Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 43
இரண்டாம் தேனிலவு – 43

இரண்டாம் தேனிலவு – 43

அமுதாவும் குணசீலனும் தங்கியிருந்த லாட்ஜ் அறையில் சிறிதுநேரத்துக்கு மவுனமே நிலவியது. அந்த மவுனத்தை கலைத்துக் கொண்டு கத்தியது காலிங்பெல். வெளியில் சென்ற குணசீலன்தான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்கிற கணிப்போடு, கேமராவில் தன்னைப் பதிவு செய்தாள் அமுதா. திடீரென்று என்ன நினைத்தாளோ, கதவைத் திறப்பதற்காகச் சென்றவள், ஷெல்ஃப் கண்ணாடி அருகில் வந்து நின்றாள்.

அவளது முகம் அந்தக் கண்ணாடியில் எந்த அளவுக்கு க்ளோஸ்-அப் காட்சியாக தெரிந்ததோ, அதே அளவுக்குக் கேமராவின் கண்களிலும் பதிவாகி இருந்தது.தான் அழும் ஓசை வெளியில் யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக பாத்ரூமில் இருந்து கொண்டு அழுததால் முகம் முழுக்க பரவியிருந்த கண்ணீர்க் கறையைக் கர்ச்சிப்பால் துடைத்து அப்புறப்படுத்தினாள். அப்படியும், சோகக் கறை போகவில்லை, அவள் முகத்தில் இருந்து… பக்கத்தில் இருந்த இசட் முகப்பவுடரை முகத்தில் மேலோட்டமாக அப்ளை செய்து கொண்டு, மறுபடியும் கதவு பக்கம் போனாள்.

அமுதா எதிர்பார்த்தது போலவே குணசீலனே வந்திருந்தான். காலையில் சாப்பிடுவதற்குத் தேவையான டிபனை வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

“இன்னிக்கு என்னவோ தெரியல, ஹோட்டல்ல நிறைய கூட்டம். அதனால, இவ்ளோ லேட் ஆயிடுச்சு. நிறையபேர் டிஃபன் ஆர்டர் கேட்டு கியூவுல நின்னதால நான் அங்கேயே சாப்பிட்டுட்டேன். உனக்கு மட்டும்தான் வாங்கி வந்திருக்கேன். சாப்பிட்டுக்கோ!” என்றான் குணசீலன்.

ஆனால், அமுதாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“அமுதா உனக்கு என்ன ஆயிற்று? அமைதியாகவே இருக்க? டிபன் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு, இவ்ளோ லேட்டா வந்துட்டானேன்னு கோபமா?”

அமுதாவிடம் மறுபடியும் மவுனம்தான்.

அப்போதுதான் தனது லேப்-டாப்பைக் கவனித்தான் குணசீலன். அந்த மடிக்கணினி திரையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அவனது ஃபேஸ்புக் பக்கம் பளிச்சிட்டது. அதில், அவன் பதிவேற்றம் செய்த அமுதாவின் கவர்ச்சியான படங்களும் தெரிந்தன.

நடந்த எல்லாம் குணசீலனுக்குப் புரிந்து விட்டது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அமுதாவின் கவர்ச்சியான படங்களை வெளியிட்டது அவளுக்கு தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தவன், அமுதா பக்கம் திரும்பினான்.

“என்ன அமுதா… இதுக்குப் போயா மூஞ்ச உம்முன்னு வெச்சிட்டு இருக்க? நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்கற படத்தைதானே ஃபேஸ்புக்ல வெளியிட்டேன். உன்னோட அழகை பாராட்டி இதுவரைக்கும் 100 பேருக்கு மேலே கமென்ட் போட்டு இருக்காங்க. நீ எனக்கு மனைவியா கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்னு எல்லோரும் சொல்றாங்க.”

“உங்களுக்கு வேணும்னா நான் அதிர்ஷ்டமாத் தெரியலாம். என்னைப் பொருத்தவரை நீங்க எனக்கு புருஷனா வாய்ச்சது துரதிர்ஷ்டம்தான்!” என்று சொன்ன அமுதா, அடக்கி வைத்திருந்த அழுகையைப் பொசுக்கென்று வெளிப்படுத்தி விட்டாள்.

“ஏ…ஏய்..! அழதே… அமுதா..! ஃபேஸ்புக்ல என்னோட ப்ரெண்ட்ஸ்ங்க போட்டு இருக்கற கமென்ட்டை பார்த்து நீ பெருமைப்படுவன்னு நினைச்சேன். ஆனா, நீ சீரியஸா அழுற! இதுவரைக்கும் தள்ளிப் போன நம்மளோட ஹனிமூனை இன்னிக்குப் பகல்ல எப்படியாவது கொண்டாடிடனும்னு நினைச்சு எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா? ஆனா நீ, எப்போதும்போல அழுதுட்டே இருக்க.”

