Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 42
இரண்டாம் தேனிலவு – 42

இரண்டாம் தேனிலவு – 42

ஊட்டி காவல் நிலையத்தில் அன்றைய தினம் வழக்கத்துக்கு மாறாக ஒருவித சோக அலை அடித்துக் கொண்டிருந்தது. எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆனந்தும் அமுதாவும் பல மாதங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், பார்க்க முடியாமல் திணறினார்கள். தலை கவிழ்ந்திருந்த இருவரது கண்களில் இருந்தும் எக்குதப்பாய் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

“அரை மணி நேரம் ஆச்சு. நீங்க ரெண்டு பேருமே இப்படி பேசாம அமைதியா இருந்தா, நாங்க எப்படி விசாரணை பண்ண முடியும். உங்களோட இந்த மவுனத்தால நாங்க வேற ஒரு முடிவு எடுத்து இருக்கோம். இந்த அறையில இன்னிக்கு முழுக்க நீங்க ரெண்டு பேரும் மட்டும்தான் இருக்கப் போறீங்க. முதல்ல நீங்க ரெண்டு பேரும் மனம்விட்டு பேசுங்க. நாங்க விசாரணைக்கு ஓ.கே-ன்னு நீங்க சொன்ன பிறகு நாங்க உள்ளே வர்றோம்” – இப்படிச் சொல்லிவிட்டு, சக போலீஸாரை அழைத்துக் கொண்டு வெளியேறினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

இப்போது அந்தக் காவல் நிலைய அறையில் ஆனந்தும் அமுதாவும் மாத்திரமே இருந்தனர். நீண்ட நேரம் மவுனத்துக்குப் பிறகு இருவரும் நேருக்குநேராகப் பார்க்க முயற்சித்தனர். ஆனாலும், அவர்களுக்குள் ஏதோ ஒன்று புகுந்து கொண்டு தலைநிமிர விடாமல் தடுத்தது. இரண்டு பேருக்குள்ளுமே குற்ற உணர்ச்சி! “அன்னிக்கு மட்டும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அமுதாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்தி, அவளையே கல்யாணம் பண்ணி இருந்தா… இப்படியொரு துர்பாக்கிய நிலை அவளுக்கு வந்திருக்காதே…” என்று ஆனந்த் மனதுக்குள் குமுற… “என்னை முழுசா புரிஞ்சிக்கிட்ட ஆனந்த்தான் எனக்கு வேணும்னு அன்னிக்கு உறுதியா இருந்திருந்தா, நம்ம வாழ்க்கையும் இப்படி ஆகி, என்னையே உயிருக்கு உயிரா காதலிச்சு, வாழ்க்கையில தோத்துப் போயிட்டதா நினைச்சுட்டு வாழ்ற இந்த ஆனந்த்க்கு அப்படியொரு நிலை வந்திருக்காதேன்”னு மனதுக்குள் விம்மி விம்மி அழுதாள் அமுதா.

எவ்வளவு நேரம் இருவரும் அழுது தீர்ப்பது? நேருக்கு நேராகப் பேசும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, சோகம் அப்பிய முகத்தோடு இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர்.

பல மாதங்களுக்குப் பிறகான அவர்களின் பார்வை மோதலில் எப்போதும் இல்லாத உணர்ச்சிகள் சுனாமியாய்ப் பொங்கியெழுந்தன. வார்த்தைகள் எங்கோ ஓடிப்போய் ஒழிந்து கொண்டன. நா வறண்டு போனது. தொண்டைக்குழிக்கு மேலே எந்த உணர்ச்சியும் இல்லை. அழுகை மாத்திரமே ஆக்ரோஷமாய் வெடித்துக் கொண்டு வந்தது. குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். அவர்களின் அழுகை, காவல் நிலையத்தின் கான்கிரீட் கூரையையும் பிய்த்துக் கொண்டு வெளியே வந்து விழுந்தது.

