Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » பருவநட்சத்திரங்கள் – 2

பருவநட்சத்திரங்கள் – 2

கோயிலுக்குள் நுழைந்த கலா பயத்துடனே பிரகாரத்தைப் பார்த்தாள். இருபுறமும் ஆல மரத்தாலும் வேப்ப மரத்தாலும் சூழப்பட்டு கீழே இலைகளின் காய்ந்த சருகுகள் மண்டி மண்ணோடு மண்ணாக மட்க எத்தனித்துக் கிடந்தன. அரண்ட கலாவின் கண்களுக்கு சருகுகளும் அரவமாய் தெரிந்தன. மெல்ல திரும்பி பின்னால் பார்த்தாள் கலா. துரத்திய பாம்பு வாயிற்படியைத் தாண்டி நுழைந்து ஆக்ரோசமாய் சீறியபடி அவள் நோக்கிவந்து கொண்டிருந்தது.

கோயிலில் கற்ப கிரகம் பூட்டி யாருமில்லாமல் இருந்ததால்… கோயிலில் பின் பக்கம் நோக்கி அதிகரிக்கும் இதயத்துடிப்புடனே வேர்க்க விருவிருக்க ஓடத்துவங்கினாள் கலா. அங்கே எதிரில் அவள் கண்ட காட்சி அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கலாவின் முன்னாலும் இரண்டு கரு நாகங்கள் நாக்கை துருத்தியபடி ஆவேசமாய் வர, பின்னாலும் துரத்திய கட்டுவிரியன் கிட்ட நெருங்க…. செய்வதறியாது….

கலா பயத்தின் உச்சத்திற்கே சென்று “வீல்” என்று கத்தியபடி பதறி கண்விழிக்கவும், “ட்ரிங்!!!!” என்ற அலரலுடன் அலாரம் அடித்து காலை 4 மணியை அறிவிக்கவும் சரியாய் இருந்தது.

அலாரத்தின் ஓசையை விட கலாவின் கூவல் தான் பெரிதாக விழுந்தது காமேஷின் காதில். திடுக்கிட்டு எழுந்தான் காமேஷ்.

பயமும் வியர்வையும் வழிய மலங்க மலங்க விழிக்கும் கலாவைப் பார்த்து, கெட்ட கனவு ஏதும் கண்டிருப்பாள் என்று ஊகித்து, அருகில் இருக்கும் சொம்பிலிருந்து தண்ணீர் எடுத்து டம்ளரில் ஊற்றி, “ஒன்னுமில்ல டா… கனவு கண்டிருப்பே.. இந்தா தண்ணிய குடி கலா!!”

“என்னங்க… பாம்பு வந்திச்சிங்க.. என்னை துரத்தி துரத்தி கடிக்க வந்திச்சிங்க…!” கனவின் தாக்கத்திலிருந்து முழுதும் விடுபடாமல் நடுங்கும் குரலில் சொன்னாள் கலா.

அவளை அப்படியே தோளில் சாய்த்து, ஆறுதலாய் தலை கோதி, “ஒன்னுமில்லைடா.. நேத்து நைட் டிஸ்கவரில பாம்பு பத்தின டாக்குமெண்ட்ரி பார்த்தோமே…!! அதான்..கனவில வந்திருக்கு…!! பயப்பட ஒன்னுமில்லை கலா. எல்லாம் பிரமை தான்.. அதான் இரவு நல்ல விசயங்களை பார்த்துட்டு தூங்கனும்னு சொல்வேனே அடிக்கடி… நீ தான் கேக்கவேமாட்ட…”

“சரிங்க.. இனி அப்படியே செய்யறேன்..” என்று கலா நடுக்கம் குறைந்து நார்மல் அடைந்தாள்.

எழுந்து கிளம்பி, கலா வெளிர் ஊதா நிற பட்டுப்புடவையிலும் காமேஷ் மெருன் கலர் சட்டை மற்றும் சந்தன கலர் பட்டு வேட்டியுமாக காலை 6 மணிக்கே இருவரும் முதலில் மருதமலைக்கு சென்றார்கள். அவர்கள் இருந்த வடவள்ளிக்கு மிக அருகில் இருந்தது மருதமலை முருகன் கோயில். கோவையின் விசேசமான சுற்றுலா தளங்களில் முதன்மையானது.

மருதமலையின் அழகிய வனப்பில் முருகனின் அருளை விசேச வழியில் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவிட்டு அங்குள்ள திட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டனர் கலாவும் காமேஷும்.