“நான் எப்போதும் அழுதுட்டே இருக்கறதுக்கு காரணமும் நீங்கதான். உங்க மனசுக்குள்ள என்னப் பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியல. என்னை உங்களோட மனைவியா பார்க்கறதை விட, ஓர் ஆண், விபச்சாரப் பெண்ணை எப்படிப் பார்ப்பானோ… அப்படி பார்க்கற மாதிரிதான் எனக்குத் தோணுது.”

“அப்படியெல்லாம் சொல்லாத அமுதா. நீ என் ஒய்ஃப். அந்த உரிமையிலதான் நான் உன்கிட்ட பேசுறேன், நடந்துக்கறேன்.”

குணசீலன் இப்படிச் சொன்னதும், அவனது லேப்-டாப் அருகில் சென்ற அமுதா, அதன் திரையில் தெரிந்த தனது படத்தை கிளிக் செய்தாள். அந்தப் படம் இன்னும் பெரியதாக ஓப்பன் ஆகியது.

ஊட்டி ரோஸ் கார்டனில் எடுக்கப்பட்ட படம் அது. அங்கிருந்த ரோஜா செடி அருகே அமுதாவை, இன்னும் குனி… இன்னும் குனி… என்று குணசீலன் சொல்லிச் சொல்லி எடுத்த படம் அது. குணசீலனின் வற்புறுத்தலின்பேரில் அமுதா அணிந்திருந்த இறுக்கமான டி&ஷர்ட்டின் இறுக்கத்துடன் போராட முடியாமல் வெளியேறும் முயற்சியில் இருந்தன அவளது மார்பகங்கள். அதுபோன்ற அமுதாவின் கவர்ச்சியான போட்டோக்களைத்தான் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தான் குணசீலன். அந்தப் படங்களைப் பார்த்து, கிறங்கிப் போய்த்தான் அவனது நண்பர்கள் பலவாறு கமென்ட் போட்டிருந்தார்கள். சிலர் இன்னும் திறந்த மனதாக, “உன் ஒய்ஃபுக்கு பெரிய ச்செஸ்ட்டுடா; ரொம்ப அழகா, கவர்ச்சியா இருக்கு” என்றெல்லாம் எழுதியிருந்தனர்.

அதையெல்லாம் சுட்டிக்காட்டிய அமுதா, “எந்தவொரு புருஷனும் தன்னோட மனைவி போட்டோவ இப்படி ஊர் உலகத்துக்கெல்லாம் போட்டுக் காட்ட மாட்டான். தன்னோட மனைவியை மாடர்ன் ட்ரெஸ்ல கவர்ச்சியாப் பார்க்க ஆசைப்பட்டா, அந்த ட்ரெஸ்ஸை வீட்டுக்குள்ளதான் போடச் சொல்வான். நீயும் இருக்கீயே… இவள் கிராமத்துல பொறந்து வளர்ந்த பொண்ணாச்சே… அவளை இப்படியெல்லாம் ஜீன்ஸ்லயும், டி-ஷர்ட்லயும் நிக்க வெச்சு, கேவலமா போட்டோ எடுக்குறோமேங்கற உறுத்துதல் கொஞ்சம்கூட இல்லாத நீயெல்லாம் எனக்கு புருஷனா இருக்க முடியாது. அதுக்கான தகுதி உனக்கு இல்லவே இல்ல. இன்னிக்கு இப்போ நான் முடிவு பண்ணிட்டேன். இனி, நான் உன்கூட வாழ மாட்டேன். தயவு செய்து என்னைவிட்டுடு.

என் போட்டோக்களை எல்லாம் இப்படி இன்டர்நெட்ல போட்டு கேவலப்படுத்தாத. நீ வளர்ந்த கல்ச்சர்ல உனக்கு இது சாதாரணமா இருக்கலாம். ஆனா, நான் அப்படி கிடையாது. மானம் போகும்னா அதுக்காக உயிரையே கொடுக்கத் தயங்காத கிராமத்துல பொறந்த பொண்ணு நான். அதனாலதான் சொல்றேன்; எனக்கு இனி, நீ வேண்டவே வேண்டாம். நீ என் கழுத்துல தாலி கட்டுன ஒரே காரணத்துக்காகத்தான் இவ்வளவு நாளும் நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தேன். தாலி கட்டுன பொண்டாட்டிய வீதியில அலங்கோலமா வீட்டு ரசிக்க நினைக்கற உன்னோட நினைப்புல இவ்வளவு நாள் நான் இருந்ததே உனக்கு அதிர்ஷ்டம்தான்…”எங்கிருந்து வந்தன என்று தெரியாமல், வார்த்தைகளை அள்ளித் தெளித்து குணசீலனை நிலைகுலையச் செய்துவிட்டாள் அமுதா. அவள், இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

அதனால், அமுதாவே எதிர்பார்க்காத அந்த முடிவுக்கு சட்டென்று வந்துவிட்டான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top