுல ஸ்வீட் வாங்கி கொடுக்கற மாதிரி தட்டை நீட்டறீங்ளே. என்று கோபமாக பேசினான் ராஜேஷ்

அக்பர் அரண்டு போனான். ராஜேஷ் எப்போதுமே இப்படி பேசியதில்லை. அவமானம் தாங்காமல் ரிசெப்ஷனில் உள்ள சேரபாவில் வந்து உட்கார்ந்துக் கொண்டான்.

என்னாச்சு அக்பர் என்று நந்தினி கேட்டாள். அவன் நடந்ததைச் சொன்னான். ஆச்சர்யமா இருக்கே. என் செல்லத்திற்கு கோபமே வராதே. கமிஷ்னர் ஆபிஸ்லேயே சிரிச்சிக்கிட்டு தானே இருந்தது. என்னன்னு போய் பார்க்கலாம் என்று அவன் அறையை நோக்கிப் போனாள்.

ராதிகாவிடம் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

ராதிகா நிலமை மிகவும் மோசமாகிட்டே போகுது. நாம இந்த ப்ராஜெக்டை கை விட்ற வேண்டியது தான்.

என்ன சொல்றீங்க ராஜேஷ் நீங்க ஒரு தைரியசாலி நீங்களே இப்படி பேசலாமா?

இல்லை ராதிகா நிலமை பார்த்து வேலை செய்யனும். எனக்கு இன்னும் ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் போக விருப்பமில்லை என்றான்.

அப்போது அவன் மொபைல் ஒலித்தது.

ராதிகா ஆச்சர்யமாக கேட்டாள. உங்க போன் இங்கே இருக்க

எங்கிருந்தது இந்த சத்தம்?

வெல். என்கிட்ட ரெண்டு போன் இருக்கு. யாருக்குமே தெரியாது ஏன்னா இரண்டாவது போன் ஒலிச்சதே இல்லை. இது நம்ம பாஸுக்கு மட்டுமே தெரிந்த எண். நாம நிறைய ப்ராஜெக்ட் சோந்து பண்ணா உங்களுக்கும் இந்த நம்பர் தருவேன் என்றான். இன்று அவள் போட்டிருந்த ஆடையில் அவள் உடற்கட்டு நன்றாக தெரிந்தது. அதை ரசித்தப்படியே போனை தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்தான்.

அப்படியா சரி என்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு வைத்துவிட்டான்.

பாஸ் தான் ஆபீஸ்ல இருக்காரே அப்படி இருக்க ஏன் மொபைல்ல கூப்பிடனும்?

பாஸுக்கு தெரியாம இன்னொருத்தருக்கும் இந்த நம்பர் கொடுத்திருக்கேன் என்றான் கண்ணடித்தபடியே.

ராதிகா முகம் வாடியபடியே யாரு கேர்ல் பிரெண்டா என்று கேட்டாள்.

யெஸ் என்றான் சிரித்தப்படியே.

அவள் முகம் வாடியே விட்டது.

கவலை வேண்டாம். இன்னும் பல பெண்களுக்கு என் இதயத்தில் இடம் இருக்கிறது என்றான் அவன் பாணியில். ஃப்ளாம்போயன்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தால் ராஜேஷ் என்று இருக்குமோ?

அவன் நகைச்சுவையை அவளால் ரசிக்கமுடியவில்லை.

உள்ளே நுழைந்து நந்தினி நீங்க அக்பரை திட்டினீங்களா? என்று கேட்டாள்.

அக்பர் ஒரு பணியாள். நீங்க ஒரு ரிசெப்ஷனிஸ்ட். நீங்க என் முதலாளி இல்லை உங்க வட்டத்தை தாண்டாதிங்க. என் நேரத்தை வீணாக்காமல் வெளியே போங்க என்று பொரிந்து தள்ளினான் ராஜேஷ் கோபமாக.

அதிர்ந்து போய்விட்டாள் நந்தினி. இதுபோல அவன் பேசி பார்த்ததில்லை கேட்டதில்லை. ஏன் இந்த கோபம்? யார் மேல் இந்த கோபம்? எல்லாம் இந்த சண்டாளி வந்த பிறகு தான். யாருக்கு வேண்டும் இந்த ப்ராஜெக்டும் மன்னாங்கட்டியும்.
தலைகுனிந்து அங்கிருந்து விலகினாள். ஓடிச் சென்று டாய்லெட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு அழுதாள். நீ ஏன் இப்படி பேசினே என்கிட்ட? காலையில தானே உன் கைபிடிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்? இப்பத்தானே எனக்கு ரோஜாப்பூ கொடுத்தே? ஏன் இப்படி எல்லார் மேலையும் எரிஞ்சு விழற? உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா என்கிட்ட சொல்லக்கூடாதா? என் மடியில உன்னை படுக்க வைச்சி நான் தலை கோதிவிட்டா உன் பிரச்சினை பறந்து போயிடும்டா? என்ற அரற்றினாள். சில நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்தாள். அக்பரும் அவளும் ராஜேஷிடம் திட்டு வாங்கிய விஷயம் அலுவலகத்தில் அனைவரிடமும் சுனாமி போல பரவியது. அனைவரும் ராஜேஷா என்று ஆச்சர்யமாக கேட்டனர்.

தன் சீட்டுக்குச் சென்று ஐயாம் ஸாரி என்று ஒரு இமெயிலை அவனுக்கு தட்டிவிட்டாள். இந்தச் செயலுக்காக அவன் காதை கடிக்க வேண்டும் என்று குழந்தைப் போல நினைத்துக் கொண்டாள்.
ராதிகாவுக்கு ஒரே மகிழ்ச்சி. அப்பாடா தான் சந்தேகப்பட்டமாதிரி இவங்க இரண்டு பேருக்கும் ஒன்றும் இல்லை. அவள் இவனுடைய கேர்ல் பிரண்டாக இருந்தால் இப்படியா திட்டுவான்?

மீண்டும் ராதிகாவிடம் பேசத்துவங்கினான். இன்னொரு போன். இந்த முறை அவன் லேன்ட் லைனில்.

அமைச்சர் சொர்க்கத்தின் உதவியாளரிடமிருந்து ஒரு போன். அமைச்சர் உடனே உங்களை பார்க்க விரும்புகிறார்.

ஆச்சர்யப்பட்டான். அவனுடைய பட்டியலில் இருந்த மூன்றாவது அமைச்சர்.

ராதிகா இன்னொரு கொலை நடக்கும் போலிருக்கு. பயமா இருக்கு. அமைச்சர் சொர்க்கம் இன்டர்வியூ தரேன்னு கூப்பிடறாரு.
சிங்கத்தை அதன் குகையிலே சந்திக்க நான் தயார் என்றாள் அந்த புரட்சிப்பெண்.

மௌனமாக இருந்தான். நிறைய யோசித்தான். வரமாட்டேன் என்று சொல்லவும் முடியாது. பென்சில் எடுத்து 3.30 என்று எழுதினான். பிறகு தான் முதன் முறையாக தான் ஒரு முழு எண்ணை எழுதவில்லை என்று உணர்ந்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top