Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பயிர் வட்டம் (Crop Circle) – 1

பயிர் வட்டம் (Crop Circle) – 1

‘மிஸ்டரி’ என்பது இரண்டு பக்கங்களைக் கொண்ட ஒரு நாணயம் போன்றது. அதன் ஒரு பக்கம், அறிவியலால் விளக்க முடியாத மர்ம முடிச்சுகளைக் கொண்டது. அடுத்த பக்கம், ‘சே! இதெல்லாம் ஏமாற்று வேலை. இப்படி எதுவும் இல்லை’ என்ற மறுதலிப்பைக் கொண்டது. எப்போதும் இந்த இரு பக்கங்களும் இல்லாமல், சரி சமமாக நிற்கும் நிலைக்குத்து நிலையில் இந்த நாணயம் நிற்பதே இல்லை. கடவுளை நம்புபவர்கள் எப்படி அதில் நம்பிக்கையுடன் இருப்பார்களோ, அப்படி ஒரு பக்கத்தினரும், கடவுளை மறுப்பவர்கள் எப்படி வன்மையாக மறுப்பார்களோ, அப்படி அடுத்தவர்களும் இருப்பார்கள். இப்படியான தன்மையுடைய மிஸ்டரி சம்பவங்களையே நாம் இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். நான் எழுதப் போகும் அனைத்தும் உங்களால் நம்ப முடியாதவையாகவே இருக்கும். ஆனால் ஒரு நேரத்தில் நம்ப வேண்டிய கட்டாயங்கள் உங்களுக்கு வந்தே தீரும். இவற்றை நீங்கள் நம்ப வேண்டும், நம்பாமல் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இப்படியெல்லாம் உலகில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியப்படுத்துவதே என் முதல் நோக்கமாக இருக்கிறது. இனி தொடருக்குப் போகலாமா….?

கீழே இருக்கும் படத்தில் காணப்படும் சித்திரம் நிச்சயமாகக் கம்பளம் கிடையாது. அது காகிதத்தில் வரையப்பட்ட சித்திரமும் கிடையாது. ஆனால் அது ஒரு வரையப்பட்ட சித்திரமேதான். எங்கே? எப்படி? யாரால்? அது வரையப்பட்டது என்பதுதான் இங்கு நம் விழிகளை விரியச் செய்யப் போகும் ஆச்சரியமாக இருக்கப் போகிறது. அது என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், தென்மேற்கு இங்கிலாந்தில் (South West England) அமைந்துள்ள ‘வைல்ட்ஷையர்’ (Wiltshire) என்னுமிடத்தில் வசிக்கும் ‘டோனி ஹ்யூஜெஸ்’ (Tony Huges) என்னும் விமானிக்கு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது.

டோனி ஹ்யூஜெஸ் என்பவர் ‘மிக இலகு விமானம்’ (Microlight flight) ஒன்றின் மூலம்,

p3

வைல்ட்ஷயரில் உள்ள வயல் நிலங்களுக்கு மேலாக விமானத்தில், ஒரு கோடியில் இருந்து மறு கோடிக்குப் பறந்து சென்றார். இப்படி வயல் வெளிகளின் மேலாகத் தினமும் பறந்து செல்வது அவரின் வழக்கங்களில் ஒன்று. மறு கோடிக்குப் பறந்து சென்ற டோனி, விமானத்தைத் திருப்பி, வந்த இடத்துக்கே செலுத்திக் கொண்டிருந்த போது, அவர் வயல்வெளியில் கண்ட காட்சி அவரைத் திடுக்கிட வைத்தது. பத்து நிமிடங்களுக்கு முன்னர் அவர் அதே வயல்வெளியின் மேலாகப் பறந்து சென்றார். ஆனால் அதே இடத்துக்குத் திரும்பி வரும்போது அது காணப்பட்டது. “இது எப்படி சாத்தியம்?” என்று தன் வயர்லெஸ் சாதனத்தில் அலறினார். அவர் அந்த வயல்வெளியில் கண்டது என்ன தெரியுமா? மிகப் பிரமாண்டமான ஒரு சித்திரத்தை. அந்தச் சித்திரம் வயல்வெளியில் வட்டவடிவமாக வரையப்பட்டிருந்தது. எதனால் வரையப்பட்டிருந்தது என்று நினைக்கிறீர்கள்? அதுதான் இங்கு சொல்லப்படப் போகும் மர்மத்தின் ஆணிவேரே!

அந்தச் சித்திரம் வயல்வெளியில் செழித்து வளர்ந்த பயிர்களைச் சிதைக்காமல், நிலத்தில் அழுத்தி வரையப்பட்டிருந்தது. நிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக் கூடிய வகையில் வரையப்பட்ட மிகப் பிரமாண்டமான சித்திரம் அது. டோனி ஹ்யூஜெஸினால் நம்பவே முடியவில்லை. பத்து நிமிடங்களில், அதுவும் பட்டப் பகலில் அதை யார் அப்படி வரைந்திருக்க முடியும்? சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு வாகனமோ, மனித நடமாட்டமோ காணப்படவில்லை. எங்கு பார்த்தாலும் பரந்து விரிந்த வயல்வெளிப் பிரதேசம். கோதுமைப் பயிர் எங்கும் பயிரிடப்பட்டு, செழித்து வளர்ந்த அறுவடைக்கான நேரம் அது.

யார் வரைந்திருக்க முடியும்? இப்படி ஒரு பிரமாண்டமான சித்திரத்தை, ‘வரைவது’ என்று சொல்வதே தப்பு. யார் இப்படியான ஒன்றை உருவாக்கியிருக்க முடியும்? சரி, அப்படி உருவாக்கியிருந்தாலும் உருவாக்கியவர்கள் எங்கே? எப்படி மாயமாக மறைந்தார்கள்? விமானத்தில் பறந்தபடி எங்கு தேடியும் எவரையும் காணவில்லை. பத்து நிமிடங்களில் யாரும் அப்படி மறைந்து விட முடியாது. டோனி, தான் கண்டதை வயர்லெஸ் கருவி மூலமாக கன்ட்ரோல் அறையுடன் தொடர்பு கொண்டு கூறியதும், அலறியடித்து அனைவரும் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் எல்லாரையும் பிரமிப்பில் ஆழ்த்தி, மௌனமாக வயல்வெளியில் படுத்து இருந்தது அந்த வயல் சித்திரம். ‘பயிர் வட்டம்’ (Crop Circle) என்னும் பெயருடன் உலகையே இப்போது மிகப் பலமாக மிரட்டி வரும் மிஸ்டரியாக இந்தப் பயிர்ச் சித்திரங்கள் இருக்கின்றன. இந்தச் சித்திரங்களின் பிரமாண்டத்தை நீங்கள் அறிய வேண்டுமா….? அவை எவ்வளவு பெரியவை என்பது தெரிய வேண்டுமா? சரி கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.

p1

இதுவும் அதே வைல்ட்ஷையரில் உருவாக்கப்பட்ட ஒரு பயிர் வட்டம்தான்.

என்ன பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். ஒரு காகிதத்தில் கூட இப்படி வரைவது மிகக் கஷ்டமாக இருக்கும் வேளையில், மிகத் துல்லியமாகப் பயிர்களால் இப்படி உருவாக்க முடியுமா? சரி, இதன் பிரமாண்டம் உங்களுக்குப் புரிகிறதா? புரியவில்லையா? அப்படியென்றால் அந்தப் படத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். மையத்துக்குச் சற்றுக் கீழே உள்ள வெள்ளைப் பகுதியில், இரண்டு சிறிய கருப்புப் புள்ளிகள் போலத் தெரிகிறதா? அந்தப் புள்ளிகள் என்ன தெரியுமா? அவை இரண்டும் மனிதர்கள். மனிதர்கள் இவ்வளவு சிறிய புள்ளிகளாகத் தெரிய வேண்டும் என்றால், அந்தச் சித்திரத்தின் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அத்துடன் மேலே கால் பகுதியாக தந்த கம்பளம் போன்ற அமைப்புள்ள சித்திரத்தின் முழுமையான வடிவத்தையும் கீழே தருகிறேன். அதையும் பாருங்கள். அதன் பிரமாண்டமும் தெரிய வேண்டும் அல்லவா? அப்படியே மையத்துக்கு நேராகக் கீழே இருக்கும் நான்கு இதழ்கள் கொண்ட பூ வடிவத்தைப் பாருங்கள். அதிலும் ஒரு கருப்புப் புள்ளி தெரியும். அதுவும் மனிதன் என்பது புரியும்.

“இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சித்திரம். இதை ஏதோ மர்மம் என்று சொல்லி எங்களை இவர் ஏமாற்றப் பார்க்கிறார்” என்று இப்போது நீங்கள் நினைக்கும் சாத்தியம் உண்டு. நீங்கள் அப்படி நினைக்கவும் வேண்டும். சந்தேகப்படுதல் என்பதுதான் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குத் திறவுகோலாக இதுவரை இருந்திருக்கிறது. ஆனால் நாம் இதை அறிவியல் சிந்தனையுடன் அணுகும்போது, அதன் மர்மங்கள் தொடர்ச்சியாக நீண்டு கொண்டு போகின்றது. அத்தோடு, நம்மை அது தாக்கவும் தொடங்குகின்றது. அந்தத் தாக்குதல்களைத் தாங்க முடியாமல் ஒரு கணத்தில் சோர்ந்து போய், நாம் அதை நம்ப வேண்டிய சூழலுக்குள்ளாவதுடன் அதன் சுழலுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்வோம்.

அப்படி நம்மைத் தாக்கப் போகும் அந்த மர்மங்கள்தான் என்ன? அவை உங்களுக்குத் தெரிய வேண்டுமல்லவா? தெரிந்தால் நீங்கள் எப்படியான உணர்வுக்கு உள்ளாவீர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. அப்படியான அதிர்ச்சிகள் அவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top