பாவம்… அவர்கள்! மனதுக்குள் தேக்கி வைத்த சோகங்களை அழுதாவது கரைக்கட்டும் என்று மனதுக்குள் நினைத்து, அமைதியாகவே இருக்கையில் இருந்து கொண்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

மறுபடியும் அரை மணி நேரம் ஓடியிருக்கும். அழுது அழுது ஓய்ந்து போனவர்கள், ஒருவர் மீது ஒருவர் ஆறுதல் பார்வை வீசி நெருங்கி வந்தனர். ஓடிவந்து கதறியபடி கட்டிப்பிடித்து இன்னும் இன்னும் அழ வேண்டும் என்பது போல் இருந்தது, இருவருக்கும்! ஆனால், அமுதாவின் கழுத்தில் ஆதரவின்றி தொங்கிக் கொண்டிருந்த தாலி என்னும் வேலி அவர்களை பிரித்து வைத்தது. உள்ளங்கைகளை முடிந்த மட்டும் இறுக மூடிக்கொண்டாள் அமுதா. ஆனந்தோ, காவல் நிலையத்தின் சுவரில் சாய்ந்து கொண்டு, இரு கைகளாலும் சுவற்றில் குத்தி, உணர்ச்சிகளை விரட்டியடிக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருந்தான்.

அந்த நேரம் –

யாரோ அறையின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. போலீஸார் யாரும் வரவில்லை. கலங்கிய கண்களுடன் வந்து நின்றாள் ஷ்ரவ்யா.

ஆனந்தையும் அமுதாவையும் மாறிமாறி பார்த்தவள், ஆனந்த் அருகில் வந்தாள். அவனுக்கு மிக நெருக்கமாக நின்று கொண்டு, கவிழ்ந்து கிடந்த அவனது தலையை நிமிர்த்த முயன்றாள். பலமான முயற்சிக்குப் பிறகே அவளுக்கு வளைந்து கொடுத்தான் ஆனந்த்.

ஒரு மணி நேர அழுகையில் அவன் கண்களும் கன்னமும் வீங்கிப் போய் இருந்தன. தொடர்ச்சியான வெளியேற்றல் காரணமாக வறண்டு போன அவனது கண்களின் கண்ணீர் குளம், பாலைவனமாய் வறண்டு கிடந்தது. கண்ணீரை தொலைத்த அந்தக் கண்களில் ஆறுதலாய் தனது விரல்களால் வருடி விட்டவள், அடுத்ததாக அமுதா பக்கம் வந்தாள்.

இப்போதுதான் அமுதாவை முதன் முதலாக நேருக்கு நேராகப் பார்க்கிறாள் ஷ்ரவ்யா. அவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் அவள் அழகியாகவே இருந்தாள். அவளை ஆதரவாய் ஷ்ரவ்யா பார்க்க… அவளைக் கட்டிப் பிடித்துக் கதறினாள் அமுதா. ஷ்ரவ்யாவின் ஆறுதல் பேச்சுக்களுக்கு நீண்ட நேரத்துக்குப் பிறகே பலன் கிடைத்தது. ஆனந்தும் அமுதாவும் பேசுவதற்கு தயார்படுத்தப்பட்டார்கள்.

ஆனால், அதற்குள் போலீஸ் விசாரணை குறுக்கே புகுந்துவிட்டது. வெகுநேரம் வெளியே காத்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், லேப்-டாப் சகிதமாக அறைக்குள் வந்தார்.

அங்கிருந்த மேஜையில் லேப்-டாப்பை வைத்தவர், அந்த வீடியோக் காட்சிகளை மறுபடியும் ஓடவிட ஆயத்தமானார். விசம் என்று நினைத்து தேனை பெப்சி பாட்டிலுக்குள் ஊற்றிவிட்டு ஆனந்த் வெளியேறிய காட்சிக்குப் பிறகு பதிவானவை ஒளிபரப்பாயின.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top