மலையின் அழகை ரசித்துக் கொண்டு அமர்ந்திருந்த காமேஷின் மௌனத்தைக் கலைக்க முயன்றால் கலா. “என்னங்க…என்னங்க… இங்க பாருங்க… இந்த புடவை எனக்கு எப்படியிருக்கு? நீங்க நேத்து வாங்கி கொடுத்தது தான்.. ஆனால் ஒன்னுமே சொல்லாம இருக்கீங்களே??” செல்ல கோபத்தில் சிணுங்கினாள் கலா.

“அடடா… அதை சொல்லாம விட்டுட்டேனா?? என் கலாகுட்டி இந்த பட்டு புடவைல சும்மா தேவதை மாதிரி இருக்கே.. என் கண்ணே பட்டுடும்… வீட்டுக்கு போனதும் திருஷ்டி சுத்தி போடனும்..” என்று காமேஷ் ஐஸாய் உருகினான்.

கலா, “போங்க… ரொம்ப ஓவரா தான் பொய் சொல்றீங்க…இன்னிக்கி…!” வெட்கப்பட்டு, சிவந்தது மேலும் கலாவின் ரோஸ் நிற கன்னங்கள்.

“இப்படி பேசி… கேட்கவந்ததையே மறக்க வச்சிட்டீங்களே?? சரி…. இப்பவே மணி 8.. எப்ப போயி அன்பு முதியோர் இல்லத்தை பார்த்து உணவு வழங்கறது??”

“ஒன்னும் பிரச்சனை இல்ல கலா… நான் நேத்தே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்…அன்னாபூர்ணாவிலிருந்து காலை டிபன், மதிய சாதம், இரவு டிபன் எல்லாம் ரெடியா டைமுக்கு அன்பு முதியோர் இல்லத்துக்கு போயிடும். நாம் அங்கு போயி சேருவதற்குள் அங்கு காலை உணவு ரெடியா இருக்கும். சரி.. 10 மணிக்குள்ள வரேன்னு சொல்லியிருக்கேன். இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும் கலா.. கிளம்புவோமா??”

“சரிங்க…கிளம்புவோம்..!” எழுந்து கையில் கொண்டு வந்த டிஜிடல் கேமிராவில் அரசமரத்து பிள்ளையாரின் அருகில் நின்று இருவரும் வேறு ஒருவரை புகைப்படம் எடுக்கச் சொல்லி கிளம்பினர்.

படியிறங்கிய படியே கலா, “இப்ப தாங்க.. மனசு நிம்மதியா இருக்கு.. நம்ம கல்யாண நாளும் அதுவுமா… அரவத்தை கனவில் பார்த்து ரொம்பவே அப்சட் ஆயிட்டேன். இங்கு முருகரிடம் எல்லாம் சொல்லி முறையிட்டு மனசு நிம்மதியா இருக்கு.”

“நீ மனச போட்டு வீணா குழப்பிக்கற..! நான் தான் குத்துக் கல்லு மாதிரி கூடவே இருக்கேனே?? என்னை நினைக்காம கனவில வந்ததையே நினைக்கிறயே…?? உண்மைய சொல்லுடா.. கனவுல வந்தது நடிகர் ப்ரித்விராஜ் தானே??” என்று சீண்டி வம்புக்கிழுத்தான் காமேஷ்.

“ச்சீ போங்க…கனவில ப்ரித்வி வந்தா…. பயந்தா எழுவேன்..” என்று கண்ணடித்தாள் கலா….!

“அடிப்பாவி…. இரு இரு உன்னை வீட்டில் போயி கவனிச்சிக்கிறேன்” என்று செல்ல கோபத்தோடு கீழே இறங்கியபடி இருந்தான் காமேஷ்.

காரில் ஏறி நேரே “அன்பு இல்லம்” நோக்கி பயணித்தனர் கலா-காமேஷ் தம்பதிகள்.

கார் சக்தி ரோட்டை அடைந்தது. மிகுந்த ஜன நெருக்கடி அதிகம் உள்ள கணபதியின் பிரதான பேருந்து நிறுத்தத்தை தாண்டி மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது.

சிவானந்த மில்லுக்கு அடுத்து சில மைல் தொலைவில் இருந்தது “அன்பு முதியோர் இல்லம்”.

வாசலில் காரை நிறுத்தி, இருவரும் இறங்கி உள்ளே சென்றனர். அன்புடன், அங்கிருக்கும் கதவுக்காவலர் இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். உள்ளே நுழைந்து வலது புறத்தில் இருக்கும் அலுவலக அறை நோக்கி நடந்தனர்.

“வாங்க வாங்க.. உட்காருங்க!! உங்களுக்கு தான் போன் செய்யலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். நிறைய பேரு… வேலை பிசில இங்கு சொன்னதையே மறந்திடுவாங்க.. அவங்களுக்கு ரிமைன் பண்ணுவது வழக்கம். பரவாயில்லை.. நியாபகமா வந்திட்டீங்க..!! ரொம்ப சந்தோசம்” என்று கூறினார் அன்பு இல்லத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்மணி.

“காலையில் டிபன் வந்திடுச்சாங்க மேடம்??” இது காமேஷ்.

“எல்லாம் கொஞ்ச முன்னாடி தான் வந்துதுங்க.. நீங்க வெயிட் பண்ணுங்க… பெரியவங்க… குளிச்சி பிரேயர் பண்ணிட்டு இருக்காங்க.. இன்னும் 10 நிமிசத்தில் நீங்களே உங்க கையால அவங்களுக்கு உணவு பரிமாறலாம். நீங்க விரும்பினா..!” என்று சொல்லி முடித்து எழுந்து முதியோர் இருக்கும் பிரேயர் ஹாலுக்குச் சென்றாள்.

கலா சுற்றியிருக்கும் சுவர்களில் சிரிக்கும் முதியவர்களின் குரூப் புகைப்படங்களைப் பார்த்த வண்ணமே இருந்தவள், ஒரு படத்தைப் பார்த்ததும், “என்னங்க…!! இங்க பாருங்க… நம்ம அப்துல் கலாம் வந்து இங்கு அடிக்கல் நாட்டி கட்டிடம் எழுப்ப உதவியிருக்கார்” என்று சொல்லி வியந்தாள் கலா.
காமேஷ் பார்த்து, “ஆமாம் கலா.. எனக்கு இந்த இல்லம் பல வருடமாய் தெரியும். என் நண்பர் தான் இந்த இல்லத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒருவர்.” என்று சொல்லி காமேஷ் முடிக்கவும், அந்த பெண்மணி அவர்களை ப்ரேயர் ஹாலுக்கு அழைக்கவும் சரியாய் இருந்தது.

இவர்கள் சென்றதும், அந்த பெண்மணி எல்லார் முன்னிலையிலும் மைக்கில் இவர்களைப் பற்றியும், இன்று இவர்கள் தான் முதியவர்களுக்கு உணவு வழங்கப்போவதையும் சொல்லி இவர்களின் சுகமான நீண்ட வாழ்வுக்கு பிராத்தனை செய்யச் சொன்னார். அனைவரும் கண்களில் கண்ணீர் மல்க இறைவனை வேண்டி அவர்களுக்கான பாடலை பாடுவதைப் பார்த்து கலா – காமேஷ் கண்களிலிருந்து கண்ணீரும் வந்து எட்டிப் பார்த்துச் சென்றது.

ஒரு மடைதிறந்து புது வெள்ளம் பாயும் காய்ந்த பூமி போல, மனமெல்லாம் புது மின்சாரம் பாய்ந்தது இருவருக்கும்.. இதுவரை புரிந்திராத ஒரு உணர்வு அவர்களை ஆட்கொண்டு கண்கள் கலங்கி அமர்ந்திருந்தனர் முன்னால் இருக்கும் பெரியவர்களைப் பார்த்த படியே..!!

30 முதிய பாட்டிகளும், 35 முதிய பெரியவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து கண்கள் மூடி கைகள் கூப்பி பிராத்தனை செய்யும் காட்சி மனத்தை உருக வைத்தது.

பிராத்தனை முடிந்ததும், காமேஷை பேச அழைத்தார் இல்லத்தின் பொறுப்பாளரான அந்த பெண்மணி. உள்ளம் முழுக்க சுனாமி மென்மையாய் தாக்க, கண்களில் மழைச்சாரல் வர.. எப்படி வார்த்தை வரும் நீந்தி அதில்?? வார்த்தை வர இயலாமல்… பேசவில்லை என்று தலையசைத்து சொல்லி எழுந்து காலை உணவு பரிமாற விழைந்தார்கள்.

முதியவர்களுக்கு ஆப்பிள் பழத்தைத் துண்டுகளாக்கி, அதையும் மிச்சரையும் கலாவும் காமேஷும் வரிசையாய் கொடுத்த படியே வந்தனர்.

உணவு பரிமாற ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் ஏற்கனவே..! மிச்சரையும் பழங்கள் கொடுத்து, இருவரும் ஒவ்வொரு முதியவரிடத்தும் ஆசி வாங்கினர்.

வரிசையாய் கொடுத்துவருகையில், ஒருவரைப் பார்த்து கலா அதிர்ந்து சிலையானாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top