Home » பொது » ஹரிஜனங்களை அரவணைத்த மகான்
ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

ஹரிஜனங்களை அரவணைத்த மகான்

மதுரை வைத்தியநாத ஐயர்
(பிறப்பு: 1890, மே 16 – மறைவு: 1955, பிப். 23)

தமிழகத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகப் போர்க்குரல் கொடுத்தவர்களுள் தலையாயவர் மதுரை. ஏ. வைத்தியநாத ஐயர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று வழிபடச் செய்ததன் மூலமாக, இந்துமதத்தில் நிலவிய ஆலயத்திற்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்கான தடையைத் தகர்த்தவர் இவரே.

தஞ்சாவூரில் 1890, மே 16 -இல் அருணாசலம் ஐயர்- லட்சுமி அம்மாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் வைத்தியநாதன். மேற்படிப்பிற்குப் பிறகு மதுரையில் வழக்கறிஞராகப் பணி புரிந்த வைத்தியநாதன், அந்நாளைய தேசபக்தர்கள் போலவே சுதந்திரப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்டார்.

1922-இல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற அவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு தன்னை அர்ப்பணித்தார். குறிப்பாக ஹரிஜன மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கை முழுவதும் போராடினார்.

தீண்டாமையை ஒழிக்கவும் ஹரிஜனங்களின் முன்னேற்றத்திற்காகவும், அமரர் வைத்தியநாத அய்யர் ஆற்றிய பணிகள் சொல்லில் அடங்கா. 1935 முதல் 1955 வரை தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராக இருந்தார். தீண்டாமைக் கொடுமையால் துன்புற்று வந்த ஹரிஜனங்களுக்காக அயராது பாடுபட்டு வந்தார்.
பல்லாண்டுகளாக வழக்கத்திலிருந்த மரபு காரணமாக அந்நாளில் ஹரிஜனங்கள் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.

1937-ஆம் ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கத் தொடங்கிய பிறகு விரைந்து ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு வழிவகுக்கும் சட்டத்தை இயற்ற வேண்டுமென அய்யர் வலியுறுத்தி வந்தார்.

உயர் ஜாதி இந்துக்கள் இவ்விஷயத்தில் அக்கறை கொள்ளச் செய்ய பொதுக் கூட்டங்கள் நடத்தி தீவிரமாகப் பிரசாரம் செய்தார். மதுரை மீனாட்சி கோயில் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகியோரைக் கலந்து ஆலோசித்து அவர்களுடைய ஒத்துழைப்பையும் உறுதி செய்து கொண்டார்.

1939 , ஜூலை, 8-ஆம் நாள் நான்கு ஹரிஜன சகோதரர்கள் மற்றும் அந்நாளில் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்த நாடார்கள் சிலருடன் பக்தி விசுவாசத்தோடு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரவேசித்து அன்னையின் அளவிலா அருளைப் பெற்றார். தமிழக ஆலய வழிபாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது.

மேல் ஜாதியினரின் கடும் எதிர்ப்பை மீறி வைத்தியநாத ஐயர் நடத்திய இப்போராட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவு தெரிவித்தார்.

”எதிர்ப்பாளர்களின் கிளர்ச்சியை முறியடிப்போம், ஆலயப் பிரவேசத்தை வரவேற்கிறோம்” என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறிக்கை வெளியிட்டார். இது எதிர்ப்பாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

வைத்தியநாத ஐயருடன் மதுரை கோயிலுக்குள் சென்ற ஹரிஜன சகோதரர்களில் பின்னாளில் அமைச்சரான கக்கனும் ஒருவர். மகாத்மா காந்தி, இச்சம்பவத்தால் மனம் மகிழ்ந்து, 22-7-1939 ஹரிஜன இதழில் பின்வருமாறு எழுதினார்:

“இவ்வளவு விரைவில் ஆலயப் பிரவேசம் நடைபெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. தீண்டாமையை எதிர்த்து நடைபெற்று வரும் பிரசாரத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆலயப் பிரவேசம் நிகழ்ந்ததும் ஒரு பெரிய முயற்சியே. ஆனால் அங்கு அது மகாராஜாவின் விருப்பத்தைப் பொருத்து நடந்துள்ளது. மதுரையில் நடைபெற்ற ஆலயப் பிரவேசமோ பொதுமக்கள் கருத்தின் விளைவாக நிகழ்ந்த ஒன்றாகும். இவ்விஷயத்தில் பொதுமக்கள் கருத்தை உருவாக்க அயராது பாடுபட்ட வைத்தியநாத அய்யர் மற்றும் அவரது சக ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்”.

1930-இல் நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்திலும், 1942-இல் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் வைத்தியநாத ஐயர் பங்கேற்றார். நாட்டின் களங்கத்தைத் துடைத்த பெரியோரான மதுரை வைத்தியநாத ஐயர் 1955, பிப். 23-இல் மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top