Home » பொது » தமிழகத்தின் தலைமகன்!!!
தமிழகத்தின் தலைமகன்!!!

தமிழகத்தின் தலைமகன்!!!

ராஜராஜ சோழன்

தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரை பதித்த மன்னர்களுள் தலையாயவர் முதலாம் ராஜராஜன் எனப்படும் ராஜராஜ சோழன். பிற்காலச் சோழர்களில் மாபெரும் சாதனைகளைப் படைத்த இவரது ஆட்சிக்காலம்: பொதுயுகத்திற்குப் பின் (கி.பி)  985 முதல் 1012  வரை. இவரது ஆட்சிக் காலத்தில்ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம், சமயம்   ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது சோழப்பேரரசு.

சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன்.  விஜயாலய சோழன்நிறுவிய சோழப் பேரரசு இவரது ஆட்சிக் காலத்தில் மகோன்னத நிலையை அடைந்தது.

இவரது ஆட்சியின் இமாலய சாதனை தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் பெருவுடையார் கோயில். இவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழனும்  கடல் கடந்து சோழப் பேரரசை நிலைநாட்டினார்.

தஞ்சை பெரிய கோயில்

‘தஞ்சை பெரிய கோயில்’ எனப்படும் ராஜராஜேஸ்வரம் என்னும் இந்த சிவன் கோயில், தென்இந்திய வரலாற்றின்  தலைசிறந்த சின்னமாகும். தமிழ் கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. ராஜராஜனின் ஆட்சியின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. அண்மையில் இக்கோயில் அமைக்கப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டுவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சோழர்கால நீர்ப்பாசன முறை, குடவோலையால் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறை, ஆலயங்களில் திருமுறைத் தமிழ் ஓதல், நில அளவீடு-வரிவிதிப்பு   குறித்த தெளிவான வரையறைகள், வலிமையான போர்ப்படை ஆகியவையும், தஞ்சை பெரிய கோயில் போன்றே ஆச்சரியப்படத் தக்கவை. சைவ சமயம் இவரது காலத்தில் புத்தெழுச்சி பெற்றது. ஆயினும், வைணவம், புத்தம், சமண மதங்களை சமமாகப் பாவித்த மன்னர்  ராஜராஜன்.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் உடையார், சுஜாதாவின்காந்தளூர் வசந்தகுமாரன் கதை ஆகியவை, ராஜராஜனை மையமாகக் கொண்டு தமிழில் எழுந்த தற்காலத்திய புதினங்கள். முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம்  ராஜராஜனின் ஆலயம் குறித்து அரிய ஆராய்ச்சி நூலை (ராஜராஜேஸ்வரம்) எழுதி இருக்கிறார்.

தமிழகத்தின்  பொற்காலம் என்று ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தை சொல்லலாம். மொழி, கலை, இலக்கியம், வாழ்க்கைமுறை அனைத்தும் செழித்தோங்கிய அற்புதமான காலகட்டத்தை உறுதிப்படுத்திய மாமன்னர் ராஜராஜன் நினைவே நமக்கு பெருமிதம் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top