Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 10

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 10

இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன.

பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பு. அதே நேரத்தில் இறந்தவர் நமது மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி தனது எண்ணங்களை கனவுகள் மூலம் வெளிப்படுத்தவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்.

இறந்தவர்களை அன்புடன் நினைப்பதும் அவர்களுக்கு மறுவுலகில் நற்கதி கிடைக்க வேண்டுமென இறைவனை வேண்டுவதும் அதற்கான கிரியைகள், சடங்குகள் செய்வதும் இறந்தவரின் சூட்சும சரீரத்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் இறந்தவர்களை நினைந்து நினைந்து அழுது புலம்புவதால் அவர்களின் சூட்சும சரீரங்களில் பாதகமான அதிர்வுகள் ஏற்பட்டு அவர்களுக்கு அமைதியின்மை உண்டாகும் என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.

இறந்தவருக்கு நாம் மட்டும் தான் உறவினர்கள் நண்பர்கள் என்று நினைத்து விடுகின்றோம். மறு உலகில் நம்மைப் போலவே அவர் மீது அன்பு கொண்ட முற்பிறப்புத் தொடர்புகளாக நிறையப் பேர் இருப்பார்கள். இவ்வுலகிலகிலும் நாம் அறியாமலே பலர் இருப்பார்கள். சில மனிதரை நாம் சந்திக்கும் பொழுது அவர்கள் மீது காந்தக் கவர்ச்சி ஏற்படுவதற்கு முற்பிறப்பின் தொடர்பும் ஒரு காரணம்.

இறக்கும் பொழுது நாம் எப்படிப்பட்ட குணாம்சங்களுடன் மனநிலையுடன் வாழ்ந்தோமோ அவைகளின் பிரதிபலிப்பாகவே நமது மறு உலகம் அமைகின்றது. நாம் இறந்த பின் வாழ வேண்டிய வாழ்க்கைக்கு நாம் இங்கிருந்து கொண்டே வித்திடுகிறோம். இங்கு நாம் வாழும் பொழுது நமது சிந்தனைகள், செயல்கள், நோக்கங்கள் எல்லாம் தூய்மை உடையவையாக இருப்பின் மறு உலகம் இன்பகரமானதாக அமையும்.

அண்டத்தில் நிகழ்வுகள் அனைத்தும் பலவித சலனங்களுக்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கே உரியதான அதிர்வுகள் (சலனங்கள்) உண்டு. அவனுடைய முற்பிறப்புக் கர்மவினைகள், சிந்தனைகள், செயல்களுக்கேற்ப அவனுடைய சலனங்கள் உருவகம் அடைகின்றன. எனவே, அவனுடைய ஆத்மா உடலை விட்டுச் செல்லும் பொழுது தனக்கே உரியதான சலனங்களுடனேயே செல்கின்றன.

மறு உலகைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருப்பது இயல்பு. ஒவ்வொருவருடைய மனநிலையைப் பொறுத்தே அவரவருடைய மறுவுலக அனுபவங்கள் அமையும். மரணத்தின் மர்மங்களைப் பூரணமாக ஆய்வு செய்ய எவராலும் இயலாது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட முயற்சி இது.

எவ்வாறாயினும் எல்லா ஆய்வுகளிலும் அடிப்படைக் கருத்துக்களில் ஒற்றுமை காணப்படுகிறது. நாம் இறந்தபின் நமது ஆத்மா ஒரு சூட்சும தளத்தில் சஞ்சரிக்கின்றது. நாம் இவ்வுலகில் எத்தகைய குணாம்சங்களை உடையவர்களாக இருந்தோமோ அதற்கேற்பவே நமது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. நமது விருப்பு வெறுப்புக்களுக்குத் தொடர்பிசைவாக மறுபடியும் நாம் இவ்வுலகில் வந்து பிறக்கிறோம். இத்தத்துவங்கள் பெரும்பான்மையான ஆய்வுகளுக்கு அடிப்படையாக உள்ளன.

இறப்பின் பின்னான வாழ்வு பற்றி ஞானிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி அடுத்துப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top