Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » பருவநட்சத்திரங்கள் – 3

பருவநட்சத்திரங்கள் – 3

(ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.)

அந்த ஒருவர் 70 வயதுடைய ஒரு முதியவர். 70 வயது என்று சொல்ல முடியாத அளவு 60 வயது போல் இருந்தது அவரது உடலமைப்பு.

சிலையாய் நின்ற கலாவின் கண்களில் வட்ட வட்டமாய் சுழலும் அந்த கால திரைப்பட பாணியில் ஒரு சுழல் வந்து 10 வருடம் பின்னோக்கி பழைய நினைவுகளை தோண்டி எடுக்கத் துவங்கியிருந்தது.

அந்த பெரியவரின் முகம் மறக்கவே முடியாமல் இன்னும் கலாவின் நினைவில் அப்படியே இருந்தது.

கோவையின் முக்கிய நகர்புற சாலையின் ஓரத்தில் வீற்றிருந்தது அந்த “ப்ளாக் மாரியம்மன் கோயில்”. அதன் பிரகாரத்தின் வெளிப்புறத்தில் ஒரு ஆலமரம்.

குயில்களும் குருவிகளும் கோயிலின் மணியும் எழுப்பும் சத்தத்தினூடே காலை பிராத்தனை கூட்டத்தின் சத்தமும் அருகிருந்து வரும் படி அமைந்த ஒரு அழகான உயர்நிலைப் பள்ளி.

அதில் கலா, ரெட்டை ஜடை பின்னலில் மயிலாய் படித்த நடுநிலை வகுப்புக் காலம்.

பள்ளி விட்டு வரும் வழியில் எப்போதும் கலா அந்த கோயிலில் வழியே போவது தான் வழமை.

அன்று அவ்வாறே செல்கையில், அந்த ஆலமரம் அருகே ஒரே சிறார் கூட்டம்.

வேடிக்கை பார்க்கும் ஆவலில் கலாவும் கூட்டத்தில் ஐக்கியமாகிறாள்.

ஒரு முதியவர், அழுக்கேறிய சட்டை, பேண்ட், அழுக்கான கோட், பல நாட்கள் குளியலையே கண்டிராத மேனி, ஒடுக்குழுந்த கண்கள், நரைத்த குறுந்தாடி சகிதமாக நின்றிருந்தார். அவரைச் சுற்றித் தான் சிறார் கூட்டம்.

கலாவுக்கு சிறார்களின் கூட்டத்தின் காரணம் இன்னமும் விளங்கவில்லை.

சலசலப்பின் உச்சத்திலிருந்த சத்தங்களுக்கு நடுவே ஒரு சிறுவனின் குரல்…!

“தாத்தா, என் பெயரை ஆங்கிலத்தில் ஸ்பெல்லிங் சொல்லுங்க பார்ப்போம்..” என்று கூறி தன் பெயரை ‘சந்தோஷ்’ என்றான்.

என்ன ஆச்சர்யம் அந்த முதியவர் கண்களில் ஒரு அறிவு ஒளிப் பிரகாசிக்க கச்சிதமாக பெயரின் ஆங்கில ஸ்பெல்லிங்கை எழுத்து விடாமல் சொன்னார்.

உடனே, அடுத்த சிறுவன் இதே போல் ஆங்கிலத்தில் கடினமான வார்த்தை சொல்லி ஸ்பெல்லிங் சொல்லச் சொன்னான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கலாவுக்கு ஆச்சர்யத்தில் புருவம் உயர்ந்தது.

கண்டிப்பா ஒரு நன்கு படித்த முதியவர் தான் இவர்.. காலத்தின் கோலம் இவரை இப்படி ஆக்கியிருக்கலாம் என்று மனவேதனை கொண்டு
சிறுமியான தன்னால் உதவ முடியாத நிலை கண்டு தவித்தாள்.

பிரசாதமாக கிடைக்கும் உணவும், அப்பப்போ அண்டை வீட்டார் மற்றும் சிறார்கள் கொடுக்கும் உணவும் அந்த முதியவருக்கு போதுமானதாக இருந்தது.

சிறிது காலமாய் பள்ளிக்குச் சென்று திரும்புகையில் மறக்காமல் பார்த்து அவருக்கு ஏதும் உண்ண தன்னிடம் உள்ளதை கொடுத்து வந்த கலா, ஒரு நாள் அவரை அந்த ஆலமரத்தினடியில் காணாமல் திகைத்தாள்.

விவரம் கேட்க யாருமில்லாததால், கலா செய்வதறியாது தவித்தாள்.

சிறுமியான கலா, சிறிது காலத்தில் அந்த நிகழ்வை மறந்தே விட்டாள்.

இப்போது அந்த முதியவரைத் தான் இந்த அன்பு இல்லத்தில் கண்டிருக்கிறாள்.

“என்ன கலா… அப்படியே நின்னுட்ட…. ஆப்பிளை அவரிடம் கொடுமா…!” என்றவாறே காமேஷ் அருகில் வந்தான்.

கலா பழைய நினைவுகளின் சங்கிலி தொடரில் சென்றவள் காமேஷின் குரல் கேட்டு நிஜத்துக்கு திரும்ப வந்தாள்.

“பை த வே.. நான் சொன்னேனே… ஒரு முக்கியமான ஒருவரை சந்திக்க போறோம்னு..! அவரு இவர் தான்.. பேரு ரத்னவேல். இவர் ஒரு ஆங்கில பேராசிரியர். ஃபொனட்டிக்ஸ்-ல் விசேசமா புலமை பெற்றவர்.”
என்று சொல்லிவிட்டு அவரிடமும் ஆசி வாங்க முனைந்தனர்.

“மகராசனா இருப்பா…” என்று காமேஷைப் பார்த்தும் “மகராசியா, தீர்க்க சுமங்கலியா இரும்மா” என்று கலாவைப் பார்த்தும் வாழ்த்து சொன்னார் அந்த பெரியவர்.

“ஐய்யா… நல்லாயிருக்கீங்களா? மாத்திரை எல்லாம் நேர நேரத்துக்கு சாப்பிடறீங்களா?” என்று பவ்யமாய் கேட்டான் காமேஷ்.

“எனக்கென்ன தம்பி குறைச்சல்.. நான் நல்லாயிருக்கேன்.. மாத்திரை எல்லா இங்க சரியான நேரத்துக்கு கொடுக்கறாங்கபா.. நான் கரக்டா சாப்பிட்டுட்டு தான் வர்றேன்.” என்று தள்ளாத வயதின் நடுக்கத்துடனே பதிலளித்தார் பெரியவர் ரத்னவேல்.

கலாவின் குழப்பமான முகம் புரிந்தாலும் வெளிக்காட்டாமல் காமேஷ் எல்லாருக்கும் உணவு பரிமாறுவதில் குறியாய் இருந்தான்.

எல்லாரும் சாப்பிட்டாயிற்று. இப்போது நேரம் காலைக் 11-ஐ எட்டியிருந்தது.

கலாவும் காமேஷும் இன்னும் சாப்பிடவேயில்லை என்பது அவர்களுக்கு அப்போது தான் வயிறு காட்டிக் கொடுக்கத் துவங்கியிருந்தது.

அன்பு இல்லத்தின் பொறுப்பாளரைச் சந்தித்து, காமேஷ் பேசலானான்.

“மேடம்.. இன்னிக்கு மதியத்துக்கும் இரவு டிப்பனுக்கும் அன்ன பூர்ணாவிலேயே சொல்லியிருக்கேன். டைமுக்கு கொண்டு வந்துடுவாங்க.. அதில் ஏதும் ப்ராப்ளம்னா எனக்கு போன் பண்ணிச் சொல்லுங்க.. நாங்க இப்ப கிளம்பறோம்” என்று சொல்லிமுடித்து பெரியோரைப் பார்க்கச் சென்றான் காமேஷ்.

எல்லாரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு மீண்டும் காரில் செல்ல ஆயித்தமானார்கள் கலாவும் காமேஷும்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top