Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » சூரிய குடும்பம் – 3

சூரிய குடும்பம் – 3

சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் ‘புளூ பிளானெட்’ என பூமி அழைக்கப் படுகின்றது. புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.

பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் –

1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் – 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் – 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் – 29.783 Km/s
4.பூமியின் சராசரி ஆரை – 6371 Km
5..துருவ ஆரை – 6356.8 Km
6.சுற்றளவு (கிடை அச்சில்) – 40 075.02 Km
7.நீள் கோள மேற்பரப்பளவு – 510 072 000 Km2
8.கனவளவு – 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9.நிறை – 5.9736 * 10 இன் வலு 24 Kg
10.சராசரி அடர்த்தி – 5.5153 g/cm3
11.மையத்திலிருந்து ஈர்ப்பு விசை – 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்பு வேகம் – 11.186 Km/s
13.சாய் கோணம் – 23.439281 பாகை
14.எதிரொளி திறன் – 0.367
15.மேற்பரப்பு வெப்பம் – 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16.வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் – 101.3 Pa
17. துணைக் கோள் – 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.

பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன. பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.

பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது. புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.

 

b2

 

 

இதுவரை பூமி பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைச் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கிரகமான புதனைